சூரரைப் போற்று (திரைப்படம்) & வானமே எல்லை(புத்தகம்) விமர்சனம்

2 in 1 விமர்சனம்

- Advertisement -

1990களில் எங்கள் ஊரில் கார்களைப் பார்த்தாலே அதிசயமாக இருக்கும். எங்கள் தெருவில் வசித்த ஒருவர் கார் வாங்கிய பொழுது அதை ஒரு உலக அதிசயமாகக் கண்டோம். இந்த நிலைமையில் என்றாவது ஒரு நாள் வானத்தில் விமானம் பறப்பதைக் கண்டால் அவ்வளவுதான். நாள் முழுவதும் குதூகலம் தொற்றிக்கொள்ளும். கண்ணில் இருந்து மறையும் வரை அந்த விமானத்தை பார்த்துக் கொண்டிருந்து, பின்பு அதைப் பற்றி பேசிக்கொண்டே இருப்போம். பார்ப்பதற்கே அரிதாக இருந்த விமானத்தை இந்தியாவின் பட்டி தொட்டியில் இருக்கும் அனைவரும் பயணம் செய்யும்படியாக மாற்றி கொடுத்தவர்தான் கேப்டன் கோபிநாத். 2007இல் ஏர் டெக்கான் விமானத்தில் பயணம் செல்வதற்காக டிக்கெட் புக் செய்யும் போது அந்த சந்தோஷத்தை நானும் அனுபவித்திருக்கிறேன். 

ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்து, ராணுவ அதிகாரியாக பணிபுரிந்த கேப்டன் கோபிநாத்தால் இவ்வளவு பெரிய உயரத்தை எவ்வாறு அடைய முடிந்தது? இதற்கு பதில் 2010 இல் வெளிவந்த அவருடைய புத்தகத்தில் கிடைத்தது. Simply fly என்ற அவருடைய சுய சரிதம் வெளியான சில நாட்களில் கடைக்கு சென்று அதை வாங்கி படித்து முடித்து விட்டேன். எனக்கு மிகவும் பிடித்தமான புத்தகங்களில் அதுவும் ஒன்று. பத்து வருடங்கள் கழித்து சூர்யா நடித்த சூரரைப்போற்று படம் அந்த புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்டது என்று கேள்விப்பட்டவுடன் புத்தகத்தை மீண்டும் படிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. தேடிப்பார்த்தால், பழைய புத்தகம் வீட்டில் அகப்படவில்லை. இணையத்தில் தேடினால் அந்தப் புத்தகத்தின் தமிழாக்கத்தை (வானமே எல்லை) கிழக்கு பதிப்பகம் முன்பே வெளியிட்டிருந்தது. உடனடியாக வாங்கி ஒரே மூச்சில் மீண்டும் படித்து விட்டேன். இன்று காலை எழுந்தவுடன், முதல் வேலையாக அமேசான் பிரைம் இல் வெளியான அந்தப் படத்தையும் முழுமையாக பார்த்துவிட்டு புத்தகம், திரைப்படம் இரண்டையும் ஒன்றாக விமர்சிக்கும் ஒரு சிறிய முயற்சியை இங்கே சமர்ப்பிக்கிறேன்.

விமர்சனம் 

சூரரைப்போற்று திரைப்படத்தின் ஆரம்பத்திலேயே இந்தப்படம் கோபிநாத்தின் வரலாற்றுடன் கற்பனையும் கலந்து எடுக்கப்பட்டது என்று போட்டுவிடுகிறார்கள். ஏர் டெக்கான் நிறுவனத்தால் பிரபலமடைந்த கோபிநாத் அவர்கள் அதற்கு முன்னதாக ராணுவ வீரர், விவசாயி, பட்டுப்புழுக்கள் உற்பத்தியாளர், உடுப்பி ஹோட்டல் உரிமையாளர், அரசியல்வாதி, ராயல் என்ஃபீல்ட் விநியோகஸ்தர், விவசாய அறிவுரையாளர், ஹெலிகாப்டர் நிறுவனத் தலைவர் என்று பன்முகத் தன்மையோடு விளங்கியவர். இவை அனைத்தையும் படமாக எடுக்க வேண்டுமென்றால் குறைந்தபட்சம் 4 பாகங்கள் கொண்ட திரைப்படம் தேவைப்படும். அதனால் இவருடைய ஏர் டெக்கான் சார்ந்த அனுபவத்தை மட்டும் படமாக எடுத்துவிட்டு அதற்குள் கோபிநாத்தின் மற்ற அனுபவங்களை சிறு குறிப்பாக amalgamation எனப்படும் ஒருவிதக் கலவையாக கொடுக்க முயற்சி செய்துள்ளார்கள். உதாரணமாக, கோபிநாத்தின் உடுப்பி ஹோட்டல் அனுபவங்களை படத்தில் அவரது மனைவி அடுமனை(Bakery) ஆரம்பிப்பதற்கான முயற்சியாக காட்டுகிறார்கள்.

உண்மையாக கூறப்போனால், இந்த படத்தை பார்க்க ஆரம்பிக்கும் முன் கோபிநாத்தின் வரலாற்றை நான் Forrest Gump போன்ற ஒரு வித்தியாசமான படம் போல கற்பனை செய்து வைத்திருந்தேன். புத்தகத்தில் கோபிநாத்தின் போராட்ட வாழ்க்கையை தவிர பல்வேறு அழகான விஷயங்களும் இடம்பெறுகின்றன. ராணுவ வீரராக இருந்தபொழுது இமயமலைச் சாரலில் புத்தகங்கள் படித்தது, பங்களாதேஷில் நடந்த இந்திய-பாகிஸ்தான் யுத்தம், ராணுவ கல்லூரியின் வாழ்க்கை முறை, இயற்கை விவசாயம், உணவு விடுதி நடத்துவதில் உள்ள நெளிவு சுளிவுகள், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடன் நடத்திய விவாதம், அமெரிக்கா, சீனா, பர்மா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற இடங்களில் கிடைத்த பயண அனுபவங்கள் என்று பல சம்பவங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இவை எதுவுமே படத்தில் இல்லை. இரண்டரை மணி நேரத்திற்குள் இவை அனைத்தையும் கொடுக்க முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை. இருந்தாலும் புத்தகத்தில் வரும் மஞ்சை கவுடா போன்ற அழகான மனிதர்களை பற்றியாவது படத்தில் நேரடியான காட்சிகள் வைத்திருக்கலாம். 

படத்தில் சூர்யா வழக்கம்போலவே நன்றாக நடித்துள்ளார். அபர்ணா பாலமுரளி ஒரு அருமையான தேர்வு. இயல்பான நடிப்பில் மனதை அள்ளுகிறார். பாடல் காட்சிகள் அனைத்தும் படத்தில் தொய்வை ஏற்படுத்தாமல் கதையோடு சேர்ந்து செல்வதுபோல அமைத்ததற்கு ஒரு சபாஷ். படத்தில், 30% புத்தகத்தில் வருவது போன்ற சம்பவங்களும், 70% சினிமாத்தனமான காட்சிகளும் இடம்பெறுகின்றன. தமிழ் சினிமாக்களில் மானாவாரியாக வரும் ஹீரோக்களை ரொம்ப நல்லவனாக மற்றும் வில்லனை மிகவும் கொடுமையானவனாகக் காட்டும் காட்சிகளுக்கு இந்தபடத்தில் பஞ்சமில்லை. பத்து நிமிடத்திற்கு ஒரு முறையாவது ஒரு குணச்சித்திர பாசக்காட்சி வந்துவிடுகிறது. படத்தின் பல இடங்களில் சூர்யாவின் முந்தைய படமான தானா சேர்ந்த கூட்டத்தில் வரும் அதே மசாலா நெடி வீசுகிறது. ஜிவி பிரகாஷ் இசையில் வெய்யோன் சில்லி பாட்டு அழகாக வந்துள்ளது. காட்சிகள் படமாக்கப்பட்ட விதமும் நன்றாக உள்ளது.

எந்த ஒரு புத்தகத்தையும் படமாக்கும் பொழுது பல சிக்கல்கள் உள்ளன. உதாரணத்திற்கு, ஹாரிபாட்டர் புத்தகத்தை படித்தவர்களுக்கு அந்த படம் சுத்தமாக பிடிக்கவே பிடிக்காது. புத்தகத்தில் வரும் பல பக்க வர்ணனையும் படத்தில் வைப்பது என்பது இயலாத காரியம். இருந்தாலும் புத்தகம் படிக்காதவர்களுக்கு அந்த படம் அருமையான படமாகத்  தோன்றலாம். வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த அசுரன் படம், பூமணி எழுதிய வெக்கை புத்தகத்தின் தழுவல்தான் என்று உங்களுக்கு தெரியும். இங்கும் படத்திற்கும் புத்தகத்திற்கும் இடையே பல வித்தியாசங்கள் உண்டு. இந்தப் படமும் கிட்டத்தட்ட அதைப்போலத்தான். புத்தகங்களை அதிகம் பேர் பொறுமையாக படிக்க மாட்டார்கள். ஆனால் திரைப்படம் அதிகமான மக்களிடம் நேரடியாக போய் சேர்கிறது. கேப்டன் கோபிநாத் போன்றவர்களைப் பற்றிய தகவல்களை மக்களிடம் நேரடியாக கொண்டு சேர்த்ததற்காகவே படக்குழுவினருக்கு மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்ளலாம். வாழ்வில் முன்னேறத் துடிக்கும் இளைஞர்களுக்கு ஊக்க மருந்தாக இந்த மாதிரி படங்கள் விளங்கும் என்பதில் எனக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை. பொழுதுபோக்குக்காக பல மசாலா விஷயங்களையும், சுய முன்னேற்றத்திற்காக சில உண்மைச் சம்பவங்களையும் கூறுவதால் கண்டிப்பாக ஒரு முறை இந்தப் படத்தைப் பார்க்கலாம்.

இந்த படத்தை பார்த்தவர்கள், கோபிநாத்தின் புத்தகத்தையும் வாங்கி முழுமையாக படித்தால் ஒரு தனிமனிதனின் போராட்டத்தால் கிடைத்த மாபெரும் வெற்றியைப் புரிந்துகொள்ளமுடியும். வாங்கிப் படிக்க கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

இளையகருப்பன்
இளையகருப்பன்
தமிழ் மீது பற்றுக்கொண்ட குழந்தை. வரலாறு, அறிவியல் மற்றும் பயணங்கள் மூலமாக உலகை தினமும் கற்றுக்கொள்ள முற்படும் மாணவன். கவிதைகள் மீது காதல் கொண்ட இளைஞன். தொழில்முறையில், கணிப்பொறி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளன், மாலைநேர எழுத்தாளன். மெய்ஞ்ஞானத்தை பகுத்தறிந்து கொள்ளத் துடிப்புள்ள முதியவன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -