நிழல் விளையாட்டு

மூன்று கவிதைகள்

- Advertisement -

(1) நிழல் விளையாட்டு

எனக்குள் இருக்கிறேன்…
ஒளியுமிழும் பால்வெளி…
காற்றாய் நடக்கிறேன்
பறவையாய் பறக்கிறேன்
வானவில்லில் ஏறி வலம்வருகிறேன்
தூரத்து பனிச்சிகரங்களில்
நடை பயில்கிறேன்
சமுத்ரங்கள் என்னை
அலைகளிட்டு தூரியாட்டுகின்றன
எங்கும் வண்ணமலர்த் தோட்டங்கள்
எங்கும் கனிகளின் கனிந்த வாசனை
பசியெடுக்கிறது
மெல்ல எழுகிறேன்
என் காயங்களில் குடை விரித்து வைக்கப்பட்டிருக்கிறது
என் கனவுகளில் பிணங்களை குதறிய அலகுடன் கழுகு அமர்ந்திருக்கிறது.
உலர்ந்த நிலங்களின் வெட்கையினூடாக போய்க் கொண்டிருக்கிறேன்.
கறுத்துக் கொண்டிருக்கிறது உலகம்.

– வசந்ததீபன்

??????????????????????????

(2) பாவை பாசுரம்

பல்லவி

யசோதரா பைத்தியமாகி விட்டாள்
ஊர்மிளா நோய்ப் படுக்கையில் கிடக்கிறாள்
சீதை பூமிக்குள் போய் விட்டாள்
பாஞ்சாலி 5 கணவர்களுக்கு
சோறாக்கிக் கொண்டிருக்கிறாள்
நளாயினி குஷ்டரோகிக் கணவனின்
புண்களைக் கழுவி மருந்திடுகிறாள்.

அனுபல்லவி

இன்னும்.. இன்னும்..
புராண இதிகாசப் பெண்கள்
இங்கு
இம்ஸைகளிலும்
சித்திரவதைகளிலும்
எரிந்து கொண்டிருக்கிறார்கள்.

அதில்
பீடி பற்ற வைக்கிறது
ஆண்திமிர்.

சரணம்

காலம்
இப்படியாகவே…
சொக்கப்பனைகள் கொளுத்துவதை
வேடிக்கை
பார்த்துக் கொண்டே போகிறது.

– வசந்ததீபன்

??????????????????????????

(3) வண்ணத்துப்பூச்சிகள் வருகை

புறாவுக்கு
புலியின் நகங்கள் முளைத்ததோ?
பூக்களும்
ரத்தம் சிந்துதே.
அரிவாள்களும், தீவட்டிகளும்
ஆங்காரத்தோடும், ஆவேசத்தோடும்
தேசமெங்கும்
ஆர்பரித்து
அலைகின்றன.
மனிதக் குருதி ருசிக்க
நாக்கைச் சுழற்றியபடி
காலிகள் காலம்
கொக்கின் கவனத்தோடு
காத்திருக்கிறது.
அச்சுறுத்தும் வேதனையை
அறுத்துப் போடு..
துக்கம் விழுங்கித் தவிக்கும்
நரக வாழ்க்கை
வெடித்து நொறுங்கட்டும்…
பூ பூக்காத இருதயங்கள்
பொசுங்கிப் புகட்டும்…
காட்டு விலங்குகளின்
கண்களைப் போன்று
எரியும் ஆன்மாக்கள் யாவும்
பனி மழையில் நனையட்டும்.
வெட்டுக்கள் நிறைந்த முகங்கள் எல்லாம்
நிழல்களின் ஊஞ்சலில்
ஓய்வெடுத்து
ஆறுதலடையட்டும்.
அழகான
அமைதியான
ஆனந்த.
உலகை நிர்மாணிக்க…
வர்ணங்களற்ற
வண்ணத்துப்பூச்சிகள்
பறந்து வரும்..
மனசுகள் பூக்கும் நாள்
மிகு அருகில்.

– வசந்ததீபன்

??????????????????????????

- கட்டுரைப்போட்டி முடிவுகள் -
வசந்ததீபன்
வசந்ததீபன்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்தவர். தற்சமயம் சென்னை கூடுவாஞ்சேரியில் இருக்கிறார். ஹிந்தியில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார். மணிப்பூரில் நாகா மலைவாழ் மக்கள் பள்ளியில் ஏழு வருடங்கள் வேலை பார்த்தார். நீண்ட காலங்களாக கவிதைகள் , கதைகள் எழுதி வருகிறார். 2021ல் "கண்ணீர் படராத ஓர் அங்குல மண்" எனும் கவிதைத் தொகுப்பு வெளியாகியுள்ளது. அன்பைத் தேடிக் கண்டடைவதே படைப்பாக்கமாக நம்புகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -