நான்காம் பரிமாணம் – 41

9. வடிவ அதிகாரம் - 1ஆம் பகுதி

- Advertisement -

இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்

நான்தான் காலம் பேசுகிறேன். வடிவங்கள் என்றால் உங்கள் நினைவுக்கு முதலில் வருவது என்ன? பொதுவாக உங்களால் உணர முடிந்த எந்த ஒரு பொருளுக்கும் ஒரு வடிவம் இருக்கும். ஆனால் அந்த வடிவங்களுக்குள் ஒளிந்திருக்கும் ரகசியங்கள் எண்ணிலடங்காதவை. அவற்றில் சிலவற்றை இந்த அதிகாரத்தில் விரிவாக காணப்போகிறோம். தொடங்கலாமா?

வடிவமும் செயலும்

ஒரு பொருளுடைய செயலும் அதன் வடிவமும் எப்பொழுதுமே ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாகவே இருக்கும். உதாரணத்திற்கு ஒரு காகிதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை ஊதுகுழல் போல சுற்றி ஒரு முனையில் நீங்கள் பேசினால் மறுமுனையில் பேசியது சாதாரணமாகத்தான் கேட்கும். அதே காகிதத்தை நீங்கள் ஒரு கூம்பு போல சுழற்றி குறுகிய முனையில் பேசினால் அதன் அகண்ட முனையில் உங்கள் பேச்சு அதிக சத்தத்துடன் கேட்கும். இதுதான் ஒலிபெருக்கியின் அடிப்படையும் கூட. இங்கே நீங்கள் பேசியதும் காகிதமும் மாற்றம் அடையவில்லை. மாற்றம் அடைந்த ஒரே விஷயம் காகிதத்தின் வடிவம் மட்டும்தான். அதன் வடிவம் மாறிய உடனேயே செயலும் மாறி விட்டது அல்லவா? 

உலகில் பல்வேறு விதமான உயிரினங்கள் வாழ்ந்தாலும் எந்த ஒரு உயிரினமும் ஒரு குழுவாக வாழ்வதற்கு அடிப்படை காரணம் உருவம் தான். ஒரு பேருந்தில் ஒரு மனிதர் உட்கார்ந்து இருந்தால் அவர் அருகில் உட்கார்ந்துகொண்டு பயணம் செய்வதற்கு உங்களுக்கு எந்த ஒரு தயக்கமும் இருக்காது. அதே இடத்தில் ஒரு பாம்பு இருந்தால் யோசித்து பாருங்கள். அதன் உருவத்தை பார்த்த உடனே விலகி விடுவீர்கள் அல்லவா? மனிதர்கள் மட்டுமல்லாது பல்வேறு மிருகங்களும் குழுவாக வாழ்வதற்கு அடிப்படையாக அதன் வடிவம் தான் முதல் காரணமாக விளங்குகிறது.  இந்த அடிப்படைக் கோட்பாட்டை கொண்டு பல விசித்திரமான சம்பவங்களும் உலகில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

நீங்கள் விஞ்ஞானத்தில் எவ்வளவு வளர்ந்ததாக நினைத்துக் கொண்டாலும் நீங்கள் உலகில் கண்டுகொண்ட பூச்சிகள் மற்றும் விலங்குகள் எண்ணிக்கை மிகவும் சொற்பம் தான். உங்களுக்கு தெரிந்ததை விட, உங்களால் கண்டுபிடிக்கப்படாத உயிரினங்கள் தான் உலகில் மிகவும் அதிகமாக உள்ளது. எடுத்துக்காட்டாக, சில தசாப்தங்களுக்கு முன்னால் நீங்கள் கண்டுபிடித்த ஒரு வினோதமான உயிரினத்தின் பெயர் ” நடிக்கும் எண்காலி” (Mimic Octopus). பல்லாயிரம் வருடங்களாக கடலின் ஆழத்தை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் மனிதனால் இந்த உயிரினத்தை கண்டுபிடிக்க முடியவே இல்லை. அதற்கு காரணம் என்ன தெரியுமா? இந்த உயிரினம் தனக்கு வேண்டிய உருவத்தை எப்பொழுது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளும். உதாரணத்திற்கு ஒரு பெரிய மீன் இதனை துரத்துகிறது என்று வைத்துக்கொள்வோம். உடனடியாக இது அசல் பாம்பு போலவே மாறிவிடும். அதுபோலவே தன்னை தாக்க வரும் விலங்குகளை பொறுத்து துரத்தும் விலங்கு பயப்படும் உயிரினமாக உடனடியாக தன்னை உருமாற்றிக் கொள்ளும் சக்தி கொண்டது இந்த நடிக்கும் எண்காலி. கடலின் அடியில் வாழ்வதால் அங்கே வசிக்கும் சுமார் 15 வகை கொடிய மிருகங்கள் போல தன்னை உடனடியாக இது உருமாற்றிக் கொள்ளும். அதுமட்டுமல்லாமல் ஏதாவது ஒரு புதிய மிருகத்தை பார்த்தால் கூட அதைப் போலவே தன்னுடைய உடம்பை மாற்றிக் கொள்ளும் சக்தியும் இதற்கு உள்ளது. இப்படிப்பட்ட அபூர்வ சக்தி உள்ளதால் மனிதனால் இதனை ஒரு தனிப்பட்ட மிருகமாக கண்டுகொள்ளவே பல்லாயிரம் வருடங்கள் ஆனது.

வடிவத்தை மாற்றிக் கொள்வதால் எந்த ஒரு சண்டையும் இல்லாமல் ஒரு உயிரினத்தால் பாதுகாப்பாக வாழ முடிகிறது எனும் பொழுது வடிவங்களுக்குள் இயற்கை பல்வேறு ரகசியங்களை ஒளித்து வைத்துள்ளதா என்னும் கேள்வி உங்களுக்குள் எழலாம். இந்த அண்டத்தில் உள்ள அனைத்துப் பொருட்களும் தனக்கென்று ஒரு வடிவத்தில் இருப்பதற்கு ஒரு அடிப்படை காரணம் இருக்கிறது. அதற்கு ஒரு அடிப்படை கோட்பாடும் உள்ளது. அதன் பெயர்தான் சடத்துவம்(Inertia). அதாவது எந்த ஒரு பொருளும் அதன் தற்போதைய நிலைமையை மாற்றிக் கொள்வதற்கு சாதாரணமாக எந்த ஒரு முயற்சியும் செய்யாது. அதற்கென்று வெளியிலிருந்து ஒரு சக்தி வந்தால் மட்டும்தான் அதனை செய்ய முடியும். தன்னுடைய தற்போதைய நிலைமையை அப்படியே வைத்துக் கொள்வதற்கு எந்த வடிவம் அதற்கு ஏதுவாக இருக்குமோ அந்த வடிவத்தில் அது தன்னை உருமாற்றிக் கொள்ளும். உதாரணத்திற்கு பூமிப்பந்தை எடுத்துக் கொள்ளுங்கள். தன்னுடைய அச்சில் தொடர்ந்து சுழன்று கொண்டே இருப்பதற்கு வேறு எந்த உருவத்தில் இருந்தாலும் அதன் அச்சு சற்று பிசகிவிடும் வாய்ப்பு உள்ளது. அப்படி பிசகாமல் இருக்க அனைத்து பகுதிகளிலும் வழுவழுப்பான கூர்மை இல்லாத ஒரு வடிவம் தேவை. அதுதான் உருண்டை வடிவம். உருண்டை வடிவத்திற்கு இப்படி ஒரு காரணம் இருக்குமேயானால் இயற்கையில் தோன்றும் ஒவ்வொரு வடிவத்திற்கும் ஒரு காரணம் இருந்தாக வேண்டும் அல்லவா? அது என்னவென்று அடுத்த பகுதியில் கூறுகிறேன் காத்திருங்கள். 

(நான் சுழல்வேன்)

குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.

இளையகருப்பன்
இளையகருப்பன்
தமிழ் மீது பற்றுக்கொண்ட குழந்தை. வரலாறு, அறிவியல் மற்றும் பயணங்கள் மூலமாக உலகை தினமும் கற்றுக்கொள்ள முற்படும் மாணவன். கவிதைகள் மீது காதல் கொண்ட இளைஞன். தொழில்முறையில், கணிப்பொறி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளன், மாலைநேர எழுத்தாளன். மெய்ஞ்ஞானத்தை பகுத்தறிந்து கொள்ளத் துடிப்புள்ள முதியவன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -