சகடக் கவிதைகள் – 22

பெரும் காதல்

- Advertisement -

பெரும் காதல்

கண்களால் ஆரம்பித்து
கரங்களால் ஆரத்தழுவி
காணாதது கிடைத்ததுபோல்
குதூகலித்துக் கூத்தாடி

இணைந்த இதயத்தால்
இன்பநதி பெருக்கோடி
இது போல் வேறில்லை
இதனை மிஞ்ச ஏதுமில்லை

என்று எண்ணிக் களிக்கும்
என்றும் நிலைக்குமென கணிக்கும்

காலம் மெல்ல எட்டிப் பார்க்க
காதல் கொஞ்சம் எட்டப் போகும்
காணாத குறைகளெல்லாம்
காற்றைப் போல் பரவித் தீண்டும்

பிடித்து வைத்த அத்தனையும்
பிடிக்காமல் வீழும் விந்தை கண்டு
பித்துப் பிடித்தது போல் திரிந்து
பிரிதொரு காதல் கொள்ளும்

சுழலென்று தெரியாமல்
சுற்றிச் சுற்றி வந்து
செக்கில் சிக்கிய விலங்காய்
செய்ததையே செய்து மாளும்

காதலை வெளியே தேடித் தேடி
காத்திருந்து ஏங்கித் தவித்தபின்
காய்ந்து, சருகுகள் உதிந்த பின்னே
கண்டடையும் உள்ளே ஓர் வழி

தனித்த பாதையாம் அங்கே
தணியாத வேட்கையோடு
தனக்குத் தானே பேரன்பைத்
தடாகமாய்த் தேக்கியபடி

வற்றாத காதல் ஊற்றுக்கு
வழி தெரியாததாலன்றோ
வெளியே தேடும் அவலம்

பிரவாகமாய்ப் பொழியும்
பிரியாத காதலைக் கண்டு
பிணையும் நன்நாளில்
பிணி அனைத்தும் தீரும்

பெருங்கடலையே அடைந்தபின்
பெறுவதற்கென்ன மீதி….
போதாமல் தேடிச் செல்ல
பிரிதொன்று ஏது இனி?

இந்த கவிதைத் தொகுப்பின் முந்தைய பகுதிகளைப் படிக்க இங்கே சொடுக்கவும்

ராகவ் மிர்தாத்
ராகவ் மிர்தாத்http://www.rakavmirdath.com
மனித உளவியலையே மாற்றக்கூடிய சக்தி படைத்த சினிமாவில் தானும் ஒரு தவிர்க்க முடியாத பங்காற்ற வேண்டுமென்ற தணியாத கலைத்தாகத்தால் உந்தப்பட்ட படைப்பாளி, இயக்குனர், எழுத்தாளர்.இவரது படைப்புகள் வெகுவிரைவில் வெள்ளித்திரையில் காணக்கிடைக்கும் என்பதில் மகிழ்ச்சி.தேசிய விருது பெற்ற “பாரம்" படத்தின் திரைக்கதை மற்றும் வசனகர்த்தா.இவருடைய “மிருணா” என்கிற குறும்படம் ரீகல்டாக்கீஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -