நிறைவு

குறுங்கதை

- Advertisement -

பணி ஓய்வு விழா முடிந்தவுடன் தனியே ஜுப்லி பூங்காவில் நடந்துவிட்டுப் பிறகு வீட்டுக்குப் போகலாம் எனச் சொல்லி வீட்டிலுள்ளவர்களை அனுப்பி வைத்தார் மாணிக்கம். கோல்ப் கிளாப்பிற்கு எதிரிலேயே இருந்த பூங்கா அது. வேலை முடிந்து புறப்படும்போதெல்லாம் அரை மணி நேரம் பூங்காவில் நடந்துவிடுவார். அதற்கான காலணியும் அவருடைய காரிலேயே இருக்கும்.

சாலையைத் தாண்டி பூங்காவின் நடைபாதையில் இறங்கி நடக்கத் துவங்கினார். 5.00 மணிக்கு மேல்தான் ஆள்கள் திரளத் துவங்குவார்கள். அதற்குள் ஆளரவமற்ற பூங்காவை அனுபவித்துக் கொள்ளத் துடித்தார். மனம் எதையோ இழந்துவிட்டதாக உணர்ந்தார். இந்த மனத்துடன் உடனே வீட்டிற்குச் சென்றால் அழுத்தம் அதிகமாகலாம் என்பதால் ஒரு வெட்டவெளி நடை தேவைப்பட்டது.

“பா… இதுக்கப்பறம் என்ன நீங்களும் அம்மாவும் வெளிநாட்டுக்குப் போங்க… எந்த நாடுலாம் இப்போ போக முடியும்னு பார்த்துட்டு அடுத்த வாரமே டிக்கேட் போட்டுடலாம்…”

எப்பொழுதும் எங்காவது துரத்தப்படத் தயாராக இருக்க வேண்டியுள்ளது என அலுப்புடன் நடந்தார். கடைசியாக ஆபிஸ் நாற்காலியிலிருந்து எழும்போது கைகள் நடுங்கின.

“மாணிக்கம் சார் சொல்லுங்க…”

“மாணிக்கம் சார கேளுங்க…”

“சார், இன்னிக்கு சாயங்கலாம் மீட்டிங் இருக்கா?”

“சார் சொன்னா செஞ்சிடலாம்…”

காலையில் வந்தததிலிருந்து போகும்வரை இனி இந்த வசனங்களையெல்லாம் கேட்க முடியாது என வருத்தமாக இருந்தது.

“இப்ப யேன்பா உங்களுக்கு இதெல்லாம்?”

“ப்பா சும்மா இருக்க மாட்டிங்கத்தான?”

இனி மகன்கள் அன்பு என்கிற பெயரில் அதட்டுவார்கள். அதையும் கேட்டு ஆமோதித்து மௌனத்துடன் இருக்க வேண்டும். சிமெண்டு நாற்காலியில் அமர்ந்து கொண்டு எதிரில் கிளைப்பரப்பி விரிந்திருந்த மரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். பூங்காவில் எதுவும் அசையாமல் ஆர்பாட்டமில்லாமல் அமைதியாகத் தெரிந்தன. எப்பொழுதும் மாணிக்கம் அவசரத்துடன் இங்கு வரும்போது எல்லாமும் பரபரப்பாக இருக்கும்.

இனி அனைத்தும் அமைதியாகவே தெரிய வாய்ப்புண்டு. உலகம் ஸ்தம்பித்து விடக்கூடும். எப்படித் தன்னைத் தயார் செய்து கொள்ள வேண்டும் எனக் குழம்பினார். வியர்த்துக் கொட்டியும் அசௌகரிகமாகத் தெரியவில்லை. இந்த அலுப்பும் அசதியும் இனி தேவை எனத் தோன்றியது.

“மாணிக்கம் சார்!”

சட்டென ஒரு பழக்கமான குரல். பின்னே ஒலித்து நெருங்கி வரும் காலடிச் சத்தமும் கேட்டது.

“சார்… என்ன இன்னிக்கு ஜோக்கிங் ஓடலயா? நானே உங்கள பார்க்க வரலாம்னு நெனைச்சன்… சார் கிளாப்புல கிளினிங் வேல கேட்டிருந்தன்… பார்த்துச் சொல்றதா சொல்லிருந்தீங்க…”

ஒல்லியான தேகத்துடன் முக வாட்டத்துடன் நின்றிருந்தான். சில வாரங்களுக்கு முன் இதே பூங்காவில் வழிமறித்து வேலை வாங்கித் தர அவன் கேட்ட உதவியை மாணிக்கத்திடம் நினைவுப்படுத்தினான்.

“சார்… உங்கக்கிட்ட கேட்டா வேல கொன்போர்ம்ன்னு எல்லாம் சொன்னாங்க… சார்…”

அவன் மீண்டும் மீண்டும் “சார்” என்றே உச்சரித்துக் கொண்டிருந்தான்.

“ஓ, சேகருத்தானே? சரிப்பா… அடுத்த வாரம் கிளாப்புக்கு வா… பார்த்துக்கலாம்… ஒன்னும் கவலப்படாத…” என்று சொல்லி அவன் முதுகில் தட்டிக் கொடுத்தார்.

“சார், ரொம்ப நன்றி, சார்… சேவா வீட்டுக்கு இன்னும் காசு கட்டல சார்… இந்த வேல கெடைச்சிச்சிருச்சின்னா பெரிய உதவியா இருக்கும்…” என்று மீண்டும் கெஞ்சியபடி நின்றிருந்தான். அவன் நின்றிருக்கும் தோரணையை மாணிக்கம் பார்த்துவிட்டு வரத்துடித்த புன்முறுவலை அடக்கிக் கொண்டார்.

“என் நம்பர் வச்சுக்கோ… எதுக்கும் ரெண்டு நாள் கழிச்சி அழைச்சி ஞாகபப்படுத்து…” எனச் சொல்லிவிட்டுச் சற்றுமுன் இருந்த தளர்வுகள் எல்லாம் மெல்ல குறைய எழுந்து நடக்கத் துவங்கினார்.

-கே.பாலமுருகன்

கே.பாலமுருகன்
கே.பாலமுருகன்https://minkirukkal.com/author/kbalamurugan/
மலேசிய எழுத்தாளர், தமிழாசிரியராகப் பணியாற்றி வருகிறார். இதுவரை இலக்கியம் சார்ந்து 15 நூல்களும், கல்வி ஆய்வியல் சார்ந்து 18 நூல்களும் இயற்றியுள்ளார். தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் இலக்கியத்திற்கான கரிகாற் சோழன் விருது, அன்னை வேளாங்கன்னி கலைக் கல்லூரியின் தனி நாயகர் தமிழ் நாயகர் விருது, குறிஞ்சி கபிலர் இயக்கத்தின் பாரதி விருது, மலேசியப் பல்கலைக்கழகத்தின் எம்.ஏ.இளஞ்செல்வன் விருது, சி.கமலநாதன் விருது, குடியரசு தின விருது என இலக்கியத்திலும் கலை படைப்புகளிலும் இதுவரை 25 சர்வதேச விருதுகள் பெற்றுள்ளார். மலேசியாவில் பலகலைக்கழக, கல்லூரி மாணவர்களுக்கான சிறுகதைப் பயிற்றுநராக வெண்பலகை எனும் திட்டத்தில் செயலாற்றி வருகிறார். அதோடுமட்டுமல்லாமல் சிறுவர் நாவல்கள், சிறுவர் சிறுகதைகள், சிறுவர்களுக்கான படைப்பிலக்கியத் தளங்களை உருவாக்கி அடுத்த தலைமுறை மாணவர்களுக்கும் வழிகாட்டி வருகிறார். http://balamurugan.org என்கிற தன் அகப்பக்கத்தில் எழுதியும் வருகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -