ஜூம் கலாட்டா

தாம் ஜூம் கல்யாணம்

- Advertisement -

பட்டு ஜரிகை வெச்ச முககவசம் போட்டுப்பார்த்தாள் அபிராமி. இன்னும் சில நிமிடங்களில் கல்யாணத்தை முகநூலில் அவளது மகனின் கல்யாணத்தை நேரலையில் பார்ப்பவர்கள் அனைவரும் இவளது பட்டு ஜரிகை முககவசம் குறித்து ஆச்சரிய குறி போடுவார்கள் என்பதை நினைக்கும்போதே கர்வம் தலைக்கேறியது.

முகநூலீல் திருமணம் நேரலை துவங்க இன்னும் 1 மணி நேரம் இருந்தது. அபிராமி நொடிக்கொரு தரம் எத்தனை பேர் லைக் போட்டுள்ளார்கள் என்பதை பார்த்துக்கொண்டிருந்தாள். நாம இத்தனை நாளா எத்தனையோ காணொளிக்கு லைக் போட்டிருக்கோம் ஆதலால் 1000 லைக் கண்டிப்பா வரும்னு எதிர்பார்த்தாள். ஆனால் இதுவரை 100 கூட வரவில்லை.

திருமண மண்டபத்தில் 20க்கும் குறைவானவர்களையே அனுமதிக்க இருவீட்டாரும் முடிவு செய்திருந்தனர். ஜூமில் 45 பேர் மட்டும் மாப்பிள்ளை வீட்டினருக்கு ஒதுக்கப்பட்டிருந்தனர். குடும்பத்தில் நான் நீ என்று ஜூமில் இடம்பிடிக்க சண்டை இருக்குமென நினைத்தாள். ஆனால் 45 பேரை சேர்ப்பதற்கே கஷ்டப்படவேண்டியதாகிவிட்டது.

“அண்ணி கிளிப்பச்சை ஜரிகை உங்க முகத்துக்கு பொருத்தமா இருக்கு. உங்க சம்பந்தி உங்கக்கூட எந்த விஷயத்துலேயேயும் போட்டிப்போட நினைக்கக்கூடாதுனு மூக்கு மேல  முகக்கவசம் மேல விரல் வைக்குற மாதிரி இருக்கு” என்று நாத்தனார் சொன்னவுடன் அபிராமிக்கு சந்தோஷம் தாங்கவில்லை.

“என்ன சம்பந்தி ஜூம்ல இருக்குற உங்க சொந்தக்காரங்களுக்கு எந்த குறையுமில்லைல?” என்று கேட்டுக்கொண்டே கிட்ட வந்த பெண்ணின் தாயை பார்த்தவுடன் அபிராமி 1 அடி தள்ளி குதித்தாள்.

“என்ன தான் அழகா முக அலங்காரம் செஞ்சாலும் இப்படி முக கவசம் இல்லாமலா வருவீங்க?” என்று கோபமாக கேட்ட அபிராமியை நமட்டு சிரிப்போடு “ அட இது புதுவிதமான 3D முக கவசமுங்க. நம்முடைய புகைப்படத்தை கொடுத்துட்டா போதும். முக கவசத்துல தத்ரூபமா அடிச்சிக்கொடுத்துடுவாங்க. நீங்க என்னடானா நான் 4 மாசத்துக்கு முன்னேமே விட்டுட்ட ஜரிகை வெச்ச முக கவசத்தையையே இப்ப தான் உபயோகிக்க ஆரம்பிச்சிருக்கீங்க” என்ற போது கிளி பச்சை முக கவசத்துக்கு பின்னிருந்த மூக்கு உடைந்ததாக உணர்ந்தாள் அபிராமி.

“எங்க அண்ணிக்கு கண்ணு அவங்க அறிவை மாதிரி. கொஞ்சம் மங்கலா இருக்கும்” என்று நாத்தனார் சமாதானம் சொல்லியது கிண்டலா என்பது அவளுக்கு மங்கலாக தான் விளங்கியது.

மணமேடையில் மாப்பிள்ளையும் பொண்ணும் வந்தமர்ந்தனர். நாத்தனார் அபிராமி காதில் கிசுகிசுத்தாள் “அண்ணி ஜூமில் ஒரு முறை அந்த அநியாயத்தை பாருங்க. இதோ என் கைப்பேசிலேயே தெரியுது பாருங்க” என்று ரகசியமாக கையில் அழுத்தினாள். காணொளியில் மணமேடை தெரிந்தது. மாப்பிள்ளை, பெண் மற்றும் பெண்ணின் பெற்றோர் மட்டுமே திரையில் தெரியுமாறு கேமரா வைக்கப்பட்டிருந்தது.

உடனே ஜூம் தொழிற்நுட்ப புலனக்குழுவில் செய்தியை பதிவிட்டாள். ஒருவர் ஓடிவந்து சரி செய்தார். ஏற்கனவே சொன்னபடி அபிராமியின் முகநூலில் நேரலை துவங்கிவிட்டது. சடசடவென நேரலை பார்வையாளர்கள் எண்ணிக்கை 20, 30, 50 என உயர்ந்தது. கல்யாண வாழ்த்து செய்திகள் குவிய தொடங்கின.

இதே முகூர்த்த நேரத்தில் வேறு ஒரு நெருங்கின தோழியின் மகளுக்கும் திருமணம். அவளும் முகநூலில் நேரலை செய்கிறாள் என்பதால் அதில் எவ்வளவு கூட்டமிருக்கு என தன் கைப்பேசியில் சொடுக்கினாள். அட அதிலும் சுமார் 50 பேர் நேரலை பார்ப்பதாக தெரிந்தது.

உற்றுப்பார்த்த அபிராமிக்கு சட்டென உறைத்தது. என்ன இது நம் நாத்தனார் கணவர் அந்த கல்யாண நேரலை காணொளியில் இருக்கிறார்? சட்டென தன் மகனின் திருமண ஜூம் நேரலையை சொடுக்கினாள். இதிலும் அவர் இருந்தார்.

பக்கத்திலிருந்த நாத்தனார் இவளின் சந்தேகத்தை உணர்ந்தவளாக “ அது ஒன்னுமில்லை அண்ணி. ஜூம்ல தானே கல்யாணம்னு அவரு மடிகணினில நம்ம வீட்டு கல்யாண ஜூமிலும், கைப்பேசில அந்த வீட்டு கல்யாண ஜூமிலும் இருக்காரு. ஆனால் அந்த கல்யாண காணொளிக்கு லைக் போடக்கூடாதுனு நான் கண்டிப்பா சொல்லிட்டேன்” என்று நாத்தனார் சொல்லும்போது அவளுக்கு தலை சுற்றியது. அட கொரோனா கொடுமையே. இன்னும் எத்தனை பேரு இந்த மாதிரி?

ஒரு வழியாக மகன் தாலியை கட்டும் காட்சியை ஜூமில் புகைப்படம் எடுத்து புலனக்குழுவில் பகிர முயன்றாள். அதற்குள் குடும்பத்தில் ஒரு வாண்டு இவளின் மருமகளை குடும்ப புலன குழுவில் இணைத்து திருமண காட்சியை 5 நொடி காணொளியாக பகிர்ந்திருந்தது. “சே வடை போச்சே” என்று நாத்தனார் கமெண்ட் போட்டது தன்னை குறித்துதான் என்று உணர்ந்தாலும் “மருமகளே வாருக” என்று குழுவில் பதிவிட்டாள்.

“அண்ணி நீங்க மருமகளே வாருகனு போட்டிருக்கீங்க. அவ உங்க காலை வாரும் நேரம் சீக்கிரமே வந்திடும்” என்று நாத்தனார் உடனே அனுப்பிய செய்திக்கு அந்த குழுவிலிருந்த அத்தனை ஸ்லீப்பர் செல் உறுப்பினர்களும் கட்டை விரலை தூக்கினர்.

தாம் ஜூம் என முடிந்த கல்யாணம் அபிராமிக்கு “மாமியார்” என்ற பதவியை கொடுத்திருந்தாலும் அவளது உடனடி வேலை ஜூமில் பாதியில் நழுவிய உறவினர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு சேரவேண்டிய உணவு பற்றுசீட்டை தடுத்து நிறுத்துவது தான்.

– தொடரும் இந்த ஜூம் கலாட்டா….

ஜூம்-கலாட்டா-3 (26/10/2021 வெளியிடப்படும்)

இந்தத் தொடரின் எல்லா பாகங்களையும் படிக்க கீழே சொடுக்கவும்

ஜூம் கலாட்டா

உமா சங்கர்
உமா சங்கர்https://minkirukkal.com/author/umasanker/
நகைச்சுவை பேச்சாளராக வளர விரும்புபவர், சிறுகதை எழுத்தாளர் மற்றும் குறும்பட இயக்குனர். Life Is Beautiful என்ற வரிகளால் ஈர்க்கப்பட்டு அதை செயல்படுத்த நினைப்பவர்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -