நான்காம் பரிமாணம் – 53

11. நீரதிகாரம் - 3ஆம் பகுதி

- Advertisement -

இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்


நான்தான் காலம் பேசுகிறேன். நீரதிகாரத்தில் நீங்கள் அன்றாடம் உபயோகிக்கும் தண்ணீருக்குள் மறைந்திருக்கும் பல்வேறு அதிசயமான விஷயங்களைப் பற்றி பார்த்துக் கொண்டிருக்கிறோம். நீங்கள் நம்பும் படியாக இருக்கும் அதிசயங்களை சென்ற பகுதியில் பார்த்தோம். ஆனால் உங்களால் இன்னும் புரிந்துகொள்ள முடியாத பல ரகசியங்களும் தண்ணீருக்கு இருக்கிறது. அதனை இங்கே பார்ப்போம்.

ரகசியம்


உங்கள் உடலில் நோய் ஏற்பட்டால் அந்த நோய்க்கு 70 சதவீதத்திற்கும் அதிகமான மூலகாரணம் தண்ணீர்தான் என்று விஞ்ஞானம் கூறுகிறது. நாம் முன்பே பார்த்த தண்ணீரின் எளிதாக நகரும் தன்மை தான் உடலுக்கு ஒவ்வாத பல்வேறு கிருமிகளையும் உள்ளே கொண்டு வந்து சேர்க்க உதவியாக இருக்கிறது. ஆனால் தண்ணீர் எப்படி உடலுக்குள் கிருமியை கொண்டு வந்து சேர்க்கிறதோ அதே வேகத்துடன் கிருமிகளை வெளியேற்றவும் பல்வேறு வகையில் உதவியாக இருக்கிறது. இந்த மருத்துவம் இரண்டு வகைப்படுகிறது. முதலாவதாக தண்ணீரின் நகரும் தன்மை கொண்டே கிருமிகளை வெளியேற்றுவது. உலகில் பழமையான நாகரிகம் உயிர்ப்புடன் இருக்கும் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் மருத்துவம் இன்று வரை பயன்படுத்தப்படுகிறது. நோயின் தன்மைக்கு ஏற்ப தொடர்ந்து 10 நாட்கள் வரை வெறும் தண்ணீரை மட்டுமே உணவாக உட்கொண்டால் எந்த வியாதியும் குணமாகிவிடும் என்பது இந்த மருத்துவத்தின் அடிப்படைக் கோட்பாடு. இந்த வகை மருத்துவத்தை அறிவியலால் ஓரளவுக்கு விளக்கமுடியும். ஆனால் இரண்டாவதாக பயன்படுத்தப்படும் மருத்துவம் தான் மிகவும் விந்தையானது. இந்த விந்தை பலருக்கு புரியவில்லை என்றாலும் இது உலகம் முழுவதும் பரவி மிகவும் பிரபலமான மருத்துவமாக இன்றுவரை இருக்கிறது! அந்த மருத்துவத்தின் பெயர் தான் ஹோமியோபதி!

ஒரு பொருளின் அடர்த்தியை அளவுக்கு அதிகமாக குறைக்கும் பொழுது அதன் குணாதிசயமும் மொத்தமாக மாறுகிறது. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்றால் அளவுக்கு குறைத்தால் நஞ்சும் அமுதமாகி என்பதுதான் இந்தக் கோட்பாடு. இதனை நான் முன்னொரு அதிகாரத்திலும் குறிப்பிட்டு இருந்தேன். ஆனால் ஒரு பொருளின் அடர்த்தியை தண்ணீரை கலந்து குறைத்துக் கொண்டே போனால் என்ன ஆகும்? ஒரு கட்டத்தில் நீங்கள் ஒரு துளி தண்ணீர் கலந்த பொருளை எடுத்தால் அதில் அந்த உண்மையான பொருள் ஒரு அணு கூட இல்லாமல் வெறும் தண்ணீர் மட்டும் தான் இருக்கும். இப்படிப்பட்ட தண்ணீரை ஒருவருக்கு மருந்தாகக் கொடுத்தால் அது எப்படி வேலை செய்யும்? கொஞ்சம் கூட வேலை செய்யக் கூடாது அல்லவா? உங்களுக்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு ஹோமியோபதி மாத்திரையும் இப்படிப்பட்ட தான். நவீன விஞ்ஞானம் அனைத்திலும் ஹோமியோபதியை ஒரு போலியான மருத்துவம் என்றே இதுவரை கூறி வருகிறது. ஆனால் இந்த மாத்திரை சாப்பிட்ட பலபேர் தங்களுக்கு நாள்பட்ட வியாதி கூட சரியானதாக கூறிவருகிறார்கள். மிகவும் புகழ் பெற்ற விஞ்ஞானிகள் கூட இதனை ஒரு மாய விளைவு (Placebo effect) என்று கூறுகிறார்கள். அதாவது நீங்கள் மருந்து என்று நினைத்துக்கொண்டு எந்த ஒரு பொருளை சாப்பிட்டாலும் உங்கள் நம்பிக்கையால் மட்டுமே குணமடைந்து விட்டால் அது ஒரு மாய விளைவாகும். வெறும் தண்ணீரில் ஊரிய சக்கரை உருண்டைகளை சாப்பிட்டால் எப்படி நோய் குணமாகும் என்பது விஞ்ஞானிகளின் வாதம். இதற்கு பிரதி வாதமாக ஹோமியோபதி மருத்துவர்கள் தங்களுடைய மருந்தை (அதாவது தண்ணீரை) குதிரைகளுக்கு ஏற்படும் நோய்க்கு கொடுத்தனர். ஆச்சரியமாக அங்கே குதிரைகளின் நோய்கள் குணமானது. இதுவரை விஞ்ஞானத்தால் விளக்கம் கண்டுபிடிக்க முடியாத புதிர்களில் இது முக்கியமான ஒன்றாகும். இதற்கு ஹோமியோபதி மருத்துவர்கள் கொடுக்கும் ஒரே விளக்கம் தண்ணீரின் ஞாபக சக்தி!

அதெப்படி தண்ணீருக்கு ஞாபக சக்தி இருக்கும். நீங்கள் தண்ணீரை ஒரு பொருளுடன் கலக்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்தப் அந்தப் பொருளின் மூலக்கூறு தண்ணீருடன் உராயும் பொழுது அதன் குணாதிசயங்களில் சிலவற்றை தண்ணீரும் எடுத்துக் கொள்கிறது. தண்ணீரில் ஏற்படும் இந்த சிறிய மாற்றம் தான் உங்கள் உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களையும் குணப்படுத்த வல்லது என்பதுதான் இந்தக் கோட்பாடு. இந்தக் கோட்பாட்டை உங்கள் நவீன அறிவியலால் இதுவரை நிரூபிக்க முடியவில்லை. ஹோமியோபதியாவது  ஒரு பொருளை தண்ணீருடன் உராயும் பொழுது தண்ணீர் மூலக்கூறுகள் மாற்றம் அடைவதாக கூறுகிறது. உலகில் உள்ள அனைத்து மதங்களும் நல்ல சிந்தனை மற்றும் சில சொற்களை தண்ணீரின் முன் நின்று கூறுவதால் சாதாரண நீர் புனித நீராக மாறும் என்று நம்புகிறது. ஒவ்வொரு மதமும் இதற்குப் வைக்கும் பெயர்தான் வேறு ஒழிய புனித நீரின் அடிப்படை அனைத்து மதங்களிலும் ஒன்றுதான். ஒரு உயர் நிலையிலுள்ள மனிதன் தண்ணீர் வழியாக தன்னுடைய நற்சிந்தனைகளை மற்றவர்களுக்கும் நேரடியாக கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையின் விளைவுதான் இவையெல்லாம். இதனை எந்த அளவுக்கு நம்ப முடியும் என்பதை உங்களது முடிவுக்கே விட்டு விடுகிறேன்.

இங்கே அறிவியலால் அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சுகளில் இன்னொன்றையும் கூறிவிடுகிறேன். ஒரு பொருளை மிகவும் சூடு படுத்தினால் அது ஆவியாக மாறும். நீருக்கும் இது பொருந்தும். பின்பு அதனை குளிர்வித்தால் திரவ நிலையை அடையும். மழை உருவாவது இதனால்தான். அது போலவே மிகவும் குளிர்வித்தால் அது திட நிலையை அடைந்துவிடும். பனிக்கட்டிகள் இவ்வாறுதான் உருவாகிறது என்று உங்களுக்குத் தெரியும். இப்பொழுது நீங்கள் மிகவும் சூடான நீரை எடுத்துக் கொள்ளுங்கள். இன்னொரு பாத்திரத்தில் குளிர்ந்த நீரையும் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த இரண்டு விதமான நீரையும் நீங்கள் வெகு வேகமாக குளிர்வித்தால் எது முதலில் பனிக்கட்டி ஆகும் என்று நினைக்கிறீர்கள்? குளிர்ந்த நீரில் ஏற்கனவே குளிர்ச்சி இருப்பதால் முதலில் அதுதான் பனிக்கட்டியாகும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறானது. வெண்ணீர் தான் முதலில் பனிக்கட்டியாக மாறும் என்று பல்வேறு பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. இதற்கு எதிர்மறையாகவும் கூட சில கோட்பாடுகள் உண்டு. ஒவ்வொரு விஞ்ஞானியும் இதற்கு வெவ்வேறு காரணத்தை கூறினாலும் ஏன் இவ்வாறு நடக்கிறது என்று உங்கள் யாராலும் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது தான் உண்மை. இந்த நிகழ்வுக்கு நீங்கள் வைத்த பெயர் “பெம்பா விளைவு” (Mpemba effect). ஒரு விதத்தில் பார்த்தால் 70 சதவீதம் தண்ணீரை மூலப்பொருளாக கொண்ட மனிதனும் கூட இதேபோன்ற செயல்பாடுகளைக் கொண்டுள்ளான். ஒரு மிதமான அறிவாளி சிறந்த அறிவாளியாக மாறுவதை விட ஒன்றுமே தெரியாத முட்டாள் எளிதாக முழு அறிவாளியாக முடியும் என்று பல எடுத்துக்காட்டுகளை உங்களால் பார்க்க முடியும். புத்த மதத்தைத் தோற்றுவித்த சித்தார்த்தர் புத்தர் ஆக மாறிய கதையிலும் கூட இதனை உங்களால் பார்க்க முடியும். ஒருவேளை தண்ணீரின் குணம் தான் மனிதனின் குணமாக மாறியதோ?

சாதாரண தண்ணீருக்குள்ளேயே இவ்வளவு கட்டவிழ்க்க முடியாத விந்தைகள் ஒளிந்து கொண்டு இருந்தால் அது மற்ற பொருட்களை உருமாற்றும் அதிசயம் அலாதியானது. இதனை அடுத்த பகுதியில் கூறுகிறேன் காத்திருங்கள்.

(நான் சுழல்வேன்)

குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.

இளையகருப்பன்
இளையகருப்பன்
தமிழ் மீது பற்றுக்கொண்ட குழந்தை. வரலாறு, அறிவியல் மற்றும் பயணங்கள் மூலமாக உலகை தினமும் கற்றுக்கொள்ள முற்படும் மாணவன். கவிதைகள் மீது காதல் கொண்ட இளைஞன். தொழில்முறையில், கணிப்பொறி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளன், மாலைநேர எழுத்தாளன். மெய்ஞ்ஞானத்தை பகுத்தறிந்து கொள்ளத் துடிப்புள்ள முதியவன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -