தாய்மொழி போற்றுதும்..
தமிழ்மொழி போற்றுதும்…!

தாய்மொழிநாள் சிறப்புப் பதிவு

- Advertisement -

இன்று உலகத் தாய்மொழிநாள்.

எல்லா மொழிகளும் சிறப்பானவைதாம்.. ஆனாலும் அவரவர் தாய்மொழி என்பது அவரவர்க்குத் தனிச்சிறப்பும் பேரன்பும் உடையதாய் உணர்வோடு ஒன்றிவிடுகின்றது. மொழியின்பால் உள்ளன்போடு ஒட்டுதல் இல்லாதோர் மட்டுமே மொழிச்சிதைவினை மிகுதியாய் நடத்துகின்றனர்.

வெள்ளையனுக்கு அடிமையாய்க் கிடந்த நாடுகளிலெல்லாம் ஆங்கிலம் தன் வேரினை ஆழமாக ஊன்றி அகலமாகப் பரப்பியது. அடிமையாட்சி ஒழிந்தபின்னும் நம்மில் பலர் அதை ஒரு மொழியாகப் பார்க்காமல் பெருமையாகவும் தகுதியாகவும் பார்க்கத் தொடங்கியதுதான் பெரும்பிழை..
அதுவே இன்னும் முன்னேறி அடுத்தகட்டமாக நம் தாய்மொழியினைத் தரம் தாழ்த்திப் பேசவும் குறைசொல்லவும் தொடங்கியது மாபெரும் குற்றம்.

பேச்சுவழக்கினில் பல ஆங்கிலச்சொற்கள் பிரிக்க முடியாத அளவுக்குக் கலந்துவிட்டது வருந்தத்தக்கது. அதைச் சட்டென்று மாற்றிவிட முடியாது. கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக்கொள்ள வேண்டும். ஆனால் எழுத்துத்தமிழ் என்பது அவ்வாறல்ல. பேசுவதைக்காட்டிலும் எழுதும்போது நாம் பொறுமையாகத்தான் எழுதுகிறோம். மிக அழகாக ஆங்கிலச்சொற்கள் கலவாமலேயே நம்மால் எழுத முடியும். ஆனால் நம்மில் பலர் அதைச் செய்வதில்லை. சரி பக்கம் பக்கமாக எழுதும்போது ஒவ்வொரு ஆங்கிலச்சொல்லுக்கும் தமிழ்ச்சொல் தேடுவதில் நேரம் போய்விடுகிறது என்று சொன்னால்கூட ஒன்றிரண்டு விழுக்காடு அதைப் பொறுத்துக்கொள்ளலாம். எண்ணி ஐம்பது சொற்கள் இருக்கும் ஒரு கவிதையில் ஆங்கிலச்சொல் சேர்த்தால் எப்படிப்பொறுப்பது?

ஆங்கிலச்சொல் கடத்துகின்ற உணர்வினைத் தன் தாய்மொழியின் சொல்லானது கடத்தாது என்று சொல்வது சப்பைக்கட்டு கட்டுவதுதான்.. ஒன்று அவ்வாறானோர்க்கு மொழியறிவு குறைவாக இருக்க வேண்டும், இல்லையெனில் தன் தாய்மொழிப்பற்று அறவே இல்லாமலிருக்க வேண்டும்.
இன்னும் சிலர் இருக்கின்றனர் – தானும் படுக்கமாட்டேன் தள்ளியும் படுக்கமாட்டேன் வகையினர். அவரும் ஒழுங்கான தமிழில் எழுத மாட்டார், அவ்வாறு எழுதுபவரையும் ஆயிரம் குறைசொல்லி அவரை எழுதவிடாமல் செய்ய எத்தனித்துக்கொண்டேயிருப்பர். அம்மக்களிடம் கேட்டுப்பாருங்களேன், என்னென்ன கம்பி கட்டுகின்ற கதையெல்லாம் அவிழ்த்துவிடுவர் என்று அறிந்துகொள்ளலாம்..

உணர்வைக் கடத்துவதுதான் கவிதையின் முதற்பண்பு.. அதைத்தன் தாய்மொழியில் சொல்லத்தெரியாமல் சொல்ல விரும்பாமல் அடுத்த மொழியிடம் கடன்வாங்கித்தான் சொல்வேன் என்று அடம்பிடிப்போர் கவிஞரா அல்லது கடன்காரரா? ஆங்கிலச்சொற்களை அள்ளித்தூவிக் கவிதை எழுதுவோர் பீற்றும் பீற்றல்கள் இருக்கின்றனவே .. ஐயகோ ..சொல்லி மாளாது.
இறுதிவரையிலும் கடன்காரக் கவிஞராகவே வாழப்போகும் மக்களைக்கண்டு இவ்வுலகம் வருந்திக் கவலுறும்.

இப்போது அடுத்த கவலைக்கு வருவோம். ஆங்கிலத்தைக்காட்டிலும் நீக்கமற நம் தமிழோடு கலந்துகிடப்பது வடசொல் என்னும் சமசுகிருதம். அதைப்பற்றிய தெளிவே இல்லாமல் இருப்பது பிழையென்றபோதும் அந்தத்தெளிவு எனக்கு வேண்டா என்று சொல்லும் பிடிவாதத்தினை எங்ஙனம் வரையறுப்பது? நம் வீட்டில் விருந்துச்சாப்பாடே இருக்கையில் அடுத்தவீட்டில் கஞ்சியைக் களவாடிக் குடித்தல் தகுமோ? வெட்கம் கெட்ட செயல் அது..!

தமிழ் தமிழ் என்று கைகளை உயர்த்தி அடித்தொண்டையிலிருந்து கனைப்பது புரட்சியல்ல.. என் தாய்மொழியின் சிறப்பினைக் குறைக்கின்ற எச்செயலிலும் நான் ஈடுபடமாட்டேன், என் சிந்தனையாலும் சொல்லாலும் செயலாலும் என் மொழிக்கு இரண்டகம் செய்யமாட்டேன் என்று வாழ்ந்து காட்டுவதுதான் புரட்சி..!

Bro என்ற ஆங்கிலச்சொல்லை நான் சொல்லமாட்டேன் என்று சூளுரைத்துவிட்டு எல்லோரையும் சகோ என்று சொல்வதை எவ்வாறு ஏற்றுக்கொள்வது? அண்ணன் தம்பி அக்கா தங்கை என்று அழைத்துத்தானே பழகியிருந்தோம்.. அப்பழக்கத்தை நாகரிகக் குறைவென்று நம்பத் தொடங்கியது எதனால்? மாமாவை அங்கிள் டிங்கிள் ஆக்கிவிட்டோம்.. அத்தையை ஆன்டி போன்டி ஆக்கிவிட்டோம். மச்சானை டூட் மாட் ஆக்கிவிட்டோம்.. நண்பனை மச்சான்/ மாமா என்று உறவு கொண்டாடிய இனமல்லவா நாம் ! இந்த டூட் மாடெல்லாம் என்ன உணர்வைத் தந்துவிடுமென்று அதைப்பிடித்துத் தொங்குகின்றனரோ தெரியவில்லை.

வடசொல் கலவாமல் தனித்தமிழில் எழுத நம் ஒவ்வொருவர்க்கும் நிறைய மொழியறிவும் அதைச்சார்ந்த தொடர்கற்றலும் கட்டாயம் வேண்டும். ஆனால் ஆங்கிலச்சொல் இல்லாமல் எளிதாக நம்மால் கவிதையோ கட்டுரையோ கதையோ பாடலோ எழுதிவிடமுடியும். அதைச்செய்ய ஏன் நோகின்றது சிலர்க்கு என்றுதான் புரியவில்லை. அவர்க்குச் சிறிதும் குற்றவுணர்வுகூட இருப்பதில்லை. ஆங்கிலப்பித்து பிடித்து அலையும் கவிஞர்ப் பெருமக்களே.. உங்கள் பித்தினை உங்களோடு வைத்துக்கொள்வீராக. ஆங்கிலம் கலவாமல் எழுதுவோரைக் கேலியும் கிண்டலும் செய்து மதிப்பிழப்பு நேரும்வகையில் உளறிக்கொட்டாமல் மூடிக்கொண்டு இருங்கள் வாயையும் கையையும்..!

தமிழை இகழ்ந்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன் என்று சொன்னதுதான் மொழிப்புரட்சி.. மிதிவண்டி என்று எழுதாது சைக்கிள் என்று எழுதினால்தான் உணர்வைக்கடத்த முடிகிறது என்று சொல்வது புரட்டு.. செம்மையான உருட்டு.. நல்லா உருட்டுங்கடே..!

தாய்மொழியினை மதிக்கும் ஒவ்வொருவர்க்கும் பணிவான வேண்டுகோள். தாய்மொழி தினம் என்று கலப்படத்தில் சொல்லாதீர். தாய்மொழி நாள் என்று சொல்வீராக..!

தாய்மொழியாம் நம் தமிழ்மொழியின்பால் மிகுந்த பற்றும் ஆர்வமும் வருவதற்குக் காரணமாயிருந்த என் அம்மா அப்பாவிற்கு என் பேரன்பும் வணக்கமும்..!
மொழிப்பண்பாடு, மொழியுணர்வு, மொழிக்கடப்பாடு, மொழிக்காதல், மொழிவிடாய், மொழித்தவம் எனப் பற்பல வடிவங்களில் தமிழுணர்வை என்னுள் புகுத்தித் தனித்தமிழ் நோக்கி என்னை மெதுவாகக் கைப்பிடித்துக் கூட்டிச்செல்லும் அன்பு அண்ணன் மகுடேசுவரனின் கால்கள் தொட்டுக் கும்பிட்டுப் பேரன்புடன் அப்பெருமகனாரின் கைகளைப் பற்றிக்கொள்கிறேன்.

( இப்பதிவைப் படித்துவிட்டு உள்ளுக்குள்ளேயே பலர் குமுறக்கூடும்.. என்னைக் கும்ம முடியவில்லையே என்றுகூட புலம்பக்கூடும்.. எரியுதடி மாலா என்றே கத்தத்தோன்றும்.. வேறுவழியேயில்லை உங்களுக்கு.. மின்விசிறியைப் பதினாறில் வைத்துச் சுற்ற விடுங்கடே..!
போங்கடே போய் உருப்படியா ஆங்கிலச்சொல் இல்லாமக் கவிதை எழுதப் பாருங்கடே ..!)

மானமுள்ள அறத்தமிழர் அனைவர்க்கும் நம் தாய்மொழிநாள் வாழ்த்துகள்..!

- வரலாற்றுச் சிறுகதைப் போட்டி – 2022 -
அ. பிரபா தேவி
அ. பிரபா தேவிhttps://minkirukkal.com/author/prabhadevi/
தன் சீரிய தமிழாலும் கவிதைகளாலும் பலர் மனம் வென்ற கவிஞர். தேர்ந்த படிப்பாளி. நெல்லையைச் சொந்த ஊராகக் கொண்ட இவர் பாடல்கள் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். கதைகள் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்.

2 COMMENTS

  1. உரைகல் சொற்கள். உணர்ந்து திருந்த வேண்டும். மிகச் சிறப்பு..

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -