சூர்யப்பாவை – 15

- Advertisement -

அன்புற்ற கணங்களுக்கெலாம்
அள்ளிப்பூசி அப்பிவிடுகிறாய்
அரைத்தெடுத்த மருதாணிவிழுதினை.
அடர்ந்த அம்மருதாணியின்
செக்கச்சிவப்பினில்
கணங்கள்யாவும் நொடியினில்
தேவகணங்களாகிவிடுகின்றன.

காதலுற்று காமுற்றுக்
களிப்புறும் பொழுதுகளுக்குப்
பொன்மஞ்சளரைத்துப் பூசுகிறாய்.
பொற்செம்மஞ்சள் பொலிவுறும்
பொழுதுகளில்தாம்
காதல்நிலை கடவுள்நிலையாய்
இறைமாற்றம் பெறுகின்றது.

இறைநிலைக் காதலில்
ஒப்புக்கொடுக்கப் படுகின்றன
ஒன்றுபட்ட உள்ளங்களின்
ஒன்றுபடா எண்ணங்கள்…
வேற்றுமைக் கருத்துகள்
வெண்சூடமாய்க் காதல்
ஆலத்தியில் கரைகின்றன..
நெஞ்சத்து ஏக்கமெலாம்
நேயப்படையல் காணும்வேளையில்
கடத்தப்படுகின்றது மாயக்காதல்
இருபுறமும் இசைவுற்று.

காதலின் ஒவ்வொரு கணமும்
கடலிணையும் நதியாக
நெகிழ்த்திவிடுகிறாய்..
நிலைகடலாய்க் காமமும்
பாய்நதியாய்க் காதலும்
பழகிடக் கற்றுத்தந்த உன்னை
எண்ணும்போதெல்லாம்
மணக்கின்றது மருதாணிமணம்.
மருதாணிமணத்துப்
பெருங்காதற்கடத்தி நீ சூர்யா…!

அ. பிரபா தேவி
அ. பிரபா தேவிhttps://minkirukkal.com/author/prabhadevi/
தன் சீரிய தமிழாலும் கவிதைகளாலும் பலர் மனம் வென்ற கவிஞர். தேர்ந்த படிப்பாளி. நெல்லையைச் சொந்த ஊராகக் கொண்ட இவர் பாடல்கள் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். கதைகள் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -