கண்கள் மூடி பிரார்த்திக்கையில்…

மூன்று கவிதைகள்...

- Advertisement -

கண்கள் மூடி பிரார்த்திக்கையில்..

கள்ளிகள்
பூக்கள்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
இதிகாசங்களுக்குள் தூங்குபவர்கள்
தத்துவ கோடாங்கிகளாக ஊளையிடுகிறார்கள்
வீதிகளில் வாழ்க்கை
குற்றுயிராய் கிடக்கிறது
ஆசைப்படு
ஆசைப்படாதே
அட போங்கடா
தத்து பித்து வெத்துப்பயலுகளா
என் பசியை சொல்லத் தெரியவில்லை
எந்த வார்த்தை வெளிப்படுத்தும்
இருளுக்குள் புதைந்து கொண்டிருக்கிறேன்
கையால் மீனைப்பிடிக்கிறேன்
நழுவிப்போகிறது
பதற்றம் தொற்ற நழுவிப்போகிறது
அன்றாட வேதனைகளுக்கு கவிதையைக் கொல்வேன்
நுட்பங்களை ஏந்தி கனவுகளை மட்டும் சொல்லமாட்டேன்
வெற்றுப் படிமங்களும் சொற்களுமல்ல
என் மெய் தேடல் பெருவெளி
உக்கிரமான வெயில்
தேசத்தை எரிக்கிறது
நாமெல்லாம் தேசத்தில் தான் வாழ்கிறோம்.

??????????????????????????

நதிச் சங்கமம்

உன் விழிகள் என் திசைகாட்டிகள்
உன் இதழ்கள் என் நீர்த்துறைகள்
உன் நிழல்தேடி தாகமாய் வருகிறேன்
உனக்குப் பரிசளிக்க வேண்டும்
உலகம் கண்டிராத
அற்புதமான பொருள்
ஒருவராலும் தரமுடியாத என் இதயம்
முத்தமிட வந்தேன்
முட்கள் சூழ நிற்கிறாய்
மனமொடிந்து திரும்புகிறேன்
உன் உடலுக்குள் ஒரு கடல்
மீன்கள் ஆயிரம் துள்ளுகின்றன
கண்ணாடிக் குடுவைக்குள் நீ
ராகங்கள் பெருகும் தடாகம்
சந்தங்கள் கமழும் பூந்தோட்டம்
மனம் எனும் மாய இசைக்கருவி
கள்ளிப்பழ உதடுகள் கனிந்து சிவந்தன
கண்கள் துள்ளிக் குதித்தன
காதல் வெள்ளம் பிரவாகமெடுத்தது
மழைச்சாலையில் யாரும் இல்லை
காற்று ஓலமிட்டு ஓடுகிறது
இறந்தபடி இணை பிரிந்த பறவை
சிரிப்பால் எனக்கு தீ மூட்டினாள்
வெந்து கொண்டிருக்கிறது என் இதயம்
பசியாறப் பார்க்கிறது கனவு.

??????????????????????????

மரிக்கும் பறவையின் குரல்

சுழித்தோடும் உன் புன்னகை
நெளிந்தாடும் உன் புருவங்கள்
சுழலுள் சிக்கிய துரும்பானேன் நான்
ஆறப்போடு
ஊறப்போடு
அப்படியே தூக்கி தூரப்போடு
படிக்கிறேன்
திரும்பத்திரும்ப படிக்கிறேன்
விளங்க முடியாத கவிதை வாழ்க்கை
நிழல் தரும் மரங்களில் இலைகளில்லை
அழகு மிளிரும் செடிகளில் பூக்களில்லை
உதிர்காலத்தில் உழல்கிறது கனவிலான வாழ்வு
ஒரு மிடறு குடித்தான்
வேதனையின் காரணிகள் நிழலாடின
அடுத்த மிடறு
அவனைக் குடித்துவிட்டது
நந்தவனத்திலோர் ஆண்டி
அவன் நாலாறு மாதமாய் செய்த தோண்டி கூத்தாடிக் கூத்தாடி பட்டென்று உடைந்தாண்டி
நீ வந்த போது நான் இல்லை
நான் வந்த போது நீ இல்லை
நமது காலடித்தடங்கள் மட்டுமாவது சந்தித்திருக்கலாம்
உக்கிரமான வெயில்
தேசத்தை எரிக்கிறது
நாமெல்லாம் தேசத்தில் தான் வாழ்கிறோம்.

வசந்ததீபன்
வசந்ததீபன்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்தவர். தற்சமயம் சென்னை கூடுவாஞ்சேரியில் இருக்கிறார். ஹிந்தியில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார். மணிப்பூரில் நாகா மலைவாழ் மக்கள் பள்ளியில் ஏழு வருடங்கள் வேலை பார்த்தார். நீண்ட காலங்களாக கவிதைகள் , கதைகள் எழுதி வருகிறார். 2021ல் "கண்ணீர் படராத ஓர் அங்குல மண்" எனும் கவிதைத் தொகுப்பு வெளியாகியுள்ளது. அன்பைத் தேடிக் கண்டடைவதே படைப்பாக்கமாக நம்புகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -