முன்னுரை
மாக்சிம் கார்க்கி ருசியாவில் நிஸ்னி நவ்கரோட் என்ற ஊரில் ஏழ்மையான குடும்பத்தில் 1868இல் பிறந்தார். இயற்பெயர் அலெக்சி மாக்சிமோவிச் பெஷ்கோவ். 5 வயதில் தந்தை இறந்தார். தாயின் ஆதரவும் இல்லாத இவரை இவரின் பாட்டிதான் வளர்த்தார்.
எந்நேரமும் குறிப்பேடு வைத்திருப்பார். தனக்குத் தோன்றுவதை அதில் எழுதுவார். 1892-ல் இவரது முதல் சிறுகதையான ‘மகர் சுத்ரா’ (Makar Chudra) வெளிவந்தது. மாக்சிம் கார்க்கி என்ற பெயரில் தொடர்ந்து எழுதிவந்தார்.
பல கவிதைகள் எழுதினார். ஏராளமான நூல்களைப் படித்தார். அபார நினைவாற்றல் படைத்தவர். எழுதுவதற்கு பென்சில்களையே பயன்படுத்தினார். சிறிய சிற்பங்கள் மீது அலாதி பிரியம் கொண்டவர். பாட்டாளி வர்க்க இலக்கியத்தின் பிதாமகர் என்று போற்றப்பட்டார்.
இவர் படைத்த ‘தாய்’ (மதர்) நாவல், இன்றுவரை புரட்சிகரத் தொழிலாளி வர்க்கத்துக்கு ஊக்கமும் உற்சாகமும் தந்து வீரத்தை ஊட்டிவருகிறது. இது 200 முறைக்கு மேல் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
இரஷ்ய சோஷலிச ஜனநாயக தொழிலாளர் கட்சிக்கு நிதியுதவி அளித்துவந்தார். ரஷ்யப் புரட்சி இயக்கத்துக்கு நிதி திரட்ட பல நாடுகளுக்குச் சென்றார். உலகம் முழுவதும் உள்ள சிறந்த எழுத்தாளர்களுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார்.
தாய் நாவலின் தோற்றம்
நாவல், புதினங்கள், கதைகள் என்றாலே ரஷிய இலங்கியங்களுக்கென்று தனியானதொரு இடம் உண்டு. புரட்சியின் பின்னணியில், வர்க்க ரீதியிலான வேறுபாடுகள் மற்றும் சாதாரண மக்களின் வலிகளையும் உணர்வுகளையும் அவை பேசுபவையாக இருந்தன.
அதிலும் ரஷியப் புரட்சிக்கு முன்பும் பின்புமான குறுகிய கால இடைவெளியில் வந்தவை உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான வாசர்களால் வாசித்து உணரப்பட்டன. அந்த வகையில் இன்றைக்கிருந்து 110 ஆண்டுகளுக்கு முன்பு ரஷிய மொழியில் வெளியான புதினம்தான் தாய்.
மக்சீம் கார்க்கியால் எழுதப்பட்டு 1907-இல் முதன்முதலாக வெளியான இது, உலகின் மிகச் சிறந்த செவ்விலக்கியங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ரஷியாவின் கம்யூனிசப் புரட்சிக்கு நெருங்கிய காலகட்டத்தை காலமாகவும், புரட்சியில் பங்கேற்கும் இளைஞர்களைக் கொண்ட தொழிற்சாலையை கதைக் களமாகவும் கொண்ட புதினம்.
இந்தப் புதினம் உலகின் பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது.
தாய் நாவலின் கரு
பாவெல் எனும் புரட்சியாளரின் தாய் நீலவ்னா கொஞ்சம் கொஞ்சமாக தன் நிலையிலிருந்து எப்படி தனது மகனின் கருத்துகளால் ஈர்க்கப்படுகிறாள், உண்மையைப் புரிந்து கொள்கிறாள், புரட்சியாளர்களுக்கு உதவ உத்வேகம் கொள்கிறாள், தனது வாழ்க்கையின் உண்மையான மகிழ்ச்சியை எப்படி கண்டடைகிறாள் என்பதை உணர்வு பொங்கச் சொல்வதோடு நம்மையும் அந்தத் தாயோடு பயணிக்க வைக்கிறது நாவல்.
முதலில் மகனை ஆபத்தில் இருந்து காக்கத் துடிக்கும் தாயின் உணர்வுகளையும் இறுதியில் மகனின் புரட்சிப் பாதையிலேயே பயணிக்கும் அவளின் திடத்தையும் தெளிவாகப் பதிவு செய்திருக்கிறார் மக்சீம் கார்க்கி. மூலத்தின் அம்சங்கள் மாறாமல் அதனை தமிழில் மொழி பெயர்த்துள்ளார் தொ.மு.சி. ரகுநாதன்.
வெளியாகி நூறு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்றும் அதிகம் விற்பனையாகி வருகிறது தாய்.
நாவல் ஏற்படுத்திய தாக்கம்
1905 ருஷ்யப் புரட்சிக்கு முன்பாக நடந்த உண்மையான சம்பவங்களையும், போல்ஷ்விக் கட்சியின் நடவடிக்கைகளையும் அடிப்படையாகக் கொண்டதே இந்த நாவலாகும். நாவலின் கதாபாத்திரங்கள் மற்றும் புரட்சியாளர்களின் நடவடிக்கைகளால் ஏற்பட்ட போராட்டங்கள் இன்றும் மக்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. உலகம் முழுவதும் இன்று ஏரளமான சமூக, அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. முதலாளித்துவ சுரண்டல் மற்றும் அதன் நெருக்கடிகளும் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருகின்றன. மக்களின் அனைத்துப் பிரிவுகளாலும் இதன் விளைவுகள் அதிக அளவில் உணரப்படுகின்றன. ஏகாதிபத்திய கலாச்சாரமானது அன்றாட வாழ்வின் ஒவ்வொர் அம்சத்திலும் அதன் விஷத்தை விதைத்திருக்கிறது. முதலாளித்துவ கோட்பாட்டாளர்களும் அதன் அடிவருடிகளும் மார்க்சியத்தை மக்களின் மனதிலிருந்தும் அதன் தோற்றத்திலிருந்தும் அடியோடு அப்புறப்படுத்தி அழிக்கக்கூடிய புதிய வடிவங்களையும் வழிமுறைகளையும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், அவர்கள் இதில் வெற்றிபெற முடியாது. ருஷ்யப் புரட்சியின் வெற்றி மற்றும் அதன் தோல்விகள் குறித்தும் சோசலிச நாடுகளில் அதன் விளைவுகள் குறித்தும் இன்றும்கூட நிறைய விவாதங்கள் நடக்கின்றன.
1917 அக்டோபர் புரட்சியின் வெற்றி உலகின் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் ஒரு நம்பிக்கையாகவும், மேலும் ஒரு தூண்டுதலாகவும் உள்ளது.
தாய் நாவலின் கதை சுருக்கம்
ஜார் மன்னனின் ஆட்சியில் ருஷ்யாவில் சமூக ஏற்ற இறக்கங்களையும் தெளிவாகக் காட்டுகிறது “தாய்”.மனித சிந்தனையும், உழைப்பும், வெற்றி கண்ட சகல பொருட்களையும், அனைவருக்கும் சமமாகப் பங்கிட வேண்டும் என்பதில் உறுதியோடு நின்று,பயத்துக்கும் பொறாமைக்கும்…பேராசைக்கும் முட்டாள்தனத்துக்கும் அடிமையான மக்களை அத்தளைகளில் இருந்து வெளியில் கொணர தன் வாழ்நாளை அர்ப்பணித்து வாழ்ந்த சோழலிஸ்டுகளின் கதை தான் “தாய்”.
ஆலைத்தொழிலாளியான மிகயீல் விலாசவ்………
வறுமையும்,புகையும் அழுக்கும்,சலிப்பும் மண்டிக் கிடந்த ஓர் குடியிருப்பில் தன் மனைவி பெலகேயா நீலவ்னா உடனும் மகன் பாவெல் விலாசவ் உடனும் வசித்து வருகிறான்.கதையின் நாயகனாக பாவெல் சித்தரிக்கப் பட்டாலும், கதையின் தலைப்புக்குப் பெயர் கொடுத்திருக்கும் நீலவ்னாவே உண்மையில் கதையின் நாயகி. கதையோட்டம் எங்கும் அவள் “தாய்” என்றே குறிப்பிடப்படுவது மிகவும் சிறப்பான மற்றும் நெகிழ்வான ஓர் அம்சம்.
நாவலிருந்து உதித்த தமிழ் திரைப்படம் ‘இளைஞன்’
2011 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம்தான் இளைஞன். பா. விஜய் நடித்த இப்படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார். கதை, வசனம் மறைந்த கலைஞர் மு. கருணாநிதி ஆவார்.
போராட்டமே வாழ்க்கையாகக் கொண்டு வாழும் எல்லாத்தொழிளாலர்களையும் போலவே கதாநாயகனின் வயதான தந்தை குடிப்போதையில் பணப்பேய் பிடித்த முதலாளியிடம் சம உரிமைகளைத் தட்டிக்கேட்டு இறக்கிறான்.அவனோடு காலமெல்லாம் நரக வாழ்வு வாழ்ந்த மகனும் தாயும் இப்போது நிம்மதியின்றி வாழ ஆரம்பிக்கிறார்கள். கப்பல் கட்டும் தொழிற்சாலையில் வேலைக்குச் சேரும் மகன், ஏழை மக்களுக்காகப் போராடும் சோஷலிஸ்டாக உருவெடுக்கிறான்.படிப்பறிவோ வெளிவுலக அனுபவமோ அற்ற தாய் தன் மகன் செல்லும் வழி சிறப்பானது,உண்மையானது என்று உணர்வதோடு,அவனுக்கு உறுதுணையாக இருக்கிறாள். பல போராட்டங்கள் நடந்தன. கண்காணிகளை அடித்துத் துவைக்கிறான் மகன். மகனின் மார்கத்துக்குத் தன்னால் இயன்ற வரையிலும் உதவுகிறாள் மகன் தனது நண்பர்களுக்கு அச்சிட்டுக் கொடுக்கும் பிரசுரங்களை விநியோகித்து, கப்பல் தொழிலாளிகள் மத்தியில் சோஷலிஸக் கருத்துக்களைப் பரப்புகிறான். இப்படக்காட்சி எல்லாம் 60 ஆண்டுகளுக்கு முன் நிகழ்வதைப் போல் காட்சிகளையும் ஆடைகளையும் துணைக்கருவிகளையும் வடிவமைத்துக் கதையோட்டத்திற்கு உற்சாகத்தைத் தந்துள்ளனர் படக்குழுவினர்.
நாவலின் மைய கருத்தை அதிலிருந்து எடுக்கப்பட்ட சில வரிகளில் இருந்தே அறியலாம்.
“குறைகூற வேண்டிய மனிதர்களில் முதன்மையானவன் யார் தெரியுமா?
இது என்னுடையது என்று எவன் முதன் முதல் சொன்னானோ அவன் தான்.”
“எல்லாமும் எல்லாருக்கும்” என்ற சோஷலிஸ்ட்டுகளின் கருத்தை இவ்வரிகள் மிக அழகாக உணர்த்துகின்றன. இக்கருத்தே இப்படத்தின் மையக்கருத்தாகும்.
‘நாம் பெற வேண்டிய இன்பத்தையும், நலன்களையும் மற்றவர்கள் அறுவடை செய்து அனுபவிக்கிறார்கள். எதைக் கண்டும் நீங்கள் பயப்படாதீர்கள்!நீங்கள் இப்போது வாழ்கின்ற வாழ்க்கையை விட எதுவும் கொடுமை வாய்ந்ததாக இருக்கப்போவதில்லை’
என்று தங்களுக்கு எதிரான கொடுமைகளை எதிர்த்து போராட உத்வேகம் அளிக்கிறாள் கதாநாயகனின் தாய்.
நம் சங்க இலக்கியங்களில் முற்றாத இளம் பிஞ்சு மகனைப் போருக்கு அனுப்பிய தாய்க்கு எவ்விதத்தில் குறைந்தவள் கார்க்கியின் “தாய்” மற்றும் ‘இளைஞன் திரைப்படத்தின் தாய்’?
நாளை நமதே!