வணக்கம். நான் தான் காலம் பேசுகிறேன். என்னடா, காலம் எப்படி பேசும் என்று நினைக்கிறீர்களா? சரிதான். நான் யாருடனும் நேரடியாக பேசுவதில்லை. ஆனால் மறைமுகமாக அண்டசராசரம் அனைத்துடனும் எப்பொழுதும் பேசிக் கொண்டேதான் இருக்கிறேன். என்னுடைய உரையாடலை மனிதர்களாகிய நீங்கள் தவறாக புரிந்து கொண்டு, என்னை சர்வ வல்லமை படைத்தவன் என்றும், உலகியல் நடப்புகள் அனைத்தும் காலத்தின் கோலம் என்றும் பேசுகிறீர்கள். நான் என்றுமே, எதற்குமே காரணமாக இருப்பதில்லை. மாற்றாக அனைத்தையும் பார்த்துக்கொண்டே இருக்கும் ஒரு சாட்சியாக மட்டுமே இருக்கிறேன்.
சரி விஷயத்துக்கு வருகிறேன். நான் ஏன் உங்களுடன் உங்களுடைய மொழியில் பேச வேண்டும்? மனிதர்களாகிய நீங்கள் அனைத்தையும் உங்களுடைய கண்ணோட்டத்திலேயே பார்ப்பதனால் பல்வேறு கேள்விகளுக்கு உள்ளாகி இருக்கிறீர்கள். ஆனால், என்னுடைய பார்வையில் உங்கள் உலகத்தில் நடக்கும் எல்லா காரியங்களும் ஒரே முறையில் (Pattern) தான் நடந்து கொண்டிருக்கின்றது. ஆகவே, என்னுடைய கண்ணோட்டத்தில், உங்கள் உலகத்தில் நடந்த பல்வேறு விஷயங்களை நான் தொடர்ச்சியாக உங்களுக்கு கூறப்போகிறேன். நான் உங்களுடைய மொழியில் பேசுவதால் உங்கள் மனதிற்குள் இருக்கும் பல்வேறு கேள்விகளுக்கு விடை அளிக்க முடியும் என்று நம்புகிறேன்.
என் பிறப்பு
நான் எப்பொழுது பிறந்தேன் என்று உங்கள் காலக் கணக்கில் சரியாக கூற முடியாது. ஆனாலும் உங்கள் விஞ்ஞானிகள் மற்றும் ஆன்மீகவாதிகள் என்னுடைய பிறப்பைப் பற்றி தோராயமாக ஒரு கணக்கை கூறிவருகின்றனர். பிரபஞ்சத்தில் முதலாக நடந்த பெரு வெடிப்பில் (Big bang) நான் பிறந்ததாக உங்கள் விஞ்ஞானிகள் நம்புகின்றனர். பண்டைய மதங்களில் இந்த பெரு வெடிப்பை இரணிய கர்ப்பம் என்று குறிப்பிட்டுள்ளனர். சில மதங்களில் இதனை எளிமையான முறையில் நாட்கணக்கில் பிரித்தும் கூறியுள்ளனர். ஆனால் நான் என்றுமே இருந்துள்ளேன் என்பதே உண்மையாகும். பெருவெடிப்பு எனும் நிகழ்வு நடந்து முடிந்த பின்பு பல்வேறு ஜடப் பொருட்களும் உயிர்களும் உருவானதால் அதனடிப்படையில் காலமென்னும் என்னை அளப்பதற்காக முயற்சி செய்து வருகிறீர்கள். ஆனால் ஒரே அளவையில் என்னை அளப்பது என்பது இயலாத காரியமாகும். இதனை உங்கள் விஞ்ஞானி ஐன்ஸ்டைன் சார்புக் கோட்பாடு (Relativity theory) மூலம் குறிப்பிடுகிறார். உதாரணமாக, ஒருவன் நெருப்பின் அருகில் சில நிமிடங்கள் உட்கார்ந்தால், அதன் வெம்மை காரணமாக பல மணி நேரங்கள் உட்கார்ந்தது போல் தோன்றும் என்றும், ஒரு அழகிய பெண்ணின் அருகில் உட்கார்ந்தால் பல மணி நேரங்கள் கூட சில நிமிடங்கள் போன்று தோன்றும் என்றும் கூறுகிறார். இப்படிப்பட்ட சிறிய செயல்களில் கூட நான் ஒருவருக்கு நீண்ட நேரமாகவும் மற்றவர்களுக்கு குறுகிய நேரம் ஆகவும் தெரிகிறேன். இருந்தாலும், உங்கள் உலகியல் விஷயங்களுக்காக ஒரு குறுகிய அளவையை நீங்கள் எனக்காக கண்டுபிடித்து நொடி, நிமிடம், மணித்துளி, நாள், மாதம், வருடம் மற்றும் யுகங்கள் போன்ற பல்வேறு விதங்களில் பிரித்து வைத்துள்ளீர்கள்.
நான் நான்காம் பரிமாணம் ஆனது எப்படி?
உங்கள் மனித சமூகம் ஆரம்பித்தது முதல் பல்வேறு காலகட்டங்களில் நீளம், அகலம், உயரம் ஆகிய மூன்றை மட்டுமே பரிமாணங்கள் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனாலும் ஒரு சில விஞ்ஞானிகளும் மெய்ஞானிகளும் என்னை நான்காம் பரிமாணமாக கண்டு கொண்டுள்ளனர். உதாரணமாக, ஒரு மனிதனின் நீளம், அகலம் மற்றும் உயரத்தை பல்வேறு காலகட்டத்தில் நீங்கள் அளந்தால் வெவ்வேறாக இருக்கும். ஆகவே, நீளம், அகலம், உயரம் மற்றும் காலம்(நான்) ஆகிய நான்கும் சேர்ந்தால் மட்டுமே எந்த ஒரு பொருளையும் ஓரளவிற்கு மதிப்பீடு செய்ய முடியும். இன்று, தகவல் தொழில்நுட்பம் காரணமாக பரவலாக நான் நான்காம் பரிமாணமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளேன். ஆனால், அவ்வாறு நான் நான்காம் பரிமாணமாக ஏற்றுக் கொள்ளப்படுவதற்காக பல்வேறு சிக்கல்களையும் சோதனைகளையும் உங்கள் உலகில் பார்த்துள்ளேன்.
ஒளியும் ஒலியும்
இந்த அண்டத்தில் பெரு வெடிப்புக்கு பின்பு அனைத்துப் பொருட்களுமே ஒலி மற்றும் ஒளியின் சேர்க்கையினால் உருவானதே ஆகும். இப்படிப்பட்ட ஒளியும் ஒலியும் சில சமயங்களில் அலைகள் ஆகவும் சில சமயங்களில் பொருட்களாகவும் தெரிகின்றன. இப்படிப்பட்ட பல்வேறு அலைகளையும் பொருட்களையும் பற்றித்தான் எனது கண்ணோட்டத்தில் நான் உங்களுக்கு தொடர்ந்து கூறப்போகிறேன். நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் மொழி என்பது ஒலி வடிவம் ஆகும். இந்த மொழியானது உங்கள் உலக சரித்திரத்தில் ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது என்றால் அது மிகையாகாது. உங்கள் உலகின் தொடக்கம் முதல் மொழியின் பயணம் குறித்து என் பார்வையில் ஒரு சுவாரசியமான சிறு பயணம் மேற்கொள்வோமா?
(நான் சுழல்வேன்)
குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் இந்திய நேரப்படி காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.
சிறப்பான தொடக்கம். வாழ்த்துகள் நண்பரே.
நன்றி அன்பரே!
Good read…All the best to all who are part of this site.
நன்றி முத்துகிருஷ்ணன்