தவிப்பு

கவிதைகள்

- Advertisement -

தவிப்பு

கை நழுவிப் போகிறது
காற்று நிரம்பிய பலூன்.

உருண்டு புரண்டு
தாவி எம்பித் துள்ளி
அலைக்கலைக்கிறது.

பதற்றமாய்
பின் தொடருகிறேன்.

வாகனங்களின் அலறல்கள்
என்னை அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன

சாலையின் மேடு பள்ளங்கள்
என் கால்களை தடுமாறச் செய்கின்றன.

வேலியில் போய்
அமர்ந்த பலூனை
விரல்கள் பற்றி
மெல்ல மெல்லக் கவ்வி…
முள்ளிலிருந்து
மீட்டுத் திரும்புகையில்…
மன இறுக்கத்தின்
அழுத்தத்தில்….
வெடித்துச் சிதறியது..!
என் ஆவலாதி
எதிர்பாராமல்.

??????????????????????????

இரவுக்குப் பின் இரவு

ஊறல்கள் அழிக்கப்பட்டன…
சாராயப்பானைகள் உடைக்கப்பட்டன…

பட்டதாரிகள்
விற்பனையாளர்களாக…
பிறந்தன
அரசு பிராந்திக் கடைகள்.

முட்டைப்பயறு, ஊறுகாய் என
தின்பண்டங்கள் அணிவகுக்க
நாளும்
தீபாவளிப்
பட்டாசு, பட்சணக் கடைகள் போல்
குடி மகன்களால் நிரம்பி
நகரங்கள் தள்ளாடுகின்றன.

அஞ்சுக்கும்…பத்துக்கும்…
வாழ்வை விற்றவர்கள்
ஐம்பது… நூறெனத் தந்து
தம் உயிரை எரிக்கிறார்கள்.

அலங்கார வண்ண விளக்குகளோடு
சுடுகாடுகளாய்
மது வனங்கள் சிரிக்கினறன.

இருண்டு…
பசியில் வெந்து…
ஈன ஓலமிட்டு…
புலம்புகிறது
வீடுகளென்பவை.

??????????????????????????

தீரா

நடக்கிறேன்..
ஒற்றையடிப் பாதையை
பின் தொடர்ந்து.

பசுமை வனமோ!
மலர்களின் வாச போதையில்.

மனம்
தள்ளாடுகிறது.

உடல்
காற்றின் பஞ்சாகிறது.

பறவைகளின் உரையாடல்
இதயத்திற்குள்
இதம் வளர்க்கிறது.

நதியின் துள்ளல் ஒலி
நண்பன் பேசுவது போலிருக்கிறது.

இடையிடையே
வன மிருகங்களின்
கூக்குரல்கள்/உறுமல்கள்
ஈரக்குலையை பிசைகின்றன.

திரும்பிடத்
தயங்குகிறேன்.

மூச்சுத் திணறும்
புகை மண்டிய தெருக்கள்..
ஓயாத வாகன இரைச்சல்..
ஆணவமும்,அகங்காரமும் கூத்தாட
அதிகார வெறியும், பேராசைகளும் சூடிய
நகரங்களுக்கு
வாழ
ஏன் திரும்பனும்?

புத்தனும் வெறுக்கவில்லை
வர்த்தமானனும் வெறுக்கவில்லை
என்னாலும் இயலவில்லை.

வசந்ததீபன்
வசந்ததீபன்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்தவர். தற்சமயம் சென்னை கூடுவாஞ்சேரியில் இருக்கிறார். ஹிந்தியில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார். மணிப்பூரில் நாகா மலைவாழ் மக்கள் பள்ளியில் ஏழு வருடங்கள் வேலை பார்த்தார். நீண்ட காலங்களாக கவிதைகள் , கதைகள் எழுதி வருகிறார். 2021ல் "கண்ணீர் படராத ஓர் அங்குல மண்" எனும் கவிதைத் தொகுப்பு வெளியாகியுள்ளது. அன்பைத் தேடிக் கண்டடைவதே படைப்பாக்கமாக நம்புகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -