நான்காம் பரிமாணம் – 28

6. யுத்த அதிகாரம் - 3ஆம் பகுதி

- Advertisement -


இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்

நான்தான் காலம் பேசுகிறேன். யுத்த அதிகாரத்தில் போர்கள் எவ்வளவு இயற்கையானது என்பதை பற்றி இதுவரை பேசியிருந்தேன். போர்களால் ஏற்படும் இழப்பு எவ்வாறு இயற்கையிலேயே ஈடு கட்டப்படுகிறது என்றும் சொல்லியிருந்தேன். அப்படியானால் போர்களால் எந்த ஒரு இழப்பும் இல்லை எனும் கூற்று சரியாகுமா? அதற்கான பதிலை இங்கே பார்க்கப் போகிறோம். 

காலமாற்றமுறா அமைப்பு

எந்தவொரு சக்திக்கும் தொடக்கம், முடிவு, அழிவு  இல்லை என்று உங்கள் விஞ்ஞானம் கூறுகிறது. ஒரு இடத்தில் சக்தி மறைந்தால் மற்றொரு இடத்தில் அது வெளிப்பட்டுவிடும். யுத்தங்களில் இரண்டு சக்திகள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டு அழிவு ஏற்பட்டால் அந்த சக்தி வேறொரு இடத்தில் வெளிப்பட்டுவிடும். அப்படியானால் போர்களில் எங்கு தான் உண்மையான இழப்பு ஏற்படுகிறது? இந்த இழப்பு என்றுமே சக்தியில் இருப்பதில்லை ஆனால் காலத்தில் (என்னுள்ளே) தான் இருக்கிறது. என்ன குழப்பமாக இருக்கிறதா? சரி முதலில் இருந்து வருவோம்.

பெருவெடிப்பு ஏற்பட்ட பின்பு ஏற்பட்ட ஒளி வெள்ளத்தினால் மொத்தப் பிரபஞ்சமே மிகுந்த வெளிச்சத்துடன் இருந்தது. ஆனால் இப்போது நீங்கள் விண்வெளியை பார்த்தால் அதிகபட்சமாக இருள் தான் தென்படும். அந்த வெளிச்சம் எல்லாம் எங்கே போனது? உண்மையைக் கூறப்போனால் அந்த சக்தி அனைத்தும் தானாகவே அழிந்து விட்டது. அப்படியானால் சக்திக்கு அழிவே கிடையாது என்பது பொய்யா? சக்திக்கு அழிவு கிடையாது என்பது கால மாற்றம் அடையாத அமைப்புகளுக்கு (Time invariant system) மட்டும்தான் பொருந்தும். கால மாற்றம் அடையும் அனைத்து நிகழ்வுகளுக்கும் சக்தி அழிந்தே தீரும். இதனைத்தான் நோதர் கோட்பாடு (Noether theorem) என்று உங்கள் விஞ்ஞானம் கூறுகிறது. இதனை எளிமையாக புரிந்து கொண்டு மேற்கொண்டு செல்வோம். ஒரு பந்தை மேலிருந்து கீழே போடுகிறீர்கள். அப்பொழுது அதில் இருக்கும் நிலை ஆற்றலானது (Potential energy)  இயக்க ஆற்றலாக (Kinetic energy) மாறி ஆற்றல் எதையும் இழக்காமல் உருமாறுகிறது. அந்தப் பந்தை நீங்கள் மறுநாள் அதேபோல் கீழே போட்டாலும் இதே போன்றே செயல்படும். இப்படி எந்த ஒரு காலத்திலும் மாறாமல் அதே போன்று நிகழ்வதுதான் காலமாற்றமுறா அமைப்பு (Time invariant) என்று கூறுவீர்கள். இதைப் போன்ற அமைப்புக்கு சக்தி இழப்பு என்றுமே வராது. ஒரு உருவத்திலிருந்து மற்றொரு உருவத்திற்கு மாறிக்கொண்டே இருக்கும். அதே சமயத்தில் ஒரே மாதிரி உடல்வாகு கொண்ட ஒரு இளைஞனையும் ஒரு முதியவரை எடுத்துக்கொள்ளுங்கள். இருவரையும் ஒரு கல்லை குறிப்பிட்ட தொலைவிற்கு தூக்கி எறிய சொன்னால், இரண்டும் செல்லும் தூரம் வேறுபடும். அவர்கள் எறியும் தூரம் அவர்களுடைய உடல் எவ்வளவு தளர்வடைந்து உள்ளது என்பதைப் பொறுத்து அமையும். காரணம் உடலின் உறுதி தினமும் மாறிக்கொண்டே இருப்பது தான். இதனைத்தான் கால மாற்றமுறும் (Time variant) அமைப்பு என்று கூறுவீர்கள். இப்படிப்பட்ட அமைப்புகள் எதுவும் யுத்தம் செய்யும் பொழுது அதனால் ஏற்படும் இழப்புகள் அதிகம்.

யுத்தத்தின் இழப்பு

நாம் மேலே பார்த்த கோட்பாட்டின் வழிப்படி யுத்தத்தால் ஏற்படும் உண்மையான இழப்பு என்ன என்பதை நீங்களே யூகித்து இருக்க முடியும். யுத்தங்களால் ஏற்படும் ஒரே இழப்பு என்பது எப்பொழுதும் “காலம்” மட்டும்தான். பூமியில் நடந்த உலக யுத்தங்களில் பலதரப்பட்ட பொருட்கள் எரிந்து நாசமாகி இருந்தால்கூட அவை அனைத்துமே ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறுபட்டது. அவ்வளவுதான். இந்த யுத்தங்களால் பூமியின் எடை சிறிதளவுகூட மாறவில்லை. ஆனால் போர் முடிந்த பின்பு நீங்கள் தொலைத்த பல்வேறு வருடங்களையும் மனித உறவுகளையும் எப்பொழுதுமே உங்களால் மீட்டெடுக்க முடிந்ததில்லை. ஏனென்றால் மனிதனின் காலத்திற்கு ஒரு எல்லை உண்டு. அவர்கள் அனைவரும் கால மாற்றத்திற்கு உட்பட்டு மரணம் அடையக் கூடியவர்கள். இப்பொழுது யுத்தம் என்பது இயற்கையிலேயே நிகழக்கூடியது என்றும் அதனால் எந்த பொருட்களுக்கு இழப்பு ஏற்படாது என்றும் எதற்கு இழப்பு ஏற்படும் என்றும் பார்த்துவிட்டோம். யுத்தத்தை தவிர்க்கவே முடியாது என்பதால் எவ்வாறு வழிமுறை படுத்துவது என்பதில் கூட பல்வேறு சர்ச்சைகள் உண்டாகி அதற்காகவே தனியாக பல்வேறு சண்டைகள் நடந்துள்ளன. இவற்றில் பிரதானமாக இரண்டு தத்துவங்கள் உருவாக்கப்பட்டன. முதல் தத்துவத்தில் யுத்தத்தை இயற்கையாக எடுத்துக்கொண்டு எந்த ஒரு நிகழ்விலும் போட்டி ஏற்படுத்தி அதில் வெற்றி பெற்றவர்கள் தோல்வி அடைந்தவர்களை கட்டுப்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்டது. இரண்டாவது தத்துவத்தில் இயற்கையிலிருந்து மாறுபட்டு யுத்தம் இல்லா ஒரு பெரும் சமத்துவத்தை உருவாக்க முயற்சி செய்யப்பட்டது. அப்படிப்பட்ட சமத்துவத்தை உருவாக்குவதற்காக ஏற்பட்ட யுத்தம் தான் உலகிலேயே அதிக மனித உயிர்களை பறித்தது என்பது ஒரு விசித்திரமான உண்மை! இந்த தத்துவங்களின் பெயர்தான் “முதலாளித்துவமும்” “பொதுஉடைமையும்”! இவையிரண்டும் உண்மையிலேயே போரை வழி முறைப்படுத்தும் யுக்திகளா என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். உலக யுத்தம் முடிந்த பின்பு மனிதனுக்கு நேரடிச் சண்டையில் ஏற்பட்ட வெறுப்பினால் உருவாக்கப்பட்ட வழிமுறைகள் தான் இவை. போரை வழிமுறைபடுத்தும் விதிகள் என்று ஒன்று இருந்தால் போர் நடந்து கொண்டு இருப்பதாக தானே அர்த்தம். ஆகவே உலகப் போர் முடிந்த பின்பு வழிமுறை மாறியதே தவிர யுத்தங்கள் சற்றும் ஓய்ந்தபாடில்லை. அது எப்படி என்றும் இந்த இரண்டு தத்துவங்களின் அடிப்படையில் ஏற்படும் யுத்தங்களில் வித்தியாசமான கண்ணோட்டங்களை பற்றியும் அடுத்த பகுதியில் கூறுகிறேன். காத்திருங்கள்.

(நான் சுழல்வேன்)

குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.

இளையகருப்பன்
இளையகருப்பன்
தமிழ் மீது பற்றுக்கொண்ட குழந்தை. வரலாறு, அறிவியல் மற்றும் பயணங்கள் மூலமாக உலகை தினமும் கற்றுக்கொள்ள முற்படும் மாணவன். கவிதைகள் மீது காதல் கொண்ட இளைஞன். தொழில்முறையில், கணிப்பொறி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளன், மாலைநேர எழுத்தாளன். மெய்ஞ்ஞானத்தை பகுத்தறிந்து கொள்ளத் துடிப்புள்ள முதியவன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -