நான்காம் பரிமாணம் – 67

14. ஆயுத அதிகாரம் - 2ஆம் பகுதி

- Advertisement -


இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்

காலம் என்னும் நான் ஆயுத அதிகாரத்தை தொடங்கி அது எவ்வாறு உங்களுடைய பிரதிநிதியாக விளங்குகிறது என்று சென்ற பகுதியில் கூறியிருந்தேன். உங்களுடைய பரிணாம வளர்ச்சியும் ஆயுதங்களின் பரிணாம வளர்ச்சியும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானது தான். அது என்ன என்பதை இந்த பகுதியில் விளக்கமாக கூறுகிறேன் வாருங்கள்.

ஆயுதத்தின் விலை


ஆதி காலத்திலிருந்தே மனிதன் ஒவ்வொரு ஆயுதமாக கண்டுபிடித்து தனது வாழ்க்கையை வளமாக்கிக் கொண்டு வந்துள்ளான். உதாரணமாக, சக்கரம் என்னும் ஆயுதத்தைக் கண்டுபிடித்த பின்பு ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இலகுவாக அனைவராலும் நகர முடிந்தது. நெருப்பு எனும் ஆயுதத்தை செயற்கையாக உருவாக்க கற்றுக் கொண்டபின் தனக்கு வேண்டிய பொருட்களை பக்குவமாக சமைத்து சாப்பிடவும் தேவையில்லாத பொருட்களை எரித்து சாம்பலாக்கவும் முடிந்தது. ஒவ்வொரு ஆயுதமாக மனிதன் கண்டுபிடிக்க, உலக முன்னேற்றம் அடைவதாகவும் தன்னுடைய வாழ்வாதாரம் மிகவும் மேன்மை அடைவதாகவும் நினைத்துக் கொள்கிறான். ஆனால் இதற்குப் பின்னால் அவன் கொடுக்கவேண்டிய விலை என்ன என்பதை இன்னும் உணர்ந்து கொண்டதாகவே தெரியவில்லை. அதனை உணர்ந்து கொள்வதற்கு அவனுடைய பரிணாம வளர்ச்சியுடன் ஆயுதங்களின் வளர்ச்சியும் சேர்த்து பார்க்க வேண்டும்.

இயற்கை சீற்றங்கள் மற்றும் மற்ற விலங்குகளிடமிருந்து தன்னை தற்காத்துக்கொள்ள ஒவ்வொரு விலங்கும் தனக்கென்று ஒரு வாழ்விடத்தை உருவாக்கிக்கொள்ள முனைந்த பொழுது தங்களுக்கு இயற்கையாகவே வழங்கப்பட்ட பல்வேறு கவசங்களை இழக்க ஆரம்பித்தன. ஆதி மனிதனின் உடல் முழுவதும் மிகவும் அடர்த்தியான ரோமங்கள் அவனுக்கு பாதுகாப்பு அரணாக இருந்து வந்தன. தற்பொழுது கூட கரடி போன்ற மிருகங்களுக்கு இருக்கும் அடர்த்தியான ரோமங்கள், பாம்புகள் போன்ற விஷ ஜந்துக்களின் கடியிலிருந்து கூட அவற்றை காப்பாற்றி விடுகின்றன. எந்த ஒரு உயிரினமும் செயற்கையாக தனக்கென்று எந்த ஒரு ஆயுதத்தையும் உருவாக்க முயலும் பொழுது இயற்கை கொடுத்த இப்படிப்பட்ட பல்வேறு வசதிகளை இழக்க நேரிடும். இதுதான் ஒவ்வொரு ஆயுதத்திற்கு நீங்கள் கொடுக்கும் விலையாகும். நான் சென்ற பகுதியில் கூறியிருந்ததுபோல் நியாண்டர்தால் மனிதன் மிகவும் வலிமை வாய்ந்தவனாக இருந்தால்கூட பின்பு வந்த மனிதனால் அவனை எளிதாக வெல்ல முடிந்தது. இதற்கு காரணம் அவன் தன்னுடைய மூளையின் உதவியால் கண்டுபிடித்த ஆயுதங்கள் தான். ஆனாலும்கூட, ஆயுதங்களை கண்டுபிடித்த பின்பு அவனுக்கு முன்னர் இருந்த உடல் வலிமை முழுவதுமாக குறைந்துவிட்டது அல்லவா? இங்கேதான் இயற்கையின் விளையாட்டை உங்களுக்கு நன்கு புரிந்துகொள்ள முடியும். நீங்கள் எந்த ஒரு புதிய கண்டுபிடிப்பை உருவாக்கினாலும் இயற்கை வேறு ஒரு பொருளை உங்களிடமிருந்து எடுத்துக்கொண்டு ஒரு சம நிலையை உருவாக்கிவிடும்!

இயற்கையின் இந்த சமநிலை கோட்பாட்டை புரிந்து கொண்டாலும் கூட மனிதனின் ஆயுதம் உருவாக்கும் வெறி ஒருநாளும் குறைந்ததே கிடையாது. நீங்கள் கண்டுபிடித்த ஆயுதங்களை இரண்டு வகையாக பிரிக்க முடியும். வில்லம்பு, கோடாரி, கத்தி, சுத்தியல் முதலிய பொருட்களால் ஆகிய ஆயுதங்கள் முதல் வகை. பொருட்களே இல்லாமல் தன்னுடைய சிந்தனையில் உருவாக்கிய கோட்பாட்டை மட்டும் ஆயுதமாக வைத்துக்கொள்வது இரண்டாம் வகை. இந்த இரண்டு வகை ஆயுதங்களையும் உங்களுக்கு நான் விளக்கப் போகிறேன்.

பழங்குடி மனிதன் எதற்காக பயன்படுத்திய கல் முதல் இன்றைய நவீன விஞ்ஞானத்தில் உருவாகிய ஏவுகணைகள் வரை அனைத்தும் பொருட்களால் ஆகிய ஆயுதங்கள் தான். இந்த ஆயுதங்கள் உருவாக்கியதால் தான் இதன் ஒரே இடத்தில் ஒரு குழுவாக உட்கார்ந்துகொண்டு விவசாயம் செய்ய முடிந்தது. உலகின் முதன்மையான தொழிலாக உழவுத் தொழில் உருவாகுவதற்கு ஏர், கலப்பை போன்ற ஆயுதங்கள் மிகவும் உதவியாக இருந்தன. ஆனால் இயற்கையின் சமநிலை கோட்பாடு இங்கேயும் வந்துவிடுகிறது. பல்வேறு இனக்குழுக்கள் சேர்ந்து ஒரு சமூகமாக வாழும் பொழுது, சமூகங்களுக்கு இடையில் சண்டை சச்சரவு மற்றும் கருத்து வேறுபாடு வந்து விட்டது. இந்த சண்டையை வளர்ப்பதற்கும் முடிப்பதற்கும் மீண்டும் ஆயுதங்களை தேவைப்படுகின்றன. ஆயுதங்கள் ஏதும் இல்லாமல் மல்யுத்தம் செய்து வந்த இனக்குழுக்கள், ஆயுதங்களின் உதவியால் வேகமாக எதிரியை தாக்கி வீழ்த்த முடிந்தது. இருந்தாலும் கத்தி போன்ற ஆயுதங்களால் எதிரியின் அருகில் சென்றபின்பு தான் சண்டை போட முடியும். வில் அம்பை உருவாக்கிய பின்பு எதிரியின் அருகில் செல்லாமல் தொலைவிலிருந்தே அவனை வீழ்த்த முடிந்தது. இந்த ஆயுதத்தின் பரிணாம வளர்ச்சியால் உங்கள் உலகின் சரித்திரமே மொத்தமாக மாறிவிட்டது என்றால் அது மிகையாகாது. அப்படி சரித்திரம் மாறிய தருணங்களையும் அதற்குப் பின்னால் இருக்கும் விஞ்ஞானத்தையும் அடுத்த பகுதியில் விளக்கமாக கூறுகிறேன் அதுவரை காத்திருங்கள்.

(நான் சுழல்வேன்)

குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.

இளையகருப்பன்
இளையகருப்பன்
தமிழ் மீது பற்றுக்கொண்ட குழந்தை. வரலாறு, அறிவியல் மற்றும் பயணங்கள் மூலமாக உலகை தினமும் கற்றுக்கொள்ள முற்படும் மாணவன். கவிதைகள் மீது காதல் கொண்ட இளைஞன். தொழில்முறையில், கணிப்பொறி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளன், மாலைநேர எழுத்தாளன். மெய்ஞ்ஞானத்தை பகுத்தறிந்து கொள்ளத் துடிப்புள்ள முதியவன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -