நான்காம் பரிமாணம் – 26

6. யுத்த அதிகாரம் - 1ஆம் பகுதி

- Advertisement -

இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்

நான்தான் காலம் பேசுகிறேன். என்னுடைய கண்ணோட்டத்தில் நான் பார்த்த பல்வேறு உலகியல் விஷயங்களை உங்களுடன் தொடர்ந்து பகிர்ந்து கொண்டு வருகிறேன். சென்ற பகுதியுடன் அனல் அதிகாரத்தை முடித்துக்கொண்டு இங்கு யுத்த அதிகாரத்தை தொடங்கப் போகிறோம். யுத்தம் அல்லது போர் உங்கள் உலகின் ஏதோ ஒரு மூலையில் எப்பொழுது நடந்து கொண்டே இருப்பதாக நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் நீங்கள் மூச்சுவிடும் ஒவ்வொரு கணத்திலும் உங்கள் உடலுக்குள் இருந்து தொடங்கி இந்த மொத்த பிரபஞ்சத்திலும் பல்வேறு யுத்தங்கள் தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கின்றன.

யுத்தமும் இயற்கையும்

மனிதனால் உருவாக்கப்பட்ட துப்பாக்கி குண்டுகள் முதல் அணு ஆயுதங்கள் வரை உள்ள பல்வேறு ஆயுதங்களால் உலகத்தில் ஏற்பட்ட பேரழிவுகள் ஏராளம் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். ஆயுதங்கள் செயற்கையாக உருவாக்கப்பட்டாலும் போர்களும் செயற்கையா என்னும் கேள்வி உங்களுக்கு ஏற்பட்டிருக்கலாம். அதற்கான பதில் இந்த அதிகாரத்தில் உங்களுக்கு கிடைக்கும். துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் மூலமாக உங்களுக்கு போரை எளிதில் உணர முடியும் என்பதால் அதில் இருந்தே தொடங்குவோம். ஒரு துப்பாக்கி அதன் குண்டின் வேகத்தின் மூலமாக மட்டும்தான் எதிரியை கொல்கிறது. அதேபோல் ஒரு வெடி குண்டு அது வெளிப்படுத்தும் வெப்பத்தின் மூலமாக எதிரியை அழிக்கிறது. இதே அளவு வேகத்தையும் வெப்பத்தையும் உங்களால் வேறு எந்த ஒரு கருவியும் இல்லாமல் உருவாக்க முடிந்தால் எப்படி இருக்கும்? அப்படி நேர்ந்தால் யுத்தத்தால் ஏற்படும் அழிவு இயற்கையானது தான் என்று ஒப்புக் கொள்வீர்களா? 

நான் மேற்கூறிய அதிகப்படியான வேகத்தையும் வெப்பத்தையும் ஒரே சமயத்தில் வெளிப்படுத்தும் உயிரினம் உங்கள் உலகில் உள்ளது. இந்த உயிரினத்தைப் பற்றி வேறு ஒரு அரிய தகவலை நான் முன்பே மற்றொரு அதிகாரத்தில் உங்களுக்கு கூறியுள்ளேன். ஆம். நான் முன்பு கூறிய கும்பிடு இறால் (Mantis Shrimp) மீனைப் பற்றித்தான் பேசப் போகிறேன். இந்த வகை மீனுக்கு பதினாறு விதமான வண்ணங்களை பார்க்கும் கண்கள் உள்ளது என்று முன்பு கூறியிருந்தேன். ஆனால் அது மட்டுமல்ல. இந்த மீனுக்கு இன்னொரு சிறப்பும் உள்ளது. இதன் முகவாய்க்கட்டை பகுதியில் இரண்டு பெரிய கொடுக்குகள் நீட்டிக்கொண்டிருக்கும். இந்தக் கொடுக்குகளுக்கு என்ன சிறப்பு தெரியுமா? மனிதர்கள் தயாரிக்கும் சிறிய வகை கைத்துப்பாக்கி களிலிருந்து வெளிப்படும் குண்டின் வேகத்தை விட அதிகப்படியான வேகத்துடன் இந்த கொடுக்கை இதனால் நகர்த்த முடியும். இந்த வேகத்தில் இது தன் எதிரியை ஒரு குத்து விட்டால் நண்டு போன்ற கனமான ஓடுகள் இருக்கும் உயிரினங்கள் கூட உடைந்து போய் அங்கேயே இறந்து விடும். உங்கள் உள்ளங்கை அளவு மட்டுமே இருக்கும் இது உங்களை ஒரு குத்து விட்டால், உங்கள் எலும்புகள் சேதமடைய கூடும். இந்தக் குத்தில் இன்னொரு சிறப்பம்சம் உள்ளது. கும்பிடு இறால் மீன் வேகமாக எதிரியை குத்தும் பொழுது அந்த ஒரு உராய்வில்  ஏற்படும் வெப்பம் சுமார் 7500 டிகிரி ஆகும். அதாவது சூரியனின் மேற்பரப்பில் இருக்கும் வெப்பத்தை விட மிகவும் அதிகமான வெப்பம் இது. நீங்கள் பயன்படுத்தும் பெருவாரியான வெடிப்பொருட்கள் வெளிப்படுத்தும் வெப்பத்தை விடவும் அதிகம். நீங்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் ஐம்பதில் ஒரு பகுதி நேரத்துக்குள் இதன் தாக்குதலை முடித்துவிட்டு சென்று விடும். இயற்கையாகவே இவ்வளவு சக்தி படைத்த ஒரு சிறிய உயிரினம் உலகில் இருக்கிறது என்றால் உங்களுடைய போர் யுக்திகள் இயற்கையானதா அல்லது செயற்கையானதா என்பதை மீண்டும் ஒருமுறை யோசித்துப் பாருங்கள்.

கும்பிடு இறால் மீன் தன்னுடைய எதிரிகளை மட்டும் தான் தாக்கும். மற்றபடி அதனை தொந்தரவு செய்யாமல் இருக்கும் எந்த ஒரு பிராணியையும் துன்புறுத்தாது. ஆனால் சில வகை உயிரினங்களின் போர்க்குணம் தன் கூடவே வாழும் சக உயிரினங்களையும் துன்புறுத்தும் அளவிற்கு அபாயகரமானது. நீங்கள் அன்றாடம் சாப்பிடும் தேனை சேகரிக்கும் தேனீக்கள் கூட அந்த வகைதான். எந்த ஒரு தேன்கூட்டுக்குள் ஒரு ராஜா தேனீ மற்றும் ஒரு ராணித் தேனீ இருக்கும். தேன் சேகரிப்பது எல்லாமே அந்த கூட்டில் வாழும் மற்ற வேலைக்கார தேனீக்கள் தான். ராணித் தேனீயைப் பற்றி நீங்கள் அதிகம் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஏனென்றால் அந்தக் கூட்டின் இறுதிவரை ராணித்தேனீ தலைவியாக இருக்கும். ராஜா தேனியின் தலைவிதியோ மிகவும் கொடுமையானது. ராஜா தேனி முதல் முறையாக ராணியுடன் கூடும் பொழுது ஏற்படும்  ஊடலில் அதன் கொடுக்கை இழந்து அப்போதே இறந்து போய்விடும். பின்பு வாழ்நாள் முழுவதும் ராணித்தேனீ மட்டும்தான் கூட்டின் தலைவியாக வாழும். இதைவிட ஒருபடி மேலே போய், கும்பிடு பூச்சி (Praying Mantis) எனும் ஒருவகை பூச்சி இணை சேரும் பொழுது, பெண் பூச்சியானது ஆண் பூச்சியின் தலையைக் கொய்து சாப்பிட்டுவிடும். 

நான் கூறிய எந்த உயிரினமும் செயற்கையாக கருவிகளை உண்டாக்கி சண்டையிடுவது இல்லை. ஆனால் உங்களுடைய யுத்தத்தை விட இதனுடைய சண்டை எந்த விதத்திலும் குறைந்தது அல்ல. அப்படியானால் யுத்தங்களும் இயற்கையின் விளையாட்டில் ஒரு பகுதியாகத்தான் இருக்க வேண்டும் அல்லவா? இதனை முழுவதுமாக புரிந்து கொள்வதற்கு மீண்டும் நாம் தொடக்கத்திலிருந்து வரவேண்டும். செல்லலாமா?

ஒளியின் யுத்தம்

பெருவெடிப்பு நிகழ்ந்த பொழுது ஏற்பட்ட அபரிமிதமான வெப்பமும் ஒளியும் அண்ட சராசரத்தை மொத்தமாக ஒளிவெள்ளத்தில் அமிழ்தக் கூடிய கூடிய சக்தி வாய்ந்தவை. அப்படி இருந்தும் பெருவாரியான இடங்களில் ஒளியும் இருளும் மாற்றி மாற்றி தெரிந்தன. இதற்குக் காரணம் ஒளியின் யுத்தம்தான். எந்த ஒரு ஒளியின் அலையும் அதற்கு நேர்மறையான மற்றொரு அலையை சந்தித்தால், இரண்டு அலையும் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டு அந்த இடம் இருள் அடைந்து விடும். இதனைத்தான் அறிவியலாளர்கள் ஒளியின் எதிர்மறை குறுக்கீடு (Light’s destructive interference) என்று குறிப்பிடுகிறார்கள். அப்படியானால் இரண்டு எதிர்மறை சக்திகள் மோதிக்கொண்டு சக்திகள் அழிந்து விடுகின்றனவா? சக்தியை யாராலும் உருவாக்கவோ அழிக்கவோ முடியாது. ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாற்ற மட்டுமே முடியும். ஆனால் இங்கே இரண்டு ஒளி சேர்ந்து ஒரு இருளை உருவாக்குகின்றது. இருள் ஒரு சக்தியாகுமா?  இதனைப் புரிந்து கொண்டாலே போர் அல்லது யுத்தத்தின் அடிப்படையை உங்களால் எளிதாக புரிந்து கொள்ள முடியும். அதனை அடுத்த பகுதியில் கூறுகிறேன் காத்திருங்கள். 

(நான் சுழல்வேன்)

குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.

இளையகருப்பன்
இளையகருப்பன்
தமிழ் மீது பற்றுக்கொண்ட குழந்தை. வரலாறு, அறிவியல் மற்றும் பயணங்கள் மூலமாக உலகை தினமும் கற்றுக்கொள்ள முற்படும் மாணவன். கவிதைகள் மீது காதல் கொண்ட இளைஞன். தொழில்முறையில், கணிப்பொறி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளன், மாலைநேர எழுத்தாளன். மெய்ஞ்ஞானத்தை பகுத்தறிந்து கொள்ளத் துடிப்புள்ள முதியவன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -