சூர்யப்பாவை – 12

தொடர் கவிதை

- Advertisement -

இணைந்திருக்கும் கத்தரிகைதான்
பிரிக்கும் செயலாற்றுகிறது.
ஒன்றாக இருத்தலென்பதும்
ஒன்றியிருத்தலென்பதும்
வேறுவேறு இருப்புநிலை.
ஒன்றாக இருத்தலில்தான்
எத்தனை ஒளிவுமறைவுகள்?
போலிகளும் முகமூடிகளும்
பொதுவான ஒப்பனைகள் ஆங்கே.
நெஞ்சம் நெகிழ்ந்து நெக்குருகி
நினைவினில் நின்று கசிந்துருகி
பிணையும் மனங்களில்தாம்
பிணக்குக்குப் பின்னும்
பிறையன்பு வளரும் ஒளிரும்.

வெற்றுச் சொற்களில் காதல்
வெள்ளாமை தந்திடுமா?
சொல்பிளந்து அன்பைப்புகுத்தி
பாசத்தால் கட்டியபின்னர்
பகிரப்பட்ட சொல் பசையாய்
உளமெங்கும் ஒட்டிக்கொள்ளும்.
சொல்லென்பது சொல்
மட்டுமல்ல – இருபுறமும்
காதல் கடத்தும் நற்கலன்.
காமமது கசிந்தூறும் பொற்கலன்.
கத்தரிகைச் சொற்களைக்
கையாள்வதினும்
கரும்புச் சொற்களையே நம்
காதலேட்டில் எழுதுவோம்.
ஐம்புலன் உணர்வுகளையும்
அடைகாக்கும் சொற்களைப்
பேணிப்பேசுதலே பெருந்தவம்
என்றே சொல்கின்றாய்.

பேணுதலோ பெருந்தவமோ
பிணக்கமோ இணக்கமோ
சொல்லெல்லாம் உனக்காகவே
மலரவேண்டும் சூர்யா.
சிரிக்கையிலும் கைக்கோத்துப்
பிணைக்க நீ வேண்டும்.
அழுகையிலும் தோள்சாய்ந்து
தேம்பிட நீ வேண்டும்.
மகிழும்பிள்ளையை உச்சிமுகர்ந்து,
அழும்பிள்ளையைத் தேற்றும்
தாய்ச்சொல் நீ சூர்யா ..!

அ. பிரபா தேவி
அ. பிரபா தேவிhttps://minkirukkal.com/author/prabhadevi/
தன் சீரிய தமிழாலும் கவிதைகளாலும் பலர் மனம் வென்ற கவிஞர். தேர்ந்த படிப்பாளி. நெல்லையைச் சொந்த ஊராகக் கொண்ட இவர் பாடல்கள் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். கதைகள் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -