நான்காம் பரிமாணம் – 29

6. யுத்த அதிகாரம் - 4ஆம் பகுதி

- Advertisement -


இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்

காலம் என்னும் நான் யுத்த அதிகாரத்தில் பல்வேறு வகை போர்களைப் பற்றி கூறிக் கொண்டு வருகிறேன். யுத்தங்களால் ஏற்படும் நன்மை-தீமைகளைப் பற்றியும் கூறியுள்ளேன். பன்னெடுங்காலமாக யுத்தங்களையே பார்த்துக்கொண்டிருந்த மனிதனுக்கு அதன் மீது வெறுப்பு உண்டாக்கி அதனை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் என்ற கேள்வி அவனுக்குள் உண்டானது. அதனடிப்படையில் உண்டானவை தான் உலகிலுள்ள சட்டங்களும் அதன் பின்னால் உள்ள தத்துவங்களும். 

சட்டங்களும் தத்துவங்களும்

எப்பொழுது மனிதன் குழுவாக வாழ ஆரம்பித்தானோ, அப்பொழுதே இந்தக் குழுவிற்கு உள்ளேயும் வெளியேயும் அமைதியை பெறுவதற்காகவும் யுத்தத்தை தவிர்ப்பதற்காகவும் சட்டங்களும் உருவாக்கப்பட்டன. சட்டங்களின் தனித்தன்மை என்னவென்றால், மொத்த சமூகமும் ஒன்றாக அந்தச் சட்டங்களை பின்பற்றினால் மட்டுமே அது முழுவதும் பயன் தரும். சட்டத்தை ஒரு சிலர் மீறினால் கூட அந்த சட்டத்தின் உபயோகம் நீர்த்துப் போய்விடும். அதனை தடுப்பதற்காக சட்டத்தை மீறுபவர்களுக்கு தண்டனையும் உருவாக்கப்பட்டது. மிகவும் பழமையான காலத்தில் இருந்து இப்படிப்பட்ட சட்டங்கள் புழக்கத்தில் இருந்தாலும் முழுவதுமாக எழுதி பாதுகாக்கப்பட்ட சட்டம் என்பது உங்கள் காலத்திலிருந்து சுமார் நான்காயிரம் வருடம் பழமையான ஹமுராபி சட்டம்தான். இந்த சட்டத்தை சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் தலைக்குத் தலை, ரத்தத்துக்கு ரத்தம் என்பதுதான். அதாவது ஒருவரால் மற்றவருக்கு என்ன இழப்பு ஏற்படுகிறதோ அதே இழப்பை தண்டனையாக மீண்டும் கொடுத்து விடுவது தான். எடுத்துக்காட்டாக ஒருவர் தனது கையை இன்னொருவரால் இழந்துவிட்டால் இழப்பை ஏற்படுத்தியவரின் கையையும் வெட்டி விடுவார்கள். இப்படிப்பட்ட கொடுமையான சட்டங்கள் கூட அந்தக் குழுவை ஒரு ஒழுங்கு முறையில் வைத்திருப்பதற்கு உதவியது.

பல்வேறான சட்டங்களை மனிதன் உருவாக்கிய போதும் அதிலும் மனிதன் திருப்தியடையவில்லை. சட்டத்தால் ஒரு குழுவை வழிமுறை படுத்த முடிந்தது. ஆனால் அது மட்டும் போதவில்லை. ஒட்டுமொத்தமாக ஒரு சமூகத்தை எதை நோக்கி நகரத் செல்கிறோம் என்னும் தேடல் மனிதனுக்கு உருவானது. அந்த தேடலின் விளைவுதான் தத்துவங்கள். ஒவ்வொரு காரண காரியத்திற்கும் வேறுவிதமான சட்டங்கள் இருந்தாலும் அவை அனைத்தையும் ஒரே நூலில் கோர்ப்பது போல ஒரு குறிக்கோளை வகுப்பதனால், சமூகத்திற்கு மொத்தமாக ஒரு நோக்கத்தை உருவாக்க முடிந்தது. இதன் விளைவாக உருவான தத்துவங்களுக்கு பஞ்சமே இல்லை. அவற்றில் இரண்டு தத்துவங்கள் மட்டும் வெவ்வேறு துருவங்களாக இருந்தாலும் தற்போது வரை உயிர்ப்புடன் வாழ்ந்து வருகிறது. அது என்ன என்பதை விளக்கமாகக் கூறுகிறேன் கேளுங்கள்.

முதல் தத்துவம்: யுத்தம் என்பது எந்த ஒரு உயிரினத்தாலும் தவிர்க்க முடியாதது என்பது நிதர்சனமான உண்மை. யுத்தத்தின் முடிவில்  வெல்பவர்கள் தன்னுடைய முழு அதிகாரத்தை செலுத்த முடிவதும், தோற்றவர்கள் வெற்றி பெற்றவருக்கு கட்டுப்பட்டோ இல்லை அழிந்து போவதும் இயற்கையாக நடந்து கொண்டே இருக்கிறது. ஆகவே இந்த இயற்கையான நிகழ்வையே அரவணைத்துக் கொண்டு தீவிரமான இழப்புகளை ஏற்படுத்தும் யுத்தங்களை தவிர்த்துவிட்டு அவற்றை குறைந்த இழப்பு ஏற்படுத்தும் போட்டியாக மாற்றும் மனப்பான்மைதான் இந்த கோட்பாட்டின் சிறப்பு. இயற்கையாக நிகழும் யுத்தங்களை தவிர்த்து அதனை ஆரோக்கியமான போட்டிகளாக மாற்றுவதால் இதனை செயல்படுத்துவது மிகவும் எளிமையானதாக இருக்கும். ஆனால் எந்த ஒரு போட்டியிலும் வென்றவரே தொடர்ந்து வென்று கொண்டிருந்தால் சமூகத்தில் அதிகப்படியான ஏற்றத்தாழ்வுகளையும் அது சார்ந்த பிரச்சனைகளை உருவாக்கும். 

இரண்டாம் தத்துவம்:  யுத்தங்கள் இயற்கையாக உருவானாலும் அதனை முற்றிலும் நிறுத்துவதற்கு மனிதனால் முயற்சிக்க முடியாதா என்ன? அப்படிப்பட்ட முயற்சிதான் இந்த தத்துவத்தின் அடிப்படை. யுத்தங்கள் என்றுமே ஏற்றத்தாழ்வுகளால் தான் உருவாகிறது. அப்படியானால், ஏற்றத்தாழ்வுகள் அற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்கி விட்டால் அங்கே யுத்தங்கள் என்றுமே நிகழாது அல்லவா? ஆனால் இதனை செய்வதற்கு ஒரு முக்கிய பிரச்சனை உள்ளது. ஏற்றத்தாழ்வு இல்லாத ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டுமென்றால் அங்கே உள்ள மக்கள் அனைவருமே தாங்கள் சமமானவர்கள் என்பதை முழுவதுமாக நம்ப வேண்டும். அவ்வாறு இல்லாமல் ஒரு சிறிய பிரிவினர் கூட ஏற்றத்தாழ்வுகளை விரும்பினால் மொத்த சமுதாய கட்டமைப்பும் உருக்குலைந்து விடும். இந்த தத்துவத்தை ஒரு சமூகத்தின் தலைமையானது மக்களிடம் திணித்தால் கூட தலைவன்-தொண்டன் எனும் சமூக பாகுபாடு ஏற்பட்டு அதுவே அந்த தத்துவத்தை வீழ்த்திவிடும். 

நான் கூறிய முதல் தத்துவம் தான் உங்கள் உலகில் “முதலாளித்துவம்” எனப்படுகிறது. இரண்டாவது தத்துவம் “பொதுவுடமை” ஆகும். இரண்டு தத்துவங்களிலுமே நன்மை-தீமை கலந்துள்ளன. இவற்றிலேயே மிகவும் ஆபத்தானது எது தெரியுமா?  பொதுவுடமை போன்ற வெளித் தோற்றம் உடைய முதலாளித்துவம், முதலாளித்துவம் போன்ற வெளித் தோற்றம் உடைய பொது உடைமையும் தான். உலகிலேயே அதிக மனித உயிரிழப்பை ஏற்படுத்திய அதிகப்படியான யுத்தங்களின் மூலகாரணம், பொதுவுடமை பேசிய சர்வாதிகார முதலாளிகளால்  ஏற்பட்டது. அதே சமயத்தில், முதலாளித்துவ முறையில் பொதுவுடைமையை பின்பற்ற முயன்ற சமூகங்கள் முழுவதுமாக அடிமைகளாக மாற்றப்பட்ட வரலாறும் ஏராளமாக உள்ளது. 

இந்த இரண்டு தத்துவங்களும் ஒன்றோடு ஒன்று முரண்பட்டாலும் இவை இரண்டின் தேவையும் உங்களுக்கு மிகவும் முக்கியம். அதன் காரணத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் இதனை வெறும் சமூகத்தின் தத்துவங்களாக மட்டும் எடுத்துக் கொள்ளாமல் இந்த அண்டத்தில் இருக்கும் அனைத்து அமைப்புகளுக்கும் பொருத்திப் பார்த்தால் அதன் பின்னால் உள்ள பேருண்மை விளங்கும். அண்டத்தைப் புரிந்து கொள்வதற்கு முதலில் உங்கள் பிண்டத்தை (உடல்) புரிந்துகொள்ள வேண்டும். யுத்தத்திற்கும் உங்கள் உடல், மனதிற்கும் என்ன சம்பந்தம்? அதற்கும் இதே தத்துவம் செல்லுபடியாகுமா? அடுத்த பகுதியில் கூறுகிறேன். காத்திருங்கள்.

(நான் சுழல்வேன்)

குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.

இளையகருப்பன்
இளையகருப்பன்
தமிழ் மீது பற்றுக்கொண்ட குழந்தை. வரலாறு, அறிவியல் மற்றும் பயணங்கள் மூலமாக உலகை தினமும் கற்றுக்கொள்ள முற்படும் மாணவன். கவிதைகள் மீது காதல் கொண்ட இளைஞன். தொழில்முறையில், கணிப்பொறி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளன், மாலைநேர எழுத்தாளன். மெய்ஞ்ஞானத்தை பகுத்தறிந்து கொள்ளத் துடிப்புள்ள முதியவன்.

4 COMMENTS

  1. அருமை… வாழ்த்துகள்… ஒவ்வொரு தகவலும் அதற்கு நீங்கள் தரும் எடுத்துக்காட்டுகளும் சிறப்பு…

    • உங்களில் ஒருவன்தான் தோழரே!

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -