இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்
இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்
நான்தான் காலம் பேசுகிறேன். அக அதிகாரத்தில் வெளி உலகுக்கும் உள்நுழைக க்கும் இடைப்பட்ட பாலமாக வீடு என்று ஒரு பொருள் எவ்வாறு உருவானது என்று சென்ற பகுதியில் கூறியிருந்தேன். அதற்குள் ஒளிந்திருக்கும் மேலும் பல விஷயங்கள் இந்த பகுதியில் காண்போம் வாருங்கள்.
பரிணாம மனோதத்துவம்
பூமியில் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியை ஆராய்ச்சி செய்து வந்த விஞ்ஞானிகள் வீடுகளைப் பற்றிய ஒரு முக்கியமான உண்மையை கண்டுபிடித்தனர். குரங்கிலிருந்து மனிதன் உருவாக பல்லாயிரம் ஆண்டுகள் எடுத்துக்கொண்டாலும், இந்த மாற்றத்திற்கு முக்கியமான தேவையான மூளை வளர்ச்சி என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் மிக வேகமாக நடந்தது. அந்தக் காலத்தில்தான் மனிதன் தனக்கென்று ஒரு வீட்டை உருவாக்கி அதில் ஒரு குழுவாக வசிக்க பழகிக் கொண்டான். அந்த நேரத்தில் வேறு எந்த பயமும் இல்லாமல் அவனால் நன்கு ஓய்வு எடுக்க முடிந்தது. ஓய்வு எடுக்கும் நேரத்தில் உடலில் உள்ள சக்தி முழுவதையும் அகத்தை பலப்படுத்துவதற்கு அவனால் செலவழிக்க முடிந்தது. இதனாலேயே குரங்கின் மூளையை விட மூன்று மடங்கு பெரிதான மூளை மனிதனுக்கு உண்டானது. மூளை பெரிதான உடன் அதன் மூலம் கிடைக்கக்கூடிய சிந்தனை வளமும் அறிவும் இயற்கையாகவே மனிதனுக்கு உண்டானது. இத்தனைக்கும் ஆதிமனிதன் வாழ்ந்த வீடுகள் தற்பொழுது நீங்கள் வசிக்கும் வீடுகளைப் போல முழுமையானது கிடையாது. இயற்கையில் உண்டாகும் குகைகளையும் மரக்கிளைகளின் மேலே உருவாகும் பொந்துகளையும் தனக்கேற்றதுபோல் வடிவமைத்துக் கொண்டு அவனால் நிம்மதியாக வாழ முடிந்தது. தனிமனிதனாக வீடு கட்டி வாழ்ந்து வந்தபோது அதிலும் சில சிக்கல் ஏற்பட்டது. வீட்டிற்குள் நிம்மதியாக இருக்க விடாமல் வெளியிலிருந்து வரும் மிருகங்களும் மனிதர்களும் அவனுக்கு தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தனர். அதிலிருந்து தப்பிப்பதற்காக ஒரு குழுவாக பல வீடுகளை கட்டிக் கொண்டு சமூகம் என்னும் ஒரு பெரிய வீட்டை உருவாக்கினர். இதன் மூலமாக ஒரு சமூகம் தன்னை மற்ற சமூகங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடிந்தது. காலம் செல்ல செல்ல, இந்த சமூகம் இன்னும் விரிவடைந்து ஊர், மாநிலம், நாடு என்று பல்வேறு வகையில் விரிவடையத் தொடங்கியது. பெரிய சமூகமாக உருவெடுத்த பின்பு முன்பைப் போல எளிதாக அதனை மனிதனால் நிர்வகிக்க முடியவில்லை. இதனை கட்டுக்கோப்பாக கொண்டு செல்வதற்கு அவன் உருவாக்கிய நிர்வாகமுறை தான் பின்பு அரசாங்கம் எனும் பெயர் பெற்றது! சுருக்கமாக சொல்லப்போனால் மனிதனின் மொத்த வரலாறும் வீடுகளை அடிப்படையாகக் கொண்டுதான் உருவாகியது.
மனிதனின் மனோதத்துவ மாற்றத்தால் உருவாகிய வீடுகள் பின்பு அதனை உருவாக்கிய மனிதனின் மனோதத்துவத்தை கூட ஒரு கண்ணாடியைப் போல எடுத்துக் காட்ட தொடங்கியது. உதாரணமாக, பனிக்கட்டி களில் வாழும் மனிதன் உருவாக்கிய இக்லூ(Igloo) வீடு நுழைவதற்கு மிகவும் சிரமமான சிறிய வாயிற்கதவு கொண்ட வீடுகளாக இருக்கும். மிருகங்களும் உறைபனியும் அவனது வீட்டுக்குள் நுழையாமல் இருப்பதற்கு இந்த சிறிய வாயிற்கதவு உதவியாக இருந்தாலும் மனோதத்துவ முறைப்படி அந்த வீடுகளில் வாழும் மனிதர்கள் பெரிய சமூகமாக ஒன்றுபட்டு வாழாமல் சிறிய சிறிய சமுதாயமாகவே பிரிந்து வாழ்ந்தனர். இதற்கு மாறாக மிகப் பெரிய வாயில்கள் கொண்ட கோட்டைகளை உருவாக்கிய மனிதர்கள் மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து வாழவைக்கும் அரசர்களாக காலப்போக்கில் மாறினர். வீடுகளின் கொள்ளளவு மட்டுமல்லாமல் அதன் வடிவத்தில் கூட பல்வேறு மனோதத்துவ மாறுபாடு உண்டானது. வீடுகளின் மேல் பகுதி தட்டையாக இருந்தால் இயற்கை சீற்றங்களால் வீடு சீக்கிரமாக உருக்குலைந்து அழிந்துவிடும் என்று கண்டுபிடித்த மனிதன் தான் எவ்வளவு காலம் நீடித்து வாழ வேண்டும் என்பதன் அடையாளமாக வீடுகளின் மேற்பரப்பை கூம்பு வடிவத்தில் கட்ட ஆரம்பித்தான். கூம்பு வடிவத்தில் அடிப்பாகம் அகலமாகவும் மேல் பக்கம் கூர்மையான தாக இருந்தது. இதனால் மழை பெய்யும் போது தண்ணீர் தங்காமல் வேறு எந்த இயற்கை சீற்றத்தினால் சீக்கிரமாக உருக்குலையாமல் திறமாக இருந்தது. ஒரு கட்டத்தில், அந்த கூம்பு வடிவம் எவ்வளவு பெரியதோ அதுவே அவனுடைய கௌரவமாக கூட மாறிப்போனது. எகிப்தில் வாழ்ந்த பண்டைய மன்னர்கள் இறந்த பின்பு கூட தாங்கள் நீடித்து வாழ வேண்டும் என்ற நப்பாசையில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது கூம்பு வடிவத்தில் தங்களுடைய கல்லறையை பிரம்மாண்டமாக உருவாக்கிக் கொண்டனர். இது தான் பிரமிட் என்று தற்காலத்தில் உங்களால் அழைக்கப்படுகிறது. மன்னர்களும் நிலச்சுவான்தார்களும் தங்கள் ஆளுமையை நிரூபிப்பதற்கு மிகவும் உயர்ந்த கூம்பு வடிவ மாளிகைகளையும் கோட்டைகளையும் கட்டிக்கொண்டனர். தங்களை விட மிகவும் உயர்வான இடத்தில் கடவுளை வைத்திருந்ததால் அனைத்து மதங்களிலும் மிகவும் உயர்ந்த கூம்பு வடிவ கட்டிடத்திற்குள் தங்களுக்குப் பிடித்த கடவுளை வைத்து பிரார்த்தித்து வந்தனர். இதனால்தான் எந்தவொரு சமூகத்திலும் மிகவும் உயர்ந்த கூம்பு வடிவ கட்டிடம், அங்கு இருக்கும் கோயில்கள் ஆகவே இருந்தது.
வீடுகளின் அளவு மற்றும் வடிவங்களுக்கும் ஒளிந்திருக்கும் வரலாற்றை பார்த்தாகிவிட்டது. ஆனால் இத்துடன் வீடுகளுக்கும் மனித மனங்களும் இருக்கும் தொடர்பு முடிந்து போய் விடுவதில்லை. சுருக்கமாக சொல்லப்போனால் வீட்டிற்கும் மனதிற்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை தெரியுமா? அதனை அடுத்த பகுதியில் விளக்கமாகக் கூறுகிறேன் காத்திருங்கள்.
(நான் சுழல்வேன்)
குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.