நான்காம் பரிமாணம் – 39

8. அசை அதிகாரம் - 4ஆம் பகுதி

- Advertisement -

இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்

காலம் என்னும் நான் அசை அதிகாரத்தில் அசைவுகளின் பல்வேறு பரிணாமங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டு வருகிறேன். புலம்பெயர்தல் எனும் நிகழ்வு இயற்கையிலேயே உயிர்கள் அனைத்திற்கும் எவ்வாறு நடக்கிறது என்பதையும் அதனால் உண்டான சில நிகழ்வுகளையும் சென்ற பகுதியில் கூறினேன். புலம்பெயர்தல் மனித வாழ்வை எவ்வாறு மாற்றியது என்பதை இந்தப் பகுதியில் கூறுகிறேன். 

ஆப்பிரிக்காவும் மனிதனும்

உலகம் தோன்றிய நாளிலிருந்து பலதரப்பட்ட உயிரினங்களும் உலகின் அனைத்து பகுதிகளிலும் தனித்தனியாக தோன்றியிருந்தன. மனிதனுக்கும் குரங்குக்கும் இடையில் வாழ்ந்த ஆதிமனிதன் (Homo Erectus) ஒரே இடத்தில் தோன்றவில்லை. உலகின் பல்வேறு பகுதிகளிலும் ஒன்றோடு ஒன்று தொடர்பு இல்லாமல் ஆதி மனிதனாகத் தோன்றி வாழ்ந்து வந்தான். இருந்தாலும், ஒரே ஒரு இடத்தில் தோன்றிய ஆதி மனிதனை தவிர மற்ற அனைவரும் காலப்போக்கில் அழிந்து விட்டார்கள். இன்று உலகில் வாழும் அனைத்து மனிதர்களுக்கும் மூதாதையர் ஒரே இடத்திலிருந்து தான் வந்தார்கள் என்று நம்ப முடிகிறதா? இதனை உங்கள் நவீன விஞ்ஞானமும் ஒப்புக் கொண்டுள்ளது. இவ்வாறு உலகையே வென்ற ஆதி பழங்குடி மக்கள் உருவான பகுதிதான் மத்திய ஆப்பிரிக்கா! 

உலகிலுள்ள அனைத்து மக்களுக்கும் ஒரே முன்னோர்கள் தான் என்று வைத்துக்கொண்டால் அவர்கள் அனைவரும் பார்ப்பதற்கு ஒரே மாதிரிதான் இருக்க வேண்டுமல்லவா? ஆனால் ஆப்பிரிக்காவில் உள்ள மக்கள் கருமை நிறம் கொண்டவராகவும், ஐரோப்பாவில் உள்ள மக்கள் வெண்மை நிறம் கொண்டவர்களாகவும், இந்தியா போன்ற நாடுகளில் உள்ள மக்கள் கருப்பு மற்றும் வெள்ளைக்கு இடைப்பட்ட மாநிறமாகவும் இருப்பது எதனால்? நிறம் மட்டும் அல்லாமல் உடல் கட்டு, உயரம், பருமன் போன்ற அனைத்திலுமே உங்களுக்குள் பல்வேறு வித்தியாசங்கள் உண்டு. இதற்கு ஒரே காரணம் அந்த மனிதர்கள் மேற்கொண்ட புலப்பெயற்சிதான்!

தற்பொழுது நீங்கள் பார்க்கும் மத்திய ஆப்பிரிக்க மக்கள் எவ்வாறு இருக்கின்றனரோ, ஆதி மனிதனும் கிட்டத்தட்ட அதே போல் தான் இருந்தான். அப்படிப் பார்த்தால் ஆதி மனிதனுக்கு மிகவும் அருகாமையில் இருக்கும் மக்கள் ஆப்பிரிக்க மக்கள் தான். ஆரம்பத்தில் ஒன்றாக இருந்த ஆப்பிரிக்க சமூகம், தங்களுக்கு வேண்டிய உணவை வேட்டையாடி சாப்பிட்டு வந்தது. அப்பொழுது அங்கே இருந்த ஒரு சாரார் மத்திய ஆப்பிரிக்காவில் இருந்து வேறு ஏதாவது இடத்திற்கு சென்றால் அங்கு மேலும் செழிப்பாக இருக்கக்கூடும் என்ற நப்பாசையில் அங்கிருந்து புலம் பெயர் ஆரம்பித்தார்கள். இது நடந்து சுமார் ஒன்றரை லட்சம் முதல் இரண்டு லட்சம் வருடங்கள் வரை ஆகிறது. நான்கு திசைகளிலும் பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்ற ஆதிமனிதன் உலகில் உள்ள அனேக பகுதிகளுக்கும் சென்று தனக்கென்று ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கிக் கொள்ள ஆரம்பித்தான். வடக்கு நோக்கி செல்லும் பொழுது அங்கே பனிப் பிரதேசமாக இருந்ததால் சூரிய ஒளி அதிகமாக பிரதிபலித்து புற ஊதா கதிர்களை அதிகமாக மனிதன் மேல் பட்டது. அதனால் மனிதனுக்கு அதிகம் பாதிப்பு வராமல் இருப்பதற்கு உடல் இயற்கையான கருமை நிறத்தில் இருந்து வெண்மை நிறத்திற்கு மாற்றியது. இப்படி குளிர் அதிகமாக இருக்கும் இடங்களிலுள்ள மக்கள் வெண்மையாகவும் வெப்பம் அதிகமாக இருக்கும் பகுதியில் உள்ள மக்கள் கருப்பாகவும் மிதமான வெப்பநிலை உள்ள நிலத்தில் உள்ள மனிதர்கள் மாநிறமாகவும் மாறினார்கள். இந்த நிறத்தால் ஏற்பட்ட பிரிவினை வாதத்தில் பறிபோன உயிர்களுக்கு கணக்கே இல்லை!  இத்தனைக்கும் மனிதர்கள் அனைவருமே ஒருதாய் மக்கள் என்றும் தட்பவெப்ப சூழ்நிலைகளால் ஏற்பட்டதே இந்த நிறமாற்றம் என்றும் உங்கள் அறிவியல் கூட நிரூபித்திருக்கிறது. இந்த பிரிவினைக்கு ஆதி காரணம் என்று ஒன்று இருந்தால் அது மனிதன் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு நகர்ந்து மட்டும்தான். வேறு எந்த இடத்திற்கும் நகராமல் இருக்கும் ஆப்பிரிக்க மக்கள் இன்றும் ஆதிமனிதன் போலவே தோற்றமளிக்கிறார்கள்.

இந்த நகர்வு ஓரிரு வருடங்களில் நடந்தது கிடையாது. ஒரு குழு ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகர்ந்து அங்கே ஒரு நாகரீகத்தை உருவாக்குவதற்கு சுமார் பத்தாயிரம் வருடங்கள் கூட தேவைப்பட்டது. இந்த நகர்வுகளால் ஏற்பட்ட பல்வேறு பக்கவிளைவுகள் என்ன என்று உங்களுக்கு தெரியுமா? வேட்டையாடிக் கொண்டே தொடர்ந்து நகர்ந்து சென்ற மனிதர்கள் ஆங்காங்கே கிடைக்கும் பழங்கள் மற்றும் மிருகங்களை சாப்பிட்டனர். அப்பொழுது பழத்தில் உள்ள கொட்டையை கீழே போட்டு விட்டு முன்னே நகர்ந்து கொண்டே சென்றனர். சிறிது காலம் கழித்து முன்னேறிச் சென்ற இடத்தில் சரியாக உணவு கிடைக்காததால் வந்த வழியே மீண்டும் நடக்கத் தொடங்கினர். அப்பொழுது தான் சாப்பிட்டு போட்ட கொட்டை விழுந்த இடத்தில் ஒரு புதிய மரம் முளைத்து இருப்பதை ஒரு ஆதி மனிதன் கண்டுபிடித்தான். அப்படியானால் ஒவ்வொரு முறையும் சாப்பிட்டு விட்டு வீசி எறியும் கொட்டையை மண்ணில் புதைத்தால் சிறிது காலம் கழித்து அங்கு தனக்கு வேண்டிய பழம் அதிக அளவில் விளையும் என்பதை கண்டுபிடித்தான். அந்த ஆதி மனிதன் தான் உலகின் முதல் விவசாயி! இதனை கண்டுபிடித்த பின், தொடர்ந்து ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு நகராமல் விவசாயம் செய்து குடியானவன் என்ற பெயர் பெற்றான்.

ஒரு இடத்தில் குடி அமர்ந்தால் கூட மனிதனுக்கு நகரும் ஆசை கொஞ்சம் கூட விடவில்லை. அதே சமயத்தில் முன்பு போல சுறுசுறுப்பாக நடந்து செல்வது கடினமாக மாறியது. அதனை சரி கட்டுவதற்காக அவன் கண்டுபிடித்த பொருள்தான் சக்கரம். இதனை கண்டுபிடித்த ஆதி மனிதன் தான் உலகின் முதல் நவீன விஞ்ஞானி. இப்படி உலகின் அனைத்து நாகரீகங்கள், பிரிவினைகள், விஞ்ஞானம், விவசாயம் போன்ற அனைத்து தொழிலுக்கும் மூல காரணமாக விளங்கியது நகர்வு என்னும் ஒரே செயல்தான்! சுருக்கமாக சொல்லப்போனால் நகர்வு தான் சரித்திரமாக மாறுகிறது.

உடலும் அசைவும்

உலகின் மொத்த மாற்றத்திற்கும் நகர்வு தான் காரணமாக விளங்குகிறது என்றாலும் இவை அனைத்திற்கும் அடிப்படை ஆதாரமாக விளங்குவது மனித உயிர் மற்றும் உடல் தானே. அந்த உடலை இயக்கி ஒரு குறிக்கோளுடன் இயங்க வைப்பதற்கு காரணம் அந்த உடலுக்குள் இருக்கும் மனது தானே. இவற்றுக்கும் அசைவுக்கும் என்ன தொடர்பு? அசைவினால் இவற்றுக்குள் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன? அதனை அடுத்த பகுதியில் கூறுகிறேன் காத்திருங்கள். 

(நான் சுழல்வேன்)

குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.


இளையகருப்பன்
இளையகருப்பன்
தமிழ் மீது பற்றுக்கொண்ட குழந்தை. வரலாறு, அறிவியல் மற்றும் பயணங்கள் மூலமாக உலகை தினமும் கற்றுக்கொள்ள முற்படும் மாணவன். கவிதைகள் மீது காதல் கொண்ட இளைஞன். தொழில்முறையில், கணிப்பொறி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளன், மாலைநேர எழுத்தாளன். மெய்ஞ்ஞானத்தை பகுத்தறிந்து கொள்ளத் துடிப்புள்ள முதியவன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -