நிழல் ஓவியம்

மூன்று கவிதைகள்

- Advertisement -

நிழல் ஓவியம்

நீ என் குளம்
தாமரைக் கொடியாய் உனக்குள் படர்வேன்
உன் மேனியெங்கும் கோடிப் பூக்களாய் பூப்பேன்.
தற்கொலை செய்யப் போகிறாயா?
சற்று யோசி…
உனக்காக நீ காத்திருக்கிறாய்.
வண்ணத்துப்பூச்சியாய் கனவு காண்கிறேன்
இறக்கைகள் முளைக்கின்றன
பறக்க இயலவில்லை.
வலி தாங்கு
விசை கொண்டு எழு
உன் கனவுகளை மெய்ப்பி.
கனவுகள் ஆயுதங்களல்ல
ஆயுதங்கள் தீர்வுகளல்ல
தீர்வுகள் கனவுகளல்ல.
கனவுகள் இல்லாத இதயம்
கல்லில் செதுக்கிய சிற்பம்
கனிகள் விளையாத மரம்.
கனவுகள் யாவும் நிஜமாகட்டும்
கனிவும் மகிழ்வும் பெருகட்டும்
காலங்கள் இனி இனிமையாகட்டும்
கனவுகள் திறக்குமெனக் காத்திருக்கையில்
கனவுகள் மெல்ல மறைகின்றன
கவிதைகள் பூக்கத் தொடங்குகின்றன
வானம் என்னோடு உரையாட
நிலா கோபித்து போய்விட்டது
யாருமற்ற சாலை
இருள் நிரம்பியிருக்கிறது
வா
கனவிலேறி பயணிப்போம்
இருளுக்குள் விழித்தபடி மெழுகுவர்த்தி
எதிர் மதிலின் மேல் நிழல்
எனக்குள் ஒருவன்
நிழலைக் குடிக்கிறேன்
நிழலைச் சாப்பிடுகிறேன்
நிழல் என்னைக் குடித்துச் சாப்பிட்டு முடிக்கிறது
சுவர்களால் ஆனதல்ல வீடு
இதயங்களலானது
அன்பின் மெல்லிய இழைகளானது.
கனவு மிருகங்கள்
இரவுக்குள்ளிருந்து வரும்
தூக்கத்தைத் தின்று விட்டு
ஓடி விடும்.

??????????????????????????

பிடி சாபம்

வீட்டுக்குள் நின்று கொண்டு
அதை
வெடி வைத்து தகர்ப்பது போல
ஒரு பெண்ணை சிதைப்பது.

அவளின் உடல்
கண்ணாடிப் பேழையாலானது
வல்லாங்கில்
சில்லுச் சில்லாய்த் நொறுங்குகையில்
தெறித்துப் பாயும்
காலங்களின் உயிர்த்தலங்களுக்கு.

வம்சத்தின் வேர் இற்றுப்போக
வாழ்வின் ஆன்மாவில்
அபலையின் ரத்தக்கறைப்
படியும் அழியாது.

கடவுளின் பிம்பம் உருகி ஆவியாகும்
நாகரீகம் கரைந்து மறையும்
பண்பாடு , கலாச்சாரம் யாவும்
காற்றில் வரைந்த ஓவியங்களாகும்.

அணுகுண்டால் நகரங்களை
கதிர் வீச்சால் உயிர்ஜீவிகளை
நிர்மூலம் செய்வது போல
தீராத வேதனைகளைத் தருவிக்கும்.

கள்ளமில்லாக் கனவுகள் மீது
குரூரத்தின் திராவாகத்தைப் பெய்வது
சாதுவான நிலத்தைப் பிளந்து
சர்ப்பத்தின் விஷக்கொடுக்கை தீண்டுவது
கனிமரத்தைப் பூவும் பிஞ்சோடு
வேரோடு மண்ணோடு
பெயர்த்து வீசுவது
மனிதனை நீண்டு வாழவைப்பதில்லை..

மலரைக் கல்லால்
நசுக்குகிற
கொடூரமிது.

??????????????????????????

மின்னல்

உன்னை சந்தித்த
அதே பெளர்ணமியில்
நீ பிரிகிறாய்.

அன்று என்னுள் கதிரான
அதே சந்தோஷம்
சிறிதும்
சிந்திப் போகவில்லை.

தோல்வியால் நான்
மன பிறழ்வேனோ…
குடி நோயாளியாய் ஆவேனோ…
தற்கொலையில் வீழ்வேனோ…
என
கொஞ்சமும் நீ
பயந்திட வேண்டாம்.

காலம் உன்னை
ஒரு பக்கம் அழைத்துப் போகிறது
என்னை உயர்பக்கம்
நிச்சயம் அழைத்துச் செல்லும்.

எதிர் காலங்ளை
பொற்காலங்களாய் மாற்றும்
மந்திரத்தை நீ
கற்றுக்கொள்.

பிரசவிக்கும் விதைகளை
விருட்சஙகளாய் உருவாக்கும்
வித்தையை நீ
தெரிந்துகொள்.

உன் கணையாழி
கை மாறிடாமல்
கவனித்துக்கொள்…
காத்துக்கொள்…
இறந்த காலத்தை
இரக்கமின்றி எரித்து விடுவது.

என்னிடம்
அதன் மின்னல் தங்கியிருக்கிறது…
அது
என் இதயத்தினுள் மட்டும்
சுற்றித் திரியும்.

நீ போய்வா…
உன் மாங்கல்யவனோடு
பூத்த முகமாய்.

நான்
என் வழி போகிறேன்
காற்றில் சிறகாய்.

வசந்ததீபன்
வசந்ததீபன்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்தவர். தற்சமயம் சென்னை கூடுவாஞ்சேரியில் இருக்கிறார். ஹிந்தியில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார். மணிப்பூரில் நாகா மலைவாழ் மக்கள் பள்ளியில் ஏழு வருடங்கள் வேலை பார்த்தார். நீண்ட காலங்களாக கவிதைகள் , கதைகள் எழுதி வருகிறார். 2021ல் "கண்ணீர் படராத ஓர் அங்குல மண்" எனும் கவிதைத் தொகுப்பு வெளியாகியுள்ளது. அன்பைத் தேடிக் கண்டடைவதே படைப்பாக்கமாக நம்புகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -