நான்காம் பரிமாணம் – 7

2. ஊழி அதிகாரம் - 2ஆம் பகுதி

- Advertisement -

இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

நான்தான் காலம் பேசுகிறேன். எனது பார்வையில் நான் கண்ட பல்வேறு நிகழ்வுகளை தொடர்ந்து உங்களுடன் கூறிக்கொண்டு வருகிறேன். சென்ற பகுதியில், ஊழி அதிகாரத்தை தொடங்கி, ஈர்ப்பு விசைக்கும் காலத்திற்கும் உள்ள தொடர்பையும், அணுவின் அதிர்வால் காலத்தை அளப்பதைப் பற்றியும் கூறியிருந்தேன்.  உங்களால் காலத்தை நிறுத்த முடியுமா என்பதைப் பற்றியும் பேச ஆரம்பித்திருந்தேன். தொடர்ந்து பார்ப்போமா?


காலத்தை நிறுத்தும் உயிர்கள்
வெப்பநிலையை குறைப்பதன் மூலமாக உயிர்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி அதன் மூலம் காலத்தையும் நிறுத்த முடியும் என்று கூறினேன் அல்லவா? அதில் உங்கள் உலகில் உள்ள பல்வேறு உயிரினங்களும் விதவிதமான பரிணாம வளர்ச்சியை அடைந்துள்ளன. ரொட்டித் துண்டில் உள்ள ஈஸ்ட்(Yeast) என்னும் உயிரி தான், மாவைப் புளிக்க வைக்கிறது. ஈஸ்ட் உயிரியின் வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தை முற்றிலுமாக குறைத்தால் உங்களால் அதனை பல்லாண்டு காலம் உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும். இதே விதி உங்கள் உடம்பில் உள்ள பல்வேறு உயிரணுக்களுக்கும் பொருந்தும். தனித்தனி உயிரணுக்களுக்கு பொருந்தும் இந்த விதி, உயிரணுக்களின் கூட்டமான உறுப்புகளுக்கு பொருந்துவதில்லை. உதாரணமாக, உங்கள் இதயத்தை உடலில் இருந்து பிரித்தெடுத்து உயிர்ப்புடன் வைத்துக் கொள்வதற்கு சில மணி நேரங்களுக்கு மேல் முடிவதில்லை. காரணம் சற்று வினோதமானது. இதை விளக்குவதற்கும் இதயத்தையே எடுத்துக்கொள்வோம். இதயத்தின் முக்கியமான வேலை என்ன? தொடர்ந்து சுருங்கி விரிந்து உடலில் உள்ள அனைத்து மூலைகளுக்கும் ரத்தத்தை அனுப்புவது தானே. இந்த சுருங்கி விரியும் வேலையை செய்வதற்கு இதயத்தில் பல கோடி அணுக்கள் உள்ளன. இவை அனைத்தும் ஒன்றிணைந்து வேலை செய்வதால் தான் இதயம் சுருங்கி விரிகிறது. இப்பொழுது வெப்பநிலை மிகவும் குறைத்து இதயத்தை முழுமையாக உறைய வைத்து விட்டோம் என்று எடுத்துக்கொள்ளுங்கள். உறைந்த நிலையில் இதயத்தில் உள்ள எந்த ஒரு தனிப்பட்ட உயிரியும்(Cell)  சாகாமல் தான் இருக்கும். ஆனால் அந்த இதயத் துடிப்பு நின்று விடும். மீண்டும் நீங்கள் பழைய வெப்பநிலைக்கு இதயத்தை கொண்டு வந்தால் இதயத்தை மீண்டும் துடிக்க செய்வதற்கு ஒவ்வொரு உயிரியும் முன்பு செய்து கொண்டிருந்த கூட்டுச் செயலை அப்படியே நினைவுபடுத்த வேண்டும். இப்படிப்பட்ட நினைவாற்றல் கொண்ட உறுப்புகள் அனைத்தும் காலத்தை நிறுத்தும் வல்லமை பெற்றது. இந்த ஆற்றல் உங்கள் இதயத்துக்கு இல்லாததால் உங்களால் தனிப்பட்ட உயிரிகளை தக்கவைத்துக் கொள்ள முடிந்தாலும் மொத்த உறுப்புகளாக செயல்பட முடியவில்லை. 

உங்களால் முடியாத உயிரியின் செயலை நினைவுபடுத்தும் காரியத்தை, ஒரு கரடி சர்வசாதாரணமாக செய்து முடித்து விடுகிறது. சேற்று மீன் (Mud fish),கரடி போன்ற உயிரினங்கள் செய்யும் இந்த செயலுக்கு ஆழ்நிலை உறக்கம் (Hibernation) என்று பெயர். கடும் குளிர் காலங்களில், கரடி தன்னுடைய உடலில் பல்வேறு பாகங்களை மொத்தமாக நிறுத்தி விட்டு பல மாதங்கள் தொடர்ந்து தூங்கும். ஆழ்நிலை உறக்கம் முடியும் நிலையில் அதன் ஒவ்வொரு அங்கங்களும் முன்பு செய்த காரியத்தை நினைவு வைத்துக் கொள்வதால் பழையபடியே மீண்டும் இயங்க முடியும். ஆழ்நிலை உறக்கத்தில் இருக்கும் மாதங்கள் அனைத்திலும் கரடியை பொருத்தவரையில் காலம் நின்றுவிட்டது என்று தான் கணக்கு. ஏனென்றால் காலம்(நான்) என்பதற்கு பொதுவான ஒரு வரைமுறை கிடையாது. காலத்தை பார்க்கும் ஒவ்வொருவரின் பார்வையிலும் நான்(காலம்) வேறுபட்டுக் கொண்டே தான் இருப்பேன். மனிதர்களால் தற்போது முடியாத இந்த காலத்தை நிறுத்தும் காரியம், வேறு ஒரு பரிணாம வளர்ச்சியில் நடக்கவும் செய்யலாம். ஆனால், அந்த நிலையில் நீங்கள் தற்பொழுது உள்ள மனிதர்கள் போன்று இருக்க மாட்டீர்கள். வேறு ஒரு புதிய நிலையை அடைந்து இருப்பீர்கள். அப்படியானால் சென்ற பகுதியில் நான் கூறிய Cryopreservation முறை முற்றிலும் வீண் முயற்சி என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம்? இந்த முறையால் இறந்த மனிதர்களை மீண்டும் உயிர்த்தெழ வைப்பதற்கு உங்களால் முடியாமல் போகலாம். ஆனால் கண்டிப்பாக காலத்திற்கும் வெப்பத்திற்கும் உள்ள தொடர்பை புரிந்துகொள்ள ஒரு ஆராய்ச்சியாக இருக்கும்.


சுழற்சியால் உணரப்படும் காலம்
இரண்டு பொருட்கள் ஒன்றாக இணையும் பொழுது நீங்கள் உணரும் நொடி போன்ற காலத்தை சென்ற பகுதியில் கூறினேன். அண்ட சராசரத்தில் உள்ள அனைத்து பொருட்களும் எப்பொழுதுமே ஒன்றோடு ஒன்று இணைவது இல்லை. மாறாக சில பொருட்கள் ஒன்றை ஒன்று தொடர்ந்து சுழன்று கொண்டிருக்கிறது. எளிதாக புரிந்து கொள்ள வேண்டுமென்றால், பூமியையும் சந்திரனையும் எடுத்துக்கொள்ளுங்கள். சந்திரனும் பூமியும் அருகில் இருந்தால் கூட ஒன்றோடு ஒன்று இணையாமல் சந்திரன் பூமியை சுற்றிக் கொண்டே இருக்கிறது அல்லவா? இந்த சுழற்சி நடக்கும் கால அளவைத்தான் ஒரு நாள் என்று உங்கள் உலகில் பல இடங்களில் இன்றுவரை கணக்கில் வைத்துக் கொள்ளப்படுகிறது. அரேபிய மற்றும் சீனப் பாலைவனங்களில், நீங்கள் கண்டுபிடித்த நாள்காட்டி தான் சந்திர நாள்காட்டி. பூமியிலிருந்து பார்க்கும் பொழுது சந்திரன் தொடர்ந்து வளர்ந்து வந்து, பின்பு தொடர்ந்து குறைந்து கொண்டு வருவது போலவும் தெரியும். பார்ப்பதற்கு எளிதாக கண்டுபிடிக்க முடிவதால் ஒவ்வொரு பிறை உதிப்பதையும் ஒவ்வொரு நாளின் தொடக்கமாகவும் சந்திரன் வளர்ந்து மறைந்து வரும் ஒரு முழு சுழற்சியை ஒரு மாதமாகவும் கணக்கில் வைத்துக் கொள்ள ஆரம்பித்தீர்கள். இந்த முறை இன்று வரையிலும் பல இடங்களில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உதாரணமாக உங்களின் ஹிஜ்ரி நாள்காட்டியில், ஒவ்வொரு வளர்பிறையில் வரும் மூன்றாம் பிறையை, மாதத்தின் தொடக்கமாக கணக்கில் கொள்கிறீர்கள். 


சந்திரனை வைத்து எளிதாக கண்டுபிடித்த நாள்காட்டியில் ஒரு சிக்கல் இருக்கிறது. சந்திரன் சில நாள் பகலில் உதிக்கும். ஆனால் வேறு சில நாட்களில் மாலையிலும், இரவிலும் கூட உதிக்கும். இதனால் நாள் மற்றும் வேளைகளில் குழப்பம் உண்டானது. இந்த குழப்பத்தை தீர்ப்பதற்குதான் சூரிய நாள்காட்டி உருவானது. நீங்கள் பயன்படுத்தும் ஆங்கில நாட்காட்டி என்பது சுத்தமான சூரிய நாட்காட்டி தான். இதற்கு சூரியன் மற்றும் பூமியின் சுழற்சி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. சூரிய நாட்காட்டி என்பது சந்திர நாட்காட்டியை போல மிகவும் எளிதானது அல்ல. ஏனென்றால் சூரியன் உங்கள் பார்வைக்கு என்றுமே முழுமையாக தான் இருக்கும். சந்திரன் போன்று வளர்ந்து குறையும் பிறையாக இருக்காது. அதனால் சூரியனை நேரடியாக கணக்கில் கொள்ளாமல், பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்வதால் வரும் வேலைகளை கணக்கில் கொண்டு ஒவ்வொரு விடியலையும் ஒவ்வொரு புதிய நாளாக கணக்கில் கொண்டீர்கள். சரி. சூரிய மாதங்கள் எவ்வாறு பிறந்தன? சூரியன் உதிப்பதற்கு சற்று முன்பாக வானத்தில் தெரியும் நட்சத்திரக் கூட்டங்கள் எவ்வாறு இருக்கிறது என்பதை பார்த்த நீங்கள் ஒவ்வொரு 30 விடியல்களுக்கும், இந்த நட்சத்திரக் கூட்டம் முழுமையாக மாறுவதையும் கண்டு கொண்டீர்கள். அதனால் இந்த நட்சத்திரக் கூட்டம் மாறும் ஒவ்வொரு காலத்தையும் மாதமாக மாற்றினீர்கள். 12 மாதங்களுக்கு ஒரு முறை இந்த நட்சத்திரக் கூட்டங்கள் சுழற்சி அடைந்து மீண்டும் வருவதால், இந்தப் 12 மாத சுழற்சியை ஒரு வருடம் என்று கணக்கில் கொள்ள ஆரம்பித்தீர்கள். உங்கள் கணக்கில் உள்ள ஆங்கில மாதங்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு நட்சத்திரக் கூட்டம் சூரிய விடியலின் போது தெரியுமா என்றால் இல்லை. பல்வேறு அரசியல் காரணங்களுக்காக அந்த நடைமுறை சற்று வித்தியாசப்பட்டு விட்டது. ஜனவரி மாதத்தின் மத்தியிலிருந்து பிப்ரவரி மாதத்தின் மத்தி வரை சூரிய உதயத்தின் பொழுது உங்களால் ஒரே விதமான நட்சத்திர கூட்டத்தை பார்க்க முடியும். அனைத்து ஆங்கில மாதங்களும் கிட்டத்தட்ட இதே மாதிரிதான். 


சூரிய-சந்திர நாட்காட்டி
சூரியன் மற்றும் சந்திரன் தனித் தனியாக வைத்துக் கொண்டு உருவாக்கப்பட்ட இரண்டு நாட்காட்டிகளை உங்களுக்கு நான் கூறிவிட்டேன். இந்த இரண்டு நாட்காட்டிகளிலும் சில வசதிகளும் சில குறைபாடுகளும் உள்ளன. அப்படியானால், இந்த இரண்டையும் இணைத்து ஒரு புதிய விதமான நாட்காட்டி உருவாக்கினால் என்ன என்று உங்களுக்கு தோன்றியதன் விளைவுதான் சூரிய-சந்திர நாட்காட்டி. இது உருவாக்கப்பட்ட இடம்தான் பின்பு இந்தியா என்ற நாடாக அழைக்கப்பட்டது. சூரியசந்திர நாட்காட்டிகளில் பல்வேறு சுவாரசியங்கள் ஒளிந்து உள்ளன. அதனைத் தெரிந்து கொள்வதற்கு முன்னால் உங்களுக்குள் ஒரு கேள்வி எழ வேண்டும். சூரியனையும் சந்திரனையும் மட்டுமே வைத்து நாட்காட்டி உருவாக்கிய நீங்கள் ஏன் புதன், வெள்ளி, சனி போன்ற கிரகங்களின் வைத்து நாட்காட்டிகளை உருவாக்கவில்லை? இந்தக் கேள்விக்கான பதிலுக்கும் சூரிய-சந்திர நாட்காட்டிக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உள்ளது. அது என்ன என்று தெரிய வேண்டுமா? அடுத்த பகுதி வரும் வரை காத்திருங்கள்.

(நான் சுழல்வேன்)

குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.

இளையகருப்பன்
இளையகருப்பன்
தமிழ் மீது பற்றுக்கொண்ட குழந்தை. வரலாறு, அறிவியல் மற்றும் பயணங்கள் மூலமாக உலகை தினமும் கற்றுக்கொள்ள முற்படும் மாணவன். கவிதைகள் மீது காதல் கொண்ட இளைஞன். தொழில்முறையில், கணிப்பொறி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளன், மாலைநேர எழுத்தாளன். மெய்ஞ்ஞானத்தை பகுத்தறிந்து கொள்ளத் துடிப்புள்ள முதியவன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -