நான்காம் பரிமாணம் – 57

12. விட அதிகாரம் - 2ஆம் பகுதி

- Advertisement -


இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்

காலம் என்னும் நான் “விட அதிகாரத்தில்” நஞ்சின் குணத்தைப் பற்றி பேச ஆரம்பித்து இருக்கிறேன். நீங்கள் அன்றாடம் சாப்பிடும் பொருட்களில் கூட நஞ்சு எப்படி உருவாகி மறைகிறது என்று சென்ற பகுதியில் கூறியிருந்தேன். இதனை முழுமையாகப் புரிந்துகொள்ள நஞ்சின் அடிப்படையைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். அதனை இந்த பகுதியில் கூறுகிறேன் கேளுங்கள்.

அமுதமும் விஷமும்

எந்த ஒரு பொருளின் அடிப்படை இயக்கத்தையும் நிறுத்தும் சக்தி படைத்த மற்றொரு பொருளைத்தான் நீங்கள் விடம் அல்லது விஷம் என்று கூறுகிறீர்கள். ஒரு பொருளின் நஞ்சு மற்றொரு பொருளுக்கு நஞ்சாக இருக்க தேவையில்லை என்றும் சென்ற பகுதியில் கூறியிருந்தேன். அதுபோலவே உயிரை காக்க கூடிய பொருளாக இருந்தால் கூட அது தன்னைத்தானே உருமாற்றிக் கொண்டு விஷமாக மாறக்கூடிய வாய்ப்பு இருப்பதைப் பற்றியும் சென்ற பகுதியில் கூறியிருந்தேன். இது எப்படி சாத்தியம்? அதனை புரிந்து கொள்வதற்கு முதலில் நீங்கள் ஒரு உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். 

இந்த உலகில் உள்ள எந்தப் பொருளை வேண்டுமானாலும் நீங்கள் நஞ்சாகவோ இல்லை அமுதமாகவோ எடுத்துக்கொள்ள முடியும். உதாரணமாக, நீங்கள் தாகமாக இருக்கும்போது ஒரு கோப்பை தண்ணீரை உங்களுக்கு கொடுத்தால் எப்படி இருக்கும்? தண்ணீரை அருந்தும் நொடியில் அமுதத்தை உண்பதுபோல் இருக்குமல்லவா? ஆனால் அதே சமயத்தில் ஒரு மிகப் பெரிய குடத்தில் தண்ணீர் கொடுத்து அதனை முழுவதும் உங்களை குடிக்கச் சொல்லி வற்புறுத்தினால் வயிறு உப்பி மரணமடைய நேரிடும். இங்கே அமுதம் விஷமாகிறது. இந்தியாவில் இருக்கும் பல்வேறு பண்டைய நகரங்களில் ஒன்பது விதமான உயிர் கொல்லும் நஞ்சினை எடுத்து அதன் மூலம் சிலை வடித்து அதனை இன்றும் வழிபட்டு வருகின்றனர். அந்த சிலையின் மீது பட்ட ஒரு துளி தண்ணீர் கூட அதிசயங்களை நிகழ்த்தும் மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இங்கே நஞ்சு அமுதமாக மாறுகிறது. ஆக மொத்தத்தில் நஞ்சு என்பது ஒரு பொருள் மட்டும் கிடையாது. இரண்டு பொருட்கள் ஒன்றோடொன்று வினைபுரியும் பொழுது ஏற்படும் விளைவுகள் தான் நஞ்சாகும் அமுதாகவும் மாறுகின்றன. இந்த ஒரு விஷயத்தை உங்கள் விஞ்ஞானிகள் புரிந்து கொண்டதன் விளைவுதான் நம்பமுடியாத ஆச்சரியங்களை கொண்ட விளைவாக மாறியது.

தென்னமெரிக்க நாடுகளில் வளரும் ஒருவித செடியில் கிடைக்கும் ஒரு நஞ்சை அங்குள்ள பழங்குடியின மக்கள் அம்புகளின் நுனியில் தடவி வில்லில் செலுத்தி அதன்மூலம் எதிரிகளை அழித்து வந்தனர். அந்த அம்பின் நுனியில் இருக்கும் செடியில் ரசம் உடலில் பட்டவுடன் பக்கவாதம் வந்தது போல் எதிரிகள் உடலை அசைக்க முடியாமல் கீழே விழுந்தனர். பொதுவாக எந்த ஒரு கொடிய விஷமும் ஒரு மனிதனை முழுமையாக கொன்றுவிடும். ஆனால் இந்த விஷம் முதலில் எதிரிகளின் நரம்பை மட்டும் குறிவைத்து தாக்கி அவர்களை செயலிழக்க வைத்து விடுகிறது. பல நூறு வருடங்கள் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த விஷத்தை சில நூற்றாண்டுகள் முன்பாக ஒரு ஆங்கில விஞ்ஞானி சேகரித்துக் கொண்டு வந்து ஆராய்ச்சி நடத்தினார். இந்த விஷத்திற்கு பின்பு கியூறாரே (Curarae) என்ற பெயரும் வைக்கப்பட்டது. இந்த நஞ்சு மொத்த உயிரையும் உடனடியாக சாகடிக்காமல் நரம்பு மண்டலத்தை மட்டும் குறிவைத்து தாக்குவது எப்படி(Neurotoxicity) எனும் ஆராய்ச்சி அப்பொழுதுதான் தொடங்கியது. இதன் முடிவில் கண்டுபிடிக்கப்பட்ட உண்மை என்னவென்றால் நம் உடம்பிற்கு முழுவதுமாக விஷமாக இல்லாமல் ஒரு சில பகுதிகளுக்கு மட்டும் விஷமாக செயல்படக் கூடிய மருந்துகள் இந்த உலகில் இருக்கின்றன என்பதுதான். 

இந்த ஆராய்ச்சியின் இறுதியில் அவர்கள் கண்டுபிடித்த ஒரு முக்கியமான பொருள் தான் குளோரோஃபார்ம் (Chloroform). ஆம். அதுவரையில் மருத்துவத்துறையில் எந்த ஒரு ரண சிகிச்சை செய்யும் பொழுதும் நோயாளியை துடிக்க துடிக்க உடலை கிழித்து மருத்துவம் பார்ப்பார்கள். அந்த வேதனையை தாங்கிக் கொண்டு உயிர் பிழைப்பவர்கள் மிகவும் குறைவாகத்தான் இருந்தார்கள். ஆனால் மொத்த உடலையும் அழிக்காமல் உணர்ச்சி மற்றும் நினைவை மட்டும் அழிக்கும் நஞ்சை இதுவரை ஆராய்ச்சி செய்த பல்வேறு விஷங்களின் மூலமாக விஞ்ஞானிகள் உருவாக்கியதன் விளைவு தான் இன்றைய மயக்கமருந்து! ஆரம்ப காலத்தில் இந்த மயக்க மருந்துகள் மிகவும் ஆபத்தாக இருந்தது. மயக்க மருந்துகளைப் பயன்படுத்திய பலபேர் தங்கள் உயிரையும் தியாகம் செய்ய நேர்ந்தது. இறுதியில் அதன் வீரியத்தை மிகவும் குறைத்து சில மணி நேரங்கள் மட்டுமே செயல்படக்கூடிய விஷத்தை உருவாக்கியதன் விளைவு தான் இன்றைய மருத்துவத்தின் அடிப்படையாக விளங்குகிறது. ஒரு விதத்தில் பார்த்தால் நீங்கள் பயன்படுத்தும் நவீன மருந்துகள் அனைத்துமே ஒரு விஷத்தின் வீரியம் குறைத்த வேதிப்பொருள் தான்! 


ஒரு பொருளின் அளவை கூட்டுவது அல்லது குறைப்பதன் மூலமாக விஷத்தை அமுதமாக இல்லை அமுதத்தை விஷயமாகவோ மாற்ற முடியும் என்பது உங்களுக்கு இப்பொழுது நன்றாக புரிந்திருக்கும். ஆனால் ஒரே அளவுடைய ஒரு பொருள் எப்படி தன்னுடைய குணத்தைமாற்றிக் கொள்கிறது? இதற்கு இன்னும் சற்று ஆழமான விஞ்ஞானத்தை புரிந்து கொள்ள வேண்டும். அதனை அடுத்த பகுதியில் கூறுகிறேன் காத்திருங்கள்.

(நான் சுழல்வேன்)

குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.

இளையகருப்பன்
இளையகருப்பன்
தமிழ் மீது பற்றுக்கொண்ட குழந்தை. வரலாறு, அறிவியல் மற்றும் பயணங்கள் மூலமாக உலகை தினமும் கற்றுக்கொள்ள முற்படும் மாணவன். கவிதைகள் மீது காதல் கொண்ட இளைஞன். தொழில்முறையில், கணிப்பொறி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளன், மாலைநேர எழுத்தாளன். மெய்ஞ்ஞானத்தை பகுத்தறிந்து கொள்ளத் துடிப்புள்ள முதியவன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -