சூர்யப்பாவை – 28

தொடர் கவிதை

- Advertisement -

எண்ணச்சோர்வு சூழ்கையிலும்
மனவுளைச்சல் மண்டுகையிலும்
தலைகோதி ஆற்றுப்படுத்தும்
தண்கைகள் நீட்டுகின்ற
நிழலுருவாய் நீதான் இருக்கின்றாய்.
திசைகாட்டிகளில்லாது
திக்கற்றுத் தடுமாறும்
வழிகளிலெல்லாம் நீதான்
நிழலாய்த் துணைவருகின்றாய்.

வாரிச்சுருட்டும் வன்புயலாயும்
தாலாட்டிடும் மென்தென்றலாயும்
தழுவியணைத்திடுதலில்
தலையாயக் காதற்காற்றாடி நீ.
உன் சூரியமடியினில்
என் கவலைப்பனியெலாம்
காணாது போய்விடுகின்றன.
எண்ணியவை யாவும்
நிறைவேற்றுபவனல்லன் நீ.
ஏமாற்றங்களிலும் கூடநின்று
எமை இயல்பாக்குபவன் நீ.

எழுபிறப்பு நம்பிக்கையிலும்
மறுபிறவி மயக்கத்திலும்
நுழைந்து நம் நேரங்கடத்திட
விழைந்திடவும் வேண்டா.
இப்பிறவியின் முழுமையினை
இணைந்தே அடைவோம்
பொழுதுகள் அனைத்திற்கும்
புதுவண்ணம் பூசுவோம்
கணங்கள் ஒவ்வொன்றிலும்
கன்னலைத் தோய்ப்போம்
நேரங்கள் எல்லாவற்றையும்
நேயத்தேனில் ஊறவைப்போம்.

வாழ்வதற்கு வந்தோமென்பது
வெறும் வாக்கியம் மட்டுமே.
உன்னோடு வாழ்வதற்குத்தான்
வந்திருக்கிறேன் என்பதே என்
வாழ்வின் அருஞ்சொற்பொருள்.
சொல்லிலும் பொருளிலும்
அன்பீனும் பெருங்காதற்
பேரகராதி நீ சூர்யா …
உனைப் படிப்பதே என்
வாழ்நாள் பெருநற்பேறு.!

அ. பிரபா தேவி
அ. பிரபா தேவிhttps://minkirukkal.com/author/prabhadevi/
தன் சீரிய தமிழாலும் கவிதைகளாலும் பலர் மனம் வென்ற கவிஞர். தேர்ந்த படிப்பாளி. நெல்லையைச் சொந்த ஊராகக் கொண்ட இவர் பாடல்கள் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். கதைகள் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -