நான்காம் பரிமாணம் – 68

14. ஆயுத அதிகாரம் - 3ஆம் பகுதி

- Advertisement -


இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்


நான்தான் காலம் பேசுகிறேன். விவசாய முதல் யுத்தம் வரை மனிதனின் அடிப்படை ஆதாரங்கள் அனைத்துக்கும் ஆயுதம் எவ்வாறு உதவி செய்கிறது என்பதை ஆயுத அதிகாரத்தின் சென்ற பகுதியில் கூறியிருந்தேன். ஆயுதங்களால் மனிதனின் பரிணாம வளர்ச்சிக்கு ஏற்பட்ட மாற்றங்களைப் பற்றி இந்த பகுதியில் கூறுகிறேன் கேளுங்கள்.

வல்லவனின் ஆயுதம்
” வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” எனும் பழமொழி பரவலாக அனைவராலும் பயன்படுத்தப்படுகிறது. இங்கே புள்ளை ஒரு அற்ப பொருளாக நினைத்து அதனைக் கூட ஆயுதமாக மாற்றும் சக்தி ஒரு திறமையான மனிதனுக்கு உண்டு என்று பொருள்படும்படி கூறமுடியும். ஆனால் மனிதனின் சரித்திரத்தைத் திரும்பிப் பார்த்தால் புல் தான் மனிதனின் மிகப்பெரும் ஆயுதமாக இருந்து வருகிறது. வீடு கட்டுவதற்கு தேவையான வைக்கோல் போர், உணவு தானியங்களை சேகரித்துவைக்க தேவைப்படும் கிட்டங்கி முதலிய இடங்களை உருவாக்குவதற்கு பயன்படுத்தப்பட்டாலும், அதிநவீன ஆயுதங்கள் ஆகவும் உருவாக்கப்பட்டது. எப்படி தெரியுமா?

புற்களில் பல்வேறு வகைகள் உண்டு. அவற்றில் முக்கியமான வகைதான் மூங்கில் எனப்படுகிறது. மிகவும் உயரமாக வளரும் மூங்கில் தண்டுகள் அனைத்தும் ஒரு விதமான புல்தான்! மனிதனின் ஆதி நாட்களில் மூங்கில் குச்சிகளை ஒரு தடி போல பயன்படுத்தி அதன்மூலம் எதிரிகளை தாக்கி வந்தனர். இந்த தாக்குதலை தடுக்க எதிரணியினர் பயன்படுத்திய ஆயுதமும் மூங்கில் தான். மூங்கில் குச்சிகளை வரிசையாக கட்டி அதனை ஒரு கேடயமாக மாற்றி தாக்குதலில் இருந்து தப்பிக்க பயன்படுத்தினர். இதன்பின்பு மனிதன் பரிணாம வளர்ச்சி அடைய அடைய அதே புல் மெருகேறி மிகவும் பலம் வாய்ந்த ஆயுதமாக மாறியது. ஒரே ஒரு மூங்கில் குச்சியை எடுத்து அதனை வில்லாக வளைத்து மற்றொரு மூங்கில் குச்சியை கூர்மையான அம்பாக மாற்றி மிகவும் தொலைவிலிருந்தே தன்னுடைய எதிரியை மனிதன் தாக்க முனைந்தான். இந்த மூங்கிலில் தான் பின்பு பல்வேறு விதமான மரங்களிலும் உலோகங்களும் செய்யப்பட்டு வந்தது. குறிப்பாக சொல்லப்போனால் ஐரோப்பாவில் கண்டுபிடிக்கப்பட்ட “Long bow” எனப்படும் நீளமான மரத்தினால் செய்யப்பட்ட அம்புகள் சரித்திரத்தை மாற்றி போடும் ஒரு முக்கிய நிகழ்வை உருவாக்கியது. மேற்கு ஐரோப்பாவில் காலனி ஆதிக்கம் கொண்ட மனப் பான்மை மக்களுக்கு பெருகி வந்ததால் உலகில் உள்ள மற்ற நாடுகள் அனைத்தையும் சிறிது சிறிதாக தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர ஆரம்பித்தனர். நாடுகளை பங்கு போட்டுக்கொள்ளும் போட்டியில் இந்த நாடுகளுக்கு உள்ளேயே பல்வேறு சண்டைகளும் வர ஆரம்பித்தது. இதில் ஒரு முக்கியமான சண்டையில் ஆங்கிலேயே மற்றும் பிரஞ்சு படைகளுக்கு இடையான ஒரு சண்டை சுமார் 700 வருடங்களுக்கு முன்னால் நடந்தது. போரில் 40,000 முதல் 50,000 பிரெஞ்சு வீரர்களும் பத்தாயிரம் ஆங்கிலேய வீரர்களும் கலந்து கொண்டனர். மிகவும் சக்தி வாய்ந்த படை கொண்டிருந்ததால் பிரெஞ்சு வீரர்கள் தாங்கள் எப்படியும் வெற்றி பெற்று விடுவோம் என்ற நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆனால் ஆங்கிலேய வீரர்களிடம் மிகவும் நீளமான லாங் பௌ எனப்படும் வில்லும் அம்பும் இருந்தது. இதன் துணை கொண்டு பிரஞ்சு படைகளால் நெருங்க முடியாத  மிகவும் தொலைவிலிருந்தே ஆங்கிலேயப் படை பிரெஞ்சு படையை சுக்குநூறாகி சரணடைய வைத்தது. பிரெஞ்சு படைகள் சிறிய வில் அம்பை கொண்டிருந்ததால் மிகவும் தொலைவில் இருந்த ஆங்கிலேயப் படையை அவர்களால் நெருங்க முடியவில்லை. இதே பாணியை பின்பு பயன்படுத்திய ஆங்கிலப்படை பல்வேறு வெற்றிகளை குவித்து உலகின் அநேக பகுதிகளை தங்களுக்கு அடிமையாக மாற்றிக்கொண்டது. வில்லின் நீளத்தில் ஏற்பட்ட ஒரு சிறிய மாற்றத்தினால் உலகமே ஒரு நாட்டிற்கு அடிமையாகும் அளவிற்கு ஆங்கிலேயர்களால் வளர முடிந்தது. 

வில் அம்பை கொண்டு பல்வேறு வெற்றிகளை மனிதன் பெற்றால் கூட அவனுக்கு அதைவிட மிகவும் அதிகமான சக்தி தேவைப்பட்டது. இங்கே மீண்டும் மூங்கில் தான் உதவிக்கு வந்தது. கொரியப் படைகள் பல நூறு ஆண்டுகளாக சீனர்கள் மற்றும் அவர்களால் தாக்கப்பட்டு வந்தது. இவர்கள் இருவரின் ஆள்பலம் மிகவும் அதிகமாக இருந்ததால் கொரிய தீபகற்பத்தில் மக்களால் நிம்மதியாக வாழ முடியாமல் இருந்தனர். இதனால் குறைந்த ஆட்களுடன் அதிக திறன் கொண்டு தாக்கும் ஒரு இயந்திரத்தை உருவாக்கியவர் முயற்சிதான் Singijeon எனப்படும் போர் கருவியை உருவாக்கியது. மூங்கில் குழாய்கள், உலோகம் கலந்த ஒரு தள்ளுவண்டியில் எதிரியை நோக்கி பல்வேறு குழாய்கள் கொண்ட அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த ஒவ்வொரு குழாய்க்குள் வெடிமருந்து மற்றும் அம்புகள் பொருத்தப்பட்டு ஒரே நேரத்தில் ஒரு மனிதனால் நூற்றுக்கணக்கான அம்புகளை செலுத்துவதற்கு ஏதுவாக ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த ஆயுத தள்ளுவண்டியில் துணைகொண்டு பல நூறு ஆண்டுகள் கொரிய தீபகற்பத்தில் எதிரிகள் நெருங்க முடியாமல் ஒரு அமைப்பை உருவாக்கினார். இங்கே மூங்கிலின் உட் பக்கத்தில் இருக்கும் குழாய் போன்ற அமைப்பு இப்படி ஒரு ஆயுதமாக மாறியது என்பதை நீங்கள் உணர்ந்தீர்கள். ஒரு சிறிய மூங்கில் குச்சி ஆதிகாலத்திலிருந்தே இப்படி பல்வேறு விதமான ஆயுதங்களாக மாறியது என்பதை வைத்தே மனிதன் எவ்வாறு பரிணாம வளர்ச்சி அடைந்தான் என்பதை உங்களால் எளிதாக புரிந்துகொள்ள முடிந்ததா? இந்த மூங்கில் குழாய் தான் பிற்காலத்தில் உலோகங்களால் செய்யப்பட்டு துப்பாக்கி மற்றும் பீரங்கியாக கூட உருவெடுத்தது. இங்கே ஒரு விஷயத்தை உங்களால் நன்றாக புரிந்து கொள்ள முடியும். மூங்கில் எனப்படும் ஆயுதம் ஆதிகாலத்திலிருந்தே ஒரே மாதிரியாக இருந்தாலும் அதனைப் பயன்படுத்தும் மனிதனின் மூளை மாறிக்கொண்டே வந்ததால் அந்த ஆயுதங்களின் அழிவு சக்தியும் கூடிக்கொண்டே வந்தது. அப்படியானால் இங்கே முக்கியமான ஆயுதம் என்பது மூங்கில் கிடையாது. உங்களுடைய மூளை தான். இந்த ஆயுதத்தின் சிறப்புகள் என்ன என்பதையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளைப் பற்றியும் அடுத்த பகுதியில் கூறுகிறேன் காத்திருங்கள்.

(நான் சுழல்வேன்)

குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.

இளையகருப்பன்
இளையகருப்பன்
தமிழ் மீது பற்றுக்கொண்ட குழந்தை. வரலாறு, அறிவியல் மற்றும் பயணங்கள் மூலமாக உலகை தினமும் கற்றுக்கொள்ள முற்படும் மாணவன். கவிதைகள் மீது காதல் கொண்ட இளைஞன். தொழில்முறையில், கணிப்பொறி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளன், மாலைநேர எழுத்தாளன். மெய்ஞ்ஞானத்தை பகுத்தறிந்து கொள்ளத் துடிப்புள்ள முதியவன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -