சகடக் கவிதைகள் – 18

ஆத்ம நண்பன்

- Advertisement -

ஆத்ம நண்பன்

என்னுள் ஒருவன்
எப்போதும் பேசுகிறான் – என்றாலும்
எப்போதாவது மட்டுமே
என் காதில் அது விழுகிறது.

எதிரி என்று நான் நினைப்பவனை
எளிதாக மன்னிக்கிறான்

கொடுஞ்சொல் கூற நேர்ந்தால்கூட
கொஞ்சலாய்க் கண்டிக்கிறான்

மெலிதான அவன் குரல்
மேலெழும்பிக் கேட்கும் முன்
மேகத்தால் மறையும் ஆதவன் போல் – மன
மோகத்தால் அவனும் மறைகிறான்

ஒவ்வொரு நிகழ்வின் போதும்
ஓயாமல் உதவ நினைக்கிறான்

சரியெது தவறெதுவென்று
சலிக்காமல் சுட்டுகிறான்

அனைவரும் கைவிடும் நேரம்
ஆறுதல் தரும் ஒருவனே ஆயினும்

ஒருமுறையேனும் அவன் குரலுக்கு
ஒத்துழைக்கும் செவி கிடைப்பதேயில்லை

இத்துணை புறக்கணிப்பையும்
இன்முகத்தோடு ஏற்றுக்கொள்வான்

இடைவிடாது மீண்டும் மீண்டும்
இதயத்தால் அன்பைப் பகிர்வான்

இழிசெயல்கள் பல செய்யினும்
இகழாது சாட்சியாய் நிற்பான்

என்றேனும் ஒரு நாள்
எண்ணத் திரைகள்
எரிந்துபோன பின்
என்னோடு ஏற்படப்போகும்
ஏகாந்தச் சந்திப்பை எதிர்நோக்கி

காலம் நிற்குமிடத்தில் – அவன்
கால்கடுக்கக் காத்திருக்கிறானாம்

இந்த கவிதைத் தொகுப்பின் முந்தைய பகுதிகளைப் படிக்க இங்கே சொடுக்கவும்

- வரலாற்றுச் சிறுகதைப் போட்டி – 2022 -
ராகவ் மிர்தாத்
ராகவ் மிர்தாத்http://www.rakavmirdath.com
மனித உளவியலையே மாற்றக்கூடிய சக்தி படைத்த சினிமாவில் தானும் ஒரு தவிர்க்க முடியாத பங்காற்ற வேண்டுமென்ற தணியாத கலைத்தாகத்தால் உந்தப்பட்ட படைப்பாளி, இயக்குனர், எழுத்தாளர்.இவரது படைப்புகள் வெகுவிரைவில் வெள்ளித்திரையில் காணக்கிடைக்கும் என்பதில் மகிழ்ச்சி.தேசிய விருது பெற்ற “பாரம்" படத்தின் திரைக்கதை மற்றும் வசனகர்த்தா.இவருடைய “மிருணா” என்கிற குறும்படம் ரீகல்டாக்கீஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -