திருஷ்யம் 2 – திரைவிமர்சனம்

- Advertisement -


சில வருடங்களுக்கு முன்னால் கமல் மற்றும் கௌதமி இணைந்து நடித்த பாபநாசம் படம் உங்களுக்கு நினைவிருக்கலாம். பாபநாசத்தை அருமையானதொரு குடும்ப திகில் படம் என்று கூறலாம். அந்தப் படம் மலையாளத்தில் வெளிவந்த த்ரிஷ்யம் என்னும் படத்தின் மொழிபெயர்ப்பு ஆகும். இரண்டு படங்களையும் இயக்குனர் ஜீது ஜோசப் இயக்கியுள்ளார். தற்பொழுது அந்த மலையாளப் படத்தின் இரண்டாம் பாகம், அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ளது. அந்தப் படத்தின் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம். 


விமர்சனம்


பாபநாசம் மற்றும் திருஷ்யம் இரண்டும் காட்சிக்கு காட்சி ஒரே படம்தான். அந்தப்படத்தில் படத்தின் நாயகன் (கமல்ஹாசன்/மோகன்லால்) தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக ஒரு கொலையை மறைக்க முயற்சி செய்கிறார். படத்தின் இறுதியில் தனது முயற்சியில் கதாநாயகன் வெற்றி பெற்றதாகவும் காட்டப்படுகிறது. கொலையான பிணத்தை எங்கு மறைத்து வைத்துள்ளார் என்பது கதாநாயகனுக்கும் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு மட்டும் தான் தெரியும். படத்தில் வேறு யாருக்குமே தெரியாது. படம் மிகவும் விறுவிறுப்பாகவும் நம்பும் படியாகவும் எடுத்தாலும் படத்தின் இறுதியில் எந்த ஒரு மனிதனாலும் தன்னை சுற்றி உள்ள அனைவரையும் இந்த அளவுக்கு ஏமாற்ற முடியுமா என்ற கேள்வி நமக்கு கண்டிப்பாக எழும். அந்தக் கேள்விக்கு திருஷ்யம்-2 படம் விடையாக அமைந்துள்ளது.


கதைப்படி, முதல் படத்தில் நடந்த அனைத்து சம்பவங்களும் முடிந்து ஆறு வருடங்கள் ஆகிவிட்டது. என்னதான் தெளிவாக கொலையை மறைத்தாலும் ஊர் மக்களிடம் தொடர்ச்சியாக பல்வேறு கேள்விகள் எழுந்து ஊரில் உள்ள அனைவரும் கிட்டத்தட்ட மோகன்லால் குடும்பம் கொலை செய்தது என்பதை நம்ப ஆரம்பித்து விடுகிறார்கள். இதனிடையில் மோகன்லால் தனியாக ஒரு திரையரங்கம் ஆரம்பித்து படம் எடுக்கவும் முயற்சிக்கிறார். குடும்ப பொருளாதாரமும் வாழ்க்கை முறையும் நன்கு வளர்ந்து விடுகிறது. என்னதான் வளர்ந்தாலும் அவர்கள் செய்த கொலை அவர்களின் மனதை தொடர்ந்து பயமுறுத்திக் கொண்டே இருக்கிறது. இதனால் மோகன்லாலின் மூத்த மகளுக்கு வலிப்பு நோய் கூட வந்துவிடுகிறது. 


எந்த ஒரு சின்ன விஷயத்திற்கும் அவர்கள் குடும்பம் எவ்வாறு பயப்படுகிறது என்பதை படத்தில் அருமையாக காட்டியுள்ளார்கள். குறிப்பாக மனைவியாக வரும் மீனா தன்னுடைய கதாபாத்திரத்தில் மிளிர்கிறார். உள்ளுக்குள்ளே பயம் இருந்தாலும், காட்டிக்கொள்ளாமல் மோகன்லால் கொடுக்கும் முகபாவனைகள் மிகவும் எதார்த்தம். ஆனால் படத்தின் முதல் ஒன்றே முக்கால் மணி நேரம் இதுபோன்ற எதார்த்தமான விஷயங்கள் மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டு நம்மை சோர்வடைய வைக்கிறது. இடை இடையில் முதல் பகுதியில் நமக்கு வந்த பல்வேறு கேள்விகளுக்கும் பதில் கிடைக்கிறது. உதாரணமாக முதல் பகுதியில் நாயகன், கொலை செய்யப்பட்ட உடல் புதைக்கப்பட்ட இடத்தை மீண்டும் தோண்டி அந்த இடத்தில் ஒரு விலங்கைப் புதைப்பார். இது போன்ற விஷயங்களை தடயவியல் நிபுணர்கள் மிகவும் எளிதாக கண்டுபிடித்து விடுவார்கள். ஆனால் அது எப்படி நிகழாமல் இருந்தது என்பதற்கு இந்த படத்தில் தெளிவான விளக்கம் கொடுக்கிறார்கள். 


இரண்டரை மணி நேர படத்தில் ஒன்றே முக்கால் மணி நேரம், பெரிய விறுவிறுப்பு எதுவுமில்லாமல் சில ரசிக்கும்படியான சம்பவங்கள் நிகழ்கிறது. அதன் பின்பு கடைசி முக்கால் மணி நேரத்தில் தான் படத்தின் மொத்த கதையும் நிகழ்கிறது. பிணம் எங்கு ஒளித்து வைக்கப்பட்டுள்ளது என்பதை கடைசி முக்கால் மணி நேரத்தில் எல்லாருக்கும் தெரியும் படியாக கூறிவிடுகிறார்கள். அதன்பின்பு செய்த குற்றத்தை நியாயப்படுத்துவதற்காக மோகன்லால் நீதிமன்றத்தில் போராடுவார் என்று எதிர்பார்க்கும் வேளையில் தான் படமே வேறு திசைக்கு திரும்புகிறது. முதல் பாகத்தில், எதிர்பாராமல் நடந்த கொலையில் இருந்து குடும்பத்தை காப்பாற்றுவதற்காக நாயகன் ஒரு யுத்தத்தை நடத்துகிறார் என்றால் இரண்டாம் பாகத்தில் நடப்பதை ஒரு சர்ஜிக்கல் ஸ்டிரைக் என்று கூறலாம். இந்த படத்தில் தேவையில்லாமல் பல காட்சிகள் வைத்துள்ளார்களோ என்ற நமது கேள்விக்கு கடைசி முக்கால் மணி நேரத்தில் பதிலும் கிடைத்து விடுகிறது. அவ்வளவு விறுவிறுப்பான காரணங்களையும் திருப்பங்களையும் படத்தின் இறுதியில் கொடுத்து அசத்துகிறார் ஜீது ஜோசப். சட்டம் மற்றும் காவல்துறை எவ்வாறு செயல்படும் என்பதை எந்த ஒரு லாஜிக் மீறலும் இல்லாமல் அழகாக கொடுத்துள்ளார். முதல் பாகத்தில் ஏற்பட்டது போல் இரண்டாவது பாகத்திலும் வேறு சில இடங்களில் லாஜிக் மீறல்கள் இருக்கத்தான் செய்கிறது. இருந்தாலும், அதையும் மீறி நம்மை ரசிக்க வைப்பதில் மொத்த படக்குழுவும் கண்டிப்பாக வெற்றி பெற்றுள்ளது. படத்தின் முதல் பாதியை கொஞ்சம் பொறுமையாக கடந்துவிட்டால் இரண்டாம் பாதியில் திருப்பங்களும் சுவாரசியமும் நிச்சயம்.


இதற்குமேல் கூறினால் அது படத்தின் சுவாரஸ்யத்தை குறைத்து விடும் என்பதால் இங்கேயே நிறுத்திக் கொள்கிறேன். இந்த வாரக் கடைசியில் நீங்கள் கண்டிப்பாக பார்த்து மகிழ வேண்டிய படம்தான் திரிஷ்யம் 2. இந்தப் படத்தை OTTஇல் வெளியிடாமல் திரையரங்கத்தில் வெளியிட்டிருந்தால் பார்ப்பதற்கு இன்னும் கூட சுவாரசியமாக இருந்திருக்கலாம்.

இளையகருப்பன்
இளையகருப்பன்
தமிழ் மீது பற்றுக்கொண்ட குழந்தை. வரலாறு, அறிவியல் மற்றும் பயணங்கள் மூலமாக உலகை தினமும் கற்றுக்கொள்ள முற்படும் மாணவன். கவிதைகள் மீது காதல் கொண்ட இளைஞன். தொழில்முறையில், கணிப்பொறி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளன், மாலைநேர எழுத்தாளன். மெய்ஞ்ஞானத்தை பகுத்தறிந்து கொள்ளத் துடிப்புள்ள முதியவன்.

2 COMMENTS

 1. படத்தைப் போலவே விறுவிறுப்பான விமர்சனம்.

 2. படம் OTT தளத்தில் வந்தவுடனே பார்த்து வியந்து மகிழ்ந்தேன்,
  சினிமா பிரியர்கள் அனைவருக்கும்
  நல்விருந்தாக அமையும் இப்படம்.

  சிலர் விமர்சனம் என்ற பெயரில் படத்தில் முக்கியமான முடிச்சிகளை ரிவில் செய்து சுவாரஸ்யத்தை கெடுத்துவிடுகிறார்கள்.
  அப்படி எதுவுமில்லாமல் நல்லதொரு விமர்சனமாக எழுதியிருக்கிறீர்கள்.நன்று

  எதார்த்தம்,நம்பகத்தன்மை நிரம்பிய சுவாரஸ்யமான திரைக்கதை.
  அதற்கு உணர்வு கொடுத்த சிறந்த நடிப்பு.படம் ரொம்ப பிடிச்சிருக்கு.

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -