ஊழ்(7)

தொடர்கதை

- Advertisement -

இத்தொடரின் எல்லா பாகங்களையும் படிக்க கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்

ஊழ்…!

ண்ட்ரியாவிடம் அலைபேசி எண்ணைக்கொடுத்து இரண்டு வாரங்கள் கழிந்திருந்தன. ஒரு வெள்ளிக்கிழமை மாலை அமுதன் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருக்கையில் அவன் அலைபேசிக்கு இந்த வாரம் உனக்கு விடுமுறையா எனக் கேட்டது ஒரு குறுஞ்செய்தி. அவன் யார் அது? என்று வினவி பதில் செய்தி அனுப்பினான்.

‘யூ கிவ் யுவர் நம்பர் அண்ட் நவ் யூ பர்கட்டா?’ 

அவனுக்கு ஆண்ட்ரியாவாகத் தான் இருக்கும் என்று தெரியும். அவளை அவன் மறக்கவில்லை இருந்தாலும் இந்த ரகு இந்தமாதிரி சித்து விளையாட்டுகள் ஆடுவதில் பிரியமுள்ளவன் ஒருவேளை அவனாக இருந்து அவனிடம் மாட்டிக்கொண்டால் அடுத்த ஆறுமாதத்திற்கு இதைவைத்தே அமுதனை வதைத்துவிடுவான். யோசித்துக் கொண்டிருக்கும் போதே 

‘அப்போ இப்படித் தான் நீ நிறைய பெண்களுக்கு நம்பர் கொடுப்பியா?’ என்ற அடுத்த கேள்வி ஆங்கிலத்தில் வந்தது. 

உடனே ரகுவின் அலைபேசிக்கு அழைத்தான் அவன் “என்னடா” என்றான். 

“சும்மாதான் அடிச்சேன், எங்கடா இருக்க?” 

“ஆபிஸ்ல இருந்து இப்போதான் கிளம்பி இருக்கேன். ஏன்?” 

சம்பிரதாயமாக “எப்ப வருவ?” என்று கேட்டுவிட்டு வைத்துவிட்டான். அவன் பேசியவிதத்தில் இருந்து கண்டிப்பாக அவனில்லை. அவனாக இருந்திருந்தால் பேச்சு இவ்வளவு இயல்பாக இருந்திருக்காது. சித்து விளையாட்டுகளைப்போல உளறிக் கொட்டுவதிலும் அவன் மன்னன்தான். 

சரி ‘எனக்கு உன்னைத் தெரியும் ஆனால் நீ தான் உன் பெயர கூட சொல்லவில்லையே’ என்று ஆங்கிலத்தில் அடித்து ஆண்ட்ரியாவிற்கு பதில் அனுப்பினான். 

“ஓகே ஐ ஆம் ஆண்ட்ரியா…” எனத்தொடங்கி வரும் ஞாயிறு நான் வெளியே செல்கிறேன் நீயும் வா என்று அழைத்தாள். கண்டிப்பாக வருகிறேன் என்று பதில் அனுப்பினான். 

வனோடு எப்போதும் ஒட்டித் திரியும் இரண்டு பல்லிகளை அத்துவிட பல முயற்சிகள் செய்தும் வீணானது. ஞாயிறு காலை அவனுக்கு முன்னே எழுந்து கிளம்பிவிட்டார்கள் யுவனும் ரகுவும்.

அவளும் ஒரு கும்பலுடன் தான் வந்திருந்தாள். அன்று முழுவதும் அவர்களுடனே கால் போனபோக்கில் சுற்றித் திரிந்தார்கள். மதியம் சாப்பாட்டிற்கு மெக்டொனால்ட்ஸ் சென்றார்கள். இரவு அவள் வீடு செல்லும்வரை இரயிலில் அவளுடனே பயணம் செய்தான் அமுதன். மற்ற எவரும் இப்போது அவர்களுடன் இல்லை. அந்தப் பயணத்தில் பேசிய வார்த்தைகளை விட தொடுதலில் கடத்திய உணர்வுகளே அதிகம். அவள் வீடு இருக்கும் தெரு வந்தவுடன் நீ செல் என் முதலாளி பார்த்தால் வம்பாகிவிடும் என்று துரத்தினாள் அவள். அந்த கடைசி நிமிடத்தில் எப்படியாவது ஒரு முத்தம் தந்துவிட நினைத்த அவன் முயற்சி தோல்வியையே தழுவியது. 

அது நட்பா? காதலா? இல்லை வெறும் காமமா? ஏதோ ஒரு புரியாத உறவுக்குள் அவனை அவன் நுழைத்துக்கொண்டிருந்தான். இரவு நேரங்களை அவளுடன் பேசித் தீர்த்தான். சில நேரங்களில் அதிகாலை இரண்டு மூன்று மணிக்குத்தான் தூங்கவே செல்வான். “அப்படி என்னடா பேசுவன்னு?” யுவன் கேட்கும் கேள்விக்கு அவன் எப்போதும் பதில் சொல்லியது கிடையாது. 

அவள் ஒரு வீட்டின் வயதான மூதாட்டி ஒருவரை பார்த்துகொள்வதற்காக வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தாள். அவள் அதற்கான படிப்பையும் படித்திருந்தாள். அவள் ஆசையாசையாய் பிலிப்பைன்ஸில் இருக்கும் அவள் அப்பா அம்மாவிடம் அவனை அறிமுகம் செய்துவைத்தாள். அவ்வப்போது அவளோடு இருக்கும் போது அமுதனும் அவள் தாய் தந்தையுடன் உரையாடியிருக்கிறான். அவளின் தந்தை அவனோடு பேசும்போதெல்லாம் அதிகமாக நன்றி சொல்லிக்கொண்டிருப்பார். அவர் மகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையப்போகிறதென்ற பூரிப்பு அவரின் பேச்சில் தெரியும்.

அடுத்தடுத்த சந்திப்புகளில் அவர்கள் உறவு, குதிரைப் பாய்ச்சலில் வெகுதூரம் சென்றது. சில ஞாயிறுகள் ஹோட்டல் அறைகளில் கழிந்தன. அதன்விளைவு அவன் எதிர்பார்த்ததைவிட வேகமாகவே வந்தது. 

அவனுடைய அலைபேசியில் அவள் கர்ப்பமாக இருப்பதாக செய்தி அனுப்பினாள். இத்தனைநாள் உறவுகொள்ளும்போது இல்லாத தற்காப்பு உணர்வு இப்போது அமுதனுக்கு வந்தது. 

“என்ன காரியம் செய்துவிட்டேன். இப்போது இது வெளியில் தெரிந்தால் எவ்வளவு அசிங்கம். வேறு எதுவும் பிரச்சனைகள் வந்துவிடுமோ” தனக்குள் புலம்பித் தவித்தான். எப்படியாவது அவளைக் கலைக்க வைத்துவிட வேண்டும் என்று முடிவு செய்துகொண்டு அந்த ஞாயிறு அவளை பிசான் பூங்காவில் சந்தித்தான். அவள் பிடிவாதமாக முடியாதென்றாள். 

அவன் ஏதேதோ காரணமெல்லாம் சொல்லிப் பார்த்தான். அவள் அழத் தொடங்கிவிட்டாள். அவளுக்கு இன்னொரு மகன் இருப்பதாகக் கூறி அவனை மேலும் அதிர்ச்சியடைய வைத்தாள். விம்மிவிம்மி அழுதாள். தான் ஏற்கனவே பதினேழு வயதில் ஒருமுறை ஏமாற்றப்பட்டதாகவும் இப்போது இரண்டாம்முறை இவன் ஏமாற்றிவிட்டதாகவும் கூறினாள். தன் பெற்றோர் ஒருபோதும் கருக்கலைப்பிற்கு சம்மதிக்க மாட்டார்கள் என்றாள். தன் மதம் அதனை அனுமதிப்பதில்லை, பெரிய பாவம் என்றாள்.

அவனுக்கு அது புதிதாக இருந்தது கிறித்துவர்கள் கருக்கலைப்பு செய்ய மாட்டார்களா? அவளிடமே கேட்டான். ஆம் எங்கள் மதத்தில் அது தடைசெய்யப் பட்டிருக்கிறது. என் அப்பா நிச்சயம் அனுமதிக்க மாட்டார். பதினேழு வயதில் நான் கருவைச் சுமந்த போதும் என் பெற்றோர்கள் என்னை கருக்கலைப்பிற்கு அனுமதிக்கவில்லை ஒரு மகனைப் பெற்று இன்று அவனுக்காகத்தான் இங்கு வந்து உழைத்துக் கொண்டிருக்கிறேன் என்றாள். மாதம் அவள் அனுப்பும் இருநூறு முன்னூறு வெள்ளிகளில்தான் அவள் பெற்றோர் இவள் பிள்ளையை வளர்த்து வருகிறார்கள். 

அவளின் பரிதாபமான நிலை அவளின்மீது அவனுக்கு இரக்கத்தை உண்டாக்கியதே தவிர அவளை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு அவன் மனம் பக்குவப்படவில்லை. அவளுக்கு ஒரு மகன் இருக்கிறான் என்பதே அவனுக்கு இப்போது தான் தெரியும். 

‘இவளை என் வீட்டில் மருமகள் என்று கொண்டுபோய் நிறுத்தினால் என் அப்பா ஏற்றுக்கொள்வாரா? ஒரு மகனோடு வயிற்றில் ஒரு குழந்தையோடு இவள் என் வீட்டிற்குள் நுழைந்தால் என் அம்மா சும்மா இருப்பாளா? என் ஊர் இவளை ஏற்குமா? என்ன செய்துவிட்டேன். ஏதோ சபலத்தில் இப்படி சிக்கிக்கொண்டேனே.’ என உள்ளுக்குள் புலம்பினான்.

மகள் தன் ஆண் நண்பன் என்று கூறிக்கொண்டு ஒருவனோடு சுற்றுவதை ஏற்றுக்கொள்ளும் அவள் பெற்றோர், அவனால் கரு உண்டானால் அதைக் கலைக்க தடையாக கடவுளை கொண்டுவருகிறார்கள். அதேநேரம் அவன் யாராக இருந்தாலும் கைப்பிடிக்க சம்மதிக்கிறார்கள். ஆனால் அவன் வீட்டிலோ அவளோடு பழகியதே பெரும் குற்றமாகப் பார்க்கப்படும்.

சிங்கப்பூர் போன்ற ஒரு நாட்டில் ஒரு பெண்ணை கற்பவதியாக்கிவிட்டு தப்பிப்பது என்பது நடக்காத ஒன்று. அந்தப் பெண் சம்மதித்தால் மட்டுமே சட்டச்சிக்கல் இல்லாமல் தப்பிக்க முடியும். எப்படியாவது அவளைக் கருவை கலைக்க சம்மதிக்க வைக்க வேண்டும் வேறு வழியில்லை அவள் கைகளைப் பிடித்துக்கொண்டு கெஞ்சினான். 

அவள் மேலும் மேலும் குலுங்கி அழுதாள். 

அவன் நிலையை அவளுக்கு மீண்டும்மீண்டும் எடுத்துக் கூறினான். அவன் பெற்றோர்கள் அவனை முற்றாக ஒதுக்கிவிடுவார்கள் என்றுகூறி கண் கலங்கினான். விசும்பி விசும்பி அழுதான். கண்களைத் துடைத்துக்கொண்டு ‘சாரி…. சாரி….’ என்றான். 

அவளுக்காக அவன் வருத்தப்படுவது போய் இப்போது அவள் அவனுக்காக இரக்கப்பட்டுக் கொண்டிருந்தாள். 

***************************************

ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்….

***************************************

அடுத்த பாகத்தை பார்க்க கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்

ஊழ்…! – 8

ஜெயக்குமார்
ஜெயக்குமார்https://minkirukkal.com/author/jeyakumar/
கதைகள், கவிதைகள், கட்டுரைகள் வாசிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். சிறுகதைகள், கதை மற்றும் நூல் விமர்சனங்கள், கட்டுரைகளை மின்கிறுக்கல் தளத்திற்காக எழுதி வருகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -