சூர்யப்பாவை – 4

தொடர் கவிதை

- Advertisement -

ஒப்பனை கலைக்கப்பட்ட
நடனக்காரியைப்போல
களையிழந்து கிடந்தது கடற்கரை.
அலையடித்து அலையடித்து
எத்தனைமுறை கழுவினாலும்
பொட்டளவும் பொலிவேறவில்லை.
சின்னஞ்சிறு நண்டுகள் வளைகளில்
உள்ளேவெளியே ஆடிக்கொண்டிருந்தன..

ஏதேனுமொரு நண்டின் வளைக்குள்
தன்னைக் குறுக்கி நுழைத்துக் கொள்ளலாமா?
கடலுக்குள் பாய்ந்து விழுந்து
உப்பாய்க் கரைந்து விடலாமா?
என்றெல்லாம் மருகுகிறது கடற்கரை.
கையளவு உப்பினை வாய்நிறைய
திணித்ததைப்போல இத்தனிமை
வலிந்து தரப்பட்டிருக்கிறது.
அளவுக்கு மீறினால் தனிமையும் நச்சுதானே ..!

நச்சினை மருந்தாக்கும்
மாயவித்தையைக் கற்றுக்கொடுத்தவன்
நீதானே ..
தனிமையை ஏற்றுப் பழகியிருந்த நான்
இப்போது கையாளக் கற்றுக்கொண்டேன்.
எதையும் ஆள்வதில்தான்
எத்துணை நிறைவு கிட்டுகிறது..!

யாரையும் ஆள்வதற்கும் அடக்குவதற்குமான
வேறுபாட்டினில்தான் அடிமை
ஆசனத்திற்குக் கால்கள்
பொருத்தப்படுகின்றன.
ஆளுமைக்கு ஆயிரமாயிரம் கைகள்.
அரவணைத்தலே அதன் முழுநேர வேலை.
கைகளை விரித்துக் கடற்கரையை
வாரியணைத்துக் கொண்டேன்.
அக்கணத்தில் நான் நீயானேன்.
பேரன்பின் விதைநெல் நீ சூர்யா ..!

அ. பிரபா தேவி
அ. பிரபா தேவிhttps://minkirukkal.com/author/prabhadevi/
தன் சீரிய தமிழாலும் கவிதைகளாலும் பலர் மனம் வென்ற கவிஞர். தேர்ந்த படிப்பாளி. நெல்லையைச் சொந்த ஊராகக் கொண்ட இவர் பாடல்கள் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். கதைகள் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -