நான்காம் பரிமாணம் – 58

12. விட அதிகாரம் - 3ஆம் பகுதி

- Advertisement -

இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்

நான்தான் காலம் பேசுகிறேன். விட அதிகாரத்தில் நஞ்சின் பல்வேறு குணாதிசயங்களை கூறிக் கொண்டு வருகிறேன். சென்ற பகுதியில் எந்த ஒரு பொருளும் அதனை பயன்படுத்தும் அளவைப் பொறுத்து எவ்வாறு நஞ்சாக அல்லது அமுதமாக மாறுகிறது என்று கூறியிருந்தேன். இன்று நஞ்சு எவ்வாறு உருவாகிறது என்பதை பற்றி பார்க்க போகிறோம்.

உருமாற்றம்

நீங்கள் ருசித்து சாப்பிடும் உருளைக்கிழங்கு கூட சிலசமயங்களில் நஞ்சாக மாறக்கூடும் என்று உங்களுக்கு கூறியிருந்தேன் அல்லவா? ஒரு நன்கு வளர்ந்த உருளைக்கிழங்கு மாவுச்சத்தை அபரிமிதமாக கொண்டுள்ளது. இதனுடைய அடிப்படை மூலக்கூறு C6-H10-O5. அதாவது கரி, ஹைட்ரஜன், மற்றும் பிராணவாயுவின் கலவைதான். இதன் மீது வெயில் படும் பொழுது உருளைக்கிழங்கில் உள்ள அடிப்படை மாவுச்சத்து காற்று மற்றும் மண்ணில் இருக்கும் நைட்ரஜனுடன் சிறிது சேர்ந்து C45-H73-N-O15 என்னும் வேதிப் பொருளை உருவாக்குகிறது. இந்த புதிய வேதிப்பொருள் என்ன என்று தானே கேட்கிறீர்கள்? இதுதான் மனிதனைக் கொல்லக் கூடிய அளவுக்கு சக்தி வாய்ந்த சோலனின் (Solanine) எனும் விஷமாகும். இத்தனைக்கும் முழு உருளைக்கிழங்கும் விஷமாக மாற வேண்டிய அவசியமில்லை. அரை கிராமுக்கும் குறைவான இந்த விஷமே ஒரு மனிதனைக் கொல்லக் கூடியது. அதனால் மிகவும் குறைந்த அளவில் உருளைக்கிழங்கின் மேற்பரப்பில் இந்த விஷத்தை உருவாக்கிக்கொண்டு தன்னை ஒரு புதிய செடியாக உருவாக்கிக் கொள்வதில் உருளைக்கிழங்கு சமயோசிதமாக செயல்படுகிறது. அதே சமயத்தில் இந்த விஷம் கொண்ட உருளைக்கிழங்குகளை சூரிய ஒளி படாமல் ஒரு குழிக்குள் புதைத்து அதனை குளிர்பான இடத்தில் வைத்துக் கொண்டால் அந்த விஷம் முறிந்து மீண்டும் பழையபடி மாவுச்சத்தாக மாறிவிடும்.

அது சரி. ஒரு ரசாயன மூலக்கூறு தன்னுடைய வடிவத்தை சற்று மாற்றிக் கொண்டால் எவ்வாறு அதன் குணாதிசயம் கூட முழுமையாக மாறுகிறது? ஒரு உயிரினத்தை கொல்ல வேண்டுமென்றால் அதனை முழுவதுமாக அழிக்க வேண்டிய அவசியம் கிடையாது. அந்த உயிருக்கு சக்தி தரக்கூடிய செயலை மட்டும் கட்டுப்படுத்தி விட்டால் தானாகவே இறந்து விடும். சோலனின் விஷமானது உங்கள் உடலிலுள்ள திசுவை மொத்தமாக அழைக்காமல் அந்த திசுக்களுக்கு சக்தி கொடுக்கக்கூடிய பகுதியில் உள்ள ரசாயன பரிமாற்றத்தை நடக்கவிடாமல் இடையில் புகுந்து உட்கார்ந்து கொள்கிறது. இதைத் தவிர உடலின் வேறு எந்த பகுதியையும் அது தொந்தரவு செய்யாது. இதனை பார்த்து புரிந்து கொண்ட மனிதன் செய்த காரியம் என்ன தெரியுமா? உலகில் விளையும் உணவு வகைகள் தனக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கிய பூச்சிக்கொல்லி மருந்து என்னும் விஷம்!

உலகிலுள்ள உயிரினங்கள் யாவையும் ஒன்றை ஒன்று சார்ந்து தான் இருக்கிறது. இதனை சரியாக புரிந்து கொள்ளாத மனிதன், தன்னைத் தவிர வேறு எந்த உயிரினத்திற்கும் தான் வளர்க்கும் தாவரம் உணவு வழங்க கூடாது என்ற எண்ணத்தில் சோலனின் போன்ற விஷத்தை செயற்கையாக உருவாக்கினான். இந்த ரசாயனத்தை உணவுத் தாவரங்கள் வளரும் பொழுது அதன் மீது தெளித்து விட்டால் வேறு எந்த பூச்சி, பூஞ்சை அல்லது களைகள் உங்கள் உணவை கவர்ந்து செல்ல முடியாது. கடந்த 100 வருடங்களில் அபரிமிதமாக வளர்ந்த இந்தப் பூச்சிக்கொல்லி மருந்துகள், விவசாயத்தில் ஒரு மிகப் பெரும் புரட்சி செய்தது என்றால் மிகையாகாது. விவசாயிகள் பூச்சிக்கொல்லி மற்றும் ரசாயன உரங்களை பயன்படுத்தி தங்களது விளைச்சலை 10 மடங்கு வரை அதிகரிக்க முடிந்தது. விவசாயத்தில் மட்டுமல்லாமல் உங்கள் வீட்டில் கொசுக்களை விரட்ட பயன்படுத்தும் கொசு விரட்டி சுருள் கூட ஒரு விதமான விஷம்(Prallethrin) தான். உருளைக்கிழங்கு தன்னுள்ளே விஷத்தை உருவாக்கிக் கொள்ளும் வித்தையை பார்த்து செயற்கையாக விஷத்தை உருவாக்கிக் கொண்ட நீங்கள் ஒரு முக்கியமான விஷயத்தை பார்க்கத் தவறி விட்டீர்கள். இயற்கையாக தாவரங்கள் உருவாக்கும் விஷமானது ஒரு சமயத்தில் தானாகவே முறிந்து சாதாரண ஒரு பொருளாக மாறி விடும். 

ஆனால் நீங்கள் உருவாக்கிய பூச்சிக்கொல்லி மருந்துகள் அனைத்துமே எப்பொழுதுமே விஷமாகவே இருக்கக் கூடிய தன்மை கொண்டது. அரைக்கிணறு தாண்டிய கதையாக விஷமற்ற ஒரு பொருளை விஷமாக மாற்றிய நீங்கள் விஷத்தை மீண்டும் பழையபடி மாற்றுவதற்கு மறந்துவிட்டீர்கள். இந்த ஒரே காரணத்தால் உலகிலுள்ள அதிகப்படியான விளைச்சல் நிலங்கள் அனைத்தும் விஷம் ஏறி மலடாக போனது. மீதம் உள்ள நிலத்தில் உலகில் வாழும் அனைவரும் உணவுக்கு பயன்படுத்த வேண்டியிருப்பதால் அதிலும் விஷம் ஏற்றி உங்களுடைய வருங்கால சந்ததிகள் பயன்படுத்த முடியாத அளவிற்கு மாற்றிக் கொண்டு வருகிறீர்கள். விஷத்தை முழுமையாக உங்கள் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்றால் அதனுடைய முழு மாறுபட்டு சுழச்சியை நீங்கள் புரிந்து கொண்டால் ஒழிய உங்களுக்கு அது சாத்தியப்படாது.

அப்படியானால் மனிதர்கள் யாருமே விஷத்தின் முழு சுழற்சியை புரிந்துகொள்ளவே இல்லையா? கண்டிப்பாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள். அதற்கு எடுத்துக்காட்டு தான் விஷத்தை உயிர்காக்கும் மருந்தாக பயன்படுத்தும் வித்தை. அதனை விரிவாக அடுத்த பகுதியில் கூறுகிறேன் காத்திருங்கள்.

(நான் சுழல்வேன்)

குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.

இளையகருப்பன்
இளையகருப்பன்
தமிழ் மீது பற்றுக்கொண்ட குழந்தை. வரலாறு, அறிவியல் மற்றும் பயணங்கள் மூலமாக உலகை தினமும் கற்றுக்கொள்ள முற்படும் மாணவன். கவிதைகள் மீது காதல் கொண்ட இளைஞன். தொழில்முறையில், கணிப்பொறி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளன், மாலைநேர எழுத்தாளன். மெய்ஞ்ஞானத்தை பகுத்தறிந்து கொள்ளத் துடிப்புள்ள முதியவன்.

1 COMMENT

  1. மிகவும் பயனுள்ள கட்டுரை. இவ்வளவு எளிமையாக அதே நேரம் ஆழ்மானதானதை விளக்கி இருக்கும் பாங்கு என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது. சிறந்த நடை … ஏதோ நேரே ஒருவர் பேசுவது போல அமைந்திருந்தது. நன்றி

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -