அவள் – சிறுகதை

- Advertisement -

“ஓம் கௌசல்யா சுப்ரஜா இராம பூர்வ ஸ்கந்தா ப்ரவர்த்ததே..உத்திஸ்ட…”

மனவிளிம்பின் குழப்பத்தில் ஆழ்ந்து தூக்கமின்றி தலையை மட்டும் தலையணைக்கு மடிசாய்த்து முகத்தைப் பஞ்சுகளுக்கிடையில் புதைத்துக் கொண்டிருந்த அன்பழகனுக்கு வெங்கடேஸ்வர சுப்ரபாதம் சிந்தையை வறுத்தெடுப்பதைப் போலவே இருந்தது.அந்த வீட்டில் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் சுப்ரபாதம் அன்பழகனுக்குத் தாயின் அரைக்கூவல் போன்றது.அனுதினமும் தன் தாயே தன் தலையை வருடி 

“ஏந்திரி அன்பு…”

தாயின் குரலுக்கு முன்னதாகவே இனிமையான சுப்ரபாதம் செவிகளைத் துளைத்து விடும்‌.

சிந்தனையை ஒரு நிலைப்படுத்தயிலாத அன்பழகனால் எதையும் உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை.மனமகிழ்வோ நற்சிந்தனையோ அவனது மனத்தில் எதுவும் லயிக்க வில்லை.தலையணை காதுகளின் துவாரங்களுக்கு வழிமறித்து நின்றன.

அவளது வருகையை உணர ஆரம்பித்த நாள் முதல் அன்பழகனின் மனநிம்மதி தொலைந்து போனது.வாகனத்தில் தனியாக பயணிக்கும் போதெல்லாம் அமானுஷ்ய உறவொன்று உடன் பயணிப்பதாக அன்பழகனால் உணர்ந்த போது,

“படவா ராசுகோலு..‌.நிம்மதியா கண்ண மூட வுடறியா…செத்த தல சாஞ்சா போதும் காதுல குச்சியா உடுற…இருடா…நான் செத்தா உன்ன சும்மா வுட மாட்டேன்….”

அப்பத்தாவின் உள்ளகுமுறல்கள் அந்தந்த நிமிடங்களுக்கு மட்டுமே சூழ்நிலைகளை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும்.அடுத்த கணம்,

“பேராண்டி…வாடா…தங்கம்…என் செல்லம்…பவுனு…”

அப்பத்தாவின் வாய் மட்டும்தான் வார்த்தைகளைப் கோர்த்து கோபத்தால் வசைப்பாடுமே தவிர அவளது உள்ளம்‌ உறவு முறைகளின் மீது தீராத நம்பிக்கையும் உடன்பாட்டையும் கொண்டிருக்கும் என்பதனை அன்பழகன் உணராதவன் அல்ல.வாகனத்தில் தனியாக பயணிக்கும் போதும் தனியாழாய் ஓரிரு இடங்களில் இருக்கும் போது அந்த உறவின் வருகையை ஒருவித நிழழாய்,காற்றாய் உணர்வான்.

“ஏய்…கட்ட கெழவி என்ன நீ என்ன பயமுறுத்த வந்துருக்கியா…ஐயோ…கெழவி நா பயந்துட்டேன்…பாரேன் கையும் காலும் உன்ன மாதிரி டிஸ்கோ டான்ஸ் ஆடுது…”

அப்பத்தாவோடு கேலியும் கிண்டலுமான அன்பழகனின் நெடுந்தூர பயணங்கள் கூட தனிமையை உருவாக்கியதில்லை.தன் குலச்சாமி தன்னோடு பயணிப்பதில் அவனது மனம் பாதுகாப்பானதாக உணர்ந்தது,அன்றைய சம்பவத்திற்கு முந்தைய நாள் வரை.

அன்றைய நாள் ரவாங்கின் புக்கிட் செந்தோசாவில் இழவு வீட்டில் உயிர் பிரிந்த துக்கத்தின் வடு முழுமையாய் மனத்தை ஆக்கிரமிப்புக் கொள்ளும் முன்னரே

“பெருசோட இன்சூரன்சு எவ்வள….”

சாராய வாடையோடு செல்லப்பாவின்  மகனின் போக்கு வருத்தமளித்தது.ஒருவரின் இறப்புக்குப் பின்னர் பணம் முதல் குறிக்கோளாய் மாறுவது காலத்தின் கோலம் என்றாலும் உலகமறியாத செல்லப்பா மனைவியின் நிலையில் அவனது மனம் தள்ளாடியது.அச்சம்பவத்திற்குப் பின்னர் ஒரு நிலையில்லா மனத்துடன் அன்பழகனால் வாகனத்தைப் செலுத்தயியலவில்லை.சாலையோர அங்காடிக் கடையில் தேநீர் அருந்த அவசரமாக இறங்கியவனின் கையயைச் சில வினாடிகளிலே ஓர் ஆத்மா இழுத்துத் தள்ளுவதைப் போன்று உணர்வு ஏற்படாமல் இருந்திருந்தால் அவனது உயிர் பத்து சக்கர கனவுந்துக்கு இரையாகியிருக்கும்.

“அப்பத்தா….என்ன காப்பாத்திட்ட….”

அன்பழகனின் உணர்வுகள் உள்ளங்களில் ஊடுறுவி உடல் சிலிர்த்துப் போகும் முன்னரே அவன் சிந்தையில் ஏதோ ஒன்று தட்டி விட்டதுப் போலிருந்தது.பால்மரம் சீவி தோளில் காண்டா சுமந்து விறுவிறுவென்று நடைப்போட்டு கோடாரியால் விறகுக் கட்டைகளை ஓரே வேகத்தில் பிளந்தெடுக்கும் அப்பத்தாவின் உள்ளங்கைகளில் ரேகைகள் மறைந்து காப்பு காய்த்திருக்கும்.அன்பழகன் உணர்ந்த அக்கைகள் மென்மையான தோல்கள்.அவளை முழுமையாக உணர்ந்தது அந்த நொடியில்தான்.

“ஏன்டி…ஒன் புருசன முக்கிய புக்கி கோசாவுல இருக்கற பாக் யா போமோக்கிட்ட கூட்டிட்டுப் போலாமுடி….மூனு நாளா பேயறைஞ்ச மாதிரி இருக்கான்…”

இந்த வார்த்தை வந்த திசையை அன்பழகன் நோக்குவதற்குள் வெங்கல பாத்திரங்கள் திக்குத் திசையறியாமல் உருண்டோடும் சத்தம் வீட்டை ஆக்கிரமித்தது.என்னதான் மனக்குழப்பமாயினும் அவன் சிந்தை இன்னும் கட்டுக்குள் தான் கிடந்தது.அவனது கண்கள் வீட்டிலுள்ளவர்களைப் பார்க்கயியலாத  பட்சத்தில் தாழிட்டிருந்த அறைக் கதவைத் திறந்து கொண்டு 

“மஞ்சரி சட்டய அயன் போடு… கஸ்தமர பார்க்க போனும்…”

வீட்டு வாசலைப் தாண்டும் வரை இருவரது மனமும் கண்களும் மௌனித்து நகர்ந்து கொண்டிருந்தன.நா ன்கு சக்கர வாகனத்தை முடுக்க இயலாமை அவனுள் அலைக்கழித்துக் கொண்டிருந்தது.குழப்பத்தில் சிந்தனைப் பிறந்தவனாய் வாகனத்தை அன்பு இல்லத்தை நோக்கிச் செலுத்தினான்.வழியெங்கும் தோள் பட்டையில் இறுக்கத்தை உணர்ந்தவனாய் உடல் சிணுங்கிக் கொண்டேயிருந்தது.அத்தடவலை எதிர்ப்பார்த்தவனாயினும் அதை ஏற்க முடியாதவனாகவும் உள்ளக்கிடங்கில் தத்தளித்துக் கொண்டிருந்தான் அன்பழகன்.

“அவதான் “

அவளது முதல் சந்திப்பு விசித்திரமானது.அன்பழகன் அப்படியொரு நாளை வாழ்நாளில் எதிர்பார்த்திருக்க மாட்டான்.ஒருநாள் சந்திப்பாயினும் அவளோடு இருந்த ஒவ்வொரு விநாடியும் மறப்பதற்கில்லை.சிலரது சந்திப்பு ஒருநாள் ஒரு நிமிடமானாலும் மறக்க முடியாத தருணங்களை விட்டுச் செல்கின்றன.அவளைச் சந்தித்த மூன்றாம் நாளிலிருந்து அன்பழகனின் கண்முன் நிழலாவது வழக்கமான ஒன்றாகிப் போனது.புன்னகைக்கும் கன்னங்குழிகளை மனத்தில் புதைத்திருந்தான்.மஞ்சரிக்கும் அவனுக்கமான விரிசலை அவளது சந்திப்பு இன்னும் அகலமாக்கியது.புரிதலின் ஆழம் சமத்தரையாகிக் கொண்டிருந்தது.அவளது ஞாபகலைகள் அலைக்கழிக்கும் போதெல்லாம் அச்சிந்தனை நகர்வு அவள் மீது ஏற்பட்ட ஈர்ப்பு என்றுதான் வகைப்படுத்தியிருந்தான்,அவளது வருகை உண்மையின் தாக்கம் என்று உணராத வரை.

அன்பழகன் மீண்டும் நாளிதழைப் பார்த்தான்.கழுத்து நெறிக்கப்பட்டு பிறப்புறுப்பில் பல சிதைவுகளை ‌உட்படுத்திய அவளது மரணத்தைப் பதிவு செய்த எழுத்துகள் கண்களில் ஓரம் நீரை வழியவிட்டது.வழிந்த நீரின் ஓட்டம் தாடையைக் கடக்கவில்லை.அவளது மென்மையான விரல்களின் ஸ்பரிசம் கன்னத்தில் கலந்தது போல உணர்வு.

அன்பு இல்லத்தின் முன் வாகனம் நின்றபோது வில்லங்கம் மீண்டும் தலைத்தூக்குவதைக் கண்டு ஆட்டங்கண்டுப் போனார் பராமரிப்பாளர்.

“தம்பி,இங்கிருந்து கிளம்புலனா பாலாய்ல ரிப்போர்ட் பண்ணிடுவேன்…”

தன்னைத் தற்காத்துக் கொள்ளும் பராமரிப்பாளரிடமிருந்து அவளுக்கு ஏற்பட்டிருந்த நெருக்கடியின் உச்சத்தை அன்பழகன் உணர்ந்து கொண்டான்.

வாகனத்தில் வந்து அமர்ந்தவனுக்கு அவள் நினைப்பு வாட்டி எடுத்தது.புதிய நண்பர்களின் கூட்டுச் சேர்க்கை அன்பழகனை ஓட்டல் வாசலில் வந்து நிறுத்தியது.வரவேற்பறையில் வந்து அமரும்படி அவனுக்கொரு புலனச்செய்தி வந்தது.அனுப்பியர் யாரென்றும் அறிந்திராத நிலையில் நண்பன் சொல்லியனுப்பியதை நினைவில் கொண்டு வந்தமர்ந்தான்.பத்து நிமிட காத்திருப்பில் ஒரு முகம் கூட தெரிந்தவரல்ல.திடிரென அன்பழகனின் மூக்குத் துவாரங்களில் நுழைந்து கண்களை இறுக வைத்தது‌ வாசனைத் திரவிய மொன்று.கண் மூடி திறப்பதற்குள் ஏதோ ஓர் உருவம் அவனைக் கடந்து மறைந்தும் போனது.கண்கள் அவளைத் தேடிக் கொண்டிருக்க கைப்பேசியில் மீண்டும் புலனச்செய்தி,

“தேடனது போதும்….ரூம் 213…”

சுற்றும் முற்றும் பார்த்த அன்பழகன் தான் கண்கானிக்கப்படுவதை உணர்ந்தான்.மீண்டும் புலனச்செய்தி அலறியது.

“சீக்கிரம்…”

புலனச்செய்தி ஆட்டுவிக்கும் பொம்மை போல் ஆனான் அன்பழகன்.அவன் அறையை நெறுங்குவதற்கும் அறைக்கதவு திறப்பதற்கும் சரியாக இருந்தது.

“வாங்க”

வாய்விட்டு அழைக்காமல் கைகளால் சாடைக் காட்டி வரவேற்றாள்.அவளது மீதான திரவிய வாசனையைக் உணர்ந்து திடுக்கிட்டான்.அவளது முகத்தைக் கண்டு அவனால் எதுவும் பேசயிலவில்லை.அறையினுள் நுழைய அவனது மனத்தில் சிறு தட்டுப்பாடு எழுந்தது.அவளது புன்னகை மீண்டும் அவனை உள்ளிழுத்தது.

அவளது கண்களில் மெய்மம் கலந்திருப்பதை அவனால் உணர முடிந்தது.அழகிய கண்கள் , மெல்லிய உடல், பேச்சில் கவனமும் நிதானமும் தெளிவும் நிறைந்திருந்தன.அன்பழகனால் அவளிடம் நெருங்கிட முடியவில்லை.திருமண வயதை நெருங்கி விட்டவள்.வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருக்கிறாள்.வறுமையின் உச்சத்தில் அவளில்லை.வாழ்க்கையின் உந்துதல்,காலத்தின் பிடி என்று பலவாறு அன்பழகனின் சிந்தனையைக் தெரிக்கவிட்டாலும் அவள் தனது தொழிலில் தெளிவாக இருந்தாள்.

அந்த அறை அவளுக்குப் பழக்கப்பட்டது போலத்தான் நடந்து கொண்டாள்.அன்பழகனால் அவளது இயல்பான போக்கு புரிந்துகொள்ள முடியாத ஒரு நிலையை உருவாக்கி விட்டிருந்தது. இச்சையை தீர்த்துக்கொள்ள வந்தவனுக்கு மனம் கணமாகிப் போனது.சாதகமற்ற சூழ்நிலையில் அவன் மனம் லயிக்காமல் அவளிடம் பேச்சை மட்டுமே வளர்த்துக் கொண்டு போனான்.அவனது கண்மூடித்தனமான கேள்விகளுக்கும் கூட அவள் பதிலளிக்க சற்றும் தயங்கியவளாகத் தெரியவில்லை.வாழ்க்கையின் மீதான புரிதலில் தெளிவும் விரக்தியும் ஒன்றெனக் கலந்து அவளது உணர்வுகளை ஆரோகமித்திருந்தன.

“எனக்கு டூ அவர்ஸ் தான் டைம்.நீங்க பேசிக்கிட்டு இருந்தா எப்படி…இன்னிக்கு நீங்க மூணாவது கஸ்தமர் சில விசயம் சமுதாயத்தில் ஒத்த ஆளா நின்னு மாத்த முடியாது…ஹோம்  பாதுகாப்புக்கு நெனச்சோம்….….விடுங்க எண்சம்….வந்த வேலயப் பாருங்க….”

அன்பழகனால் அவளது கண்களை நோக்கிட முடியவில்லை அவளிடம் ஏதோ ஒருவிதமான ஈர்ப்பு மௌனமொழி கடந்து கொண்டிருக்கும் அவளது வாழ்வியல் நிலைப்பாட்டை பற்றி மட்டுமே மனத்தில் ஊடுருவிக் கொண்டிருந்தது. ஒரு மணி நேர இடைவெளியில் ஆடைகளை சரி செய்துக் கொண்டிருந்த அவளை உற்று நோக்கினான் அவன்.

அவள் எந்த ஒரு சலனமும் இன்றி காணப்பட்டாள். இளம் வயதில் ஆண்களின் வக்கிர புத்திக்கு தன்னை இரையாக்கிக் கொள்ளும் இவளைப் போன்றவர்கள் இருந்தும் பல பிஞ்சுகள் கொடூரமாகப் போவதை அன்பழகன் பலவாறு எண்ண அலைகளாக சிதற விட்டான்.ஆனாலும் இவளும் ஒரு இளம் பிஞ்சு தானே என்று மனதில் வருத்தம் கொண்டான். அவளுக்காக அவன் மனம் பட்டபாடு ஓரிரு வினாடிகள் என்றாலும் அது ஒரு பெண்மையின் மீதான இரக்கம் என்பதா, அப்பெண்ணை நாடிய குற்ற உணர்ச்சியா என்று தனக்குள் பல கேள்விகளை அடுக்கினான். அன்பழகன் கொடுத்த பணத்தை எண்ணிப் பார்க்கவில்லை. அது அவளது இயல்பான குணமா அல்லது வக்கிர புத்தியுள்ள ஆண்களின் நேர்மைத்தனமா என்று அன்பழகனின் கேள்விகள் கரைசேரும் அலைகளாய்த் திரும்பத் திரும்ப சிந்தையை முட்டி மோதிக் கொண்டிருந்தன.

கதவருகே கொண்டு வந்து நிறுத்தினாள் அன்பழகனை.அறைக்கதவின் பின்னே உடலை மறைத்து கண்களை மட்டும்  அன்பழகனின் பார்வைக்கு விட்டிருந்தாள்.அவளது கண்களில்,ஏக்கம்,,எதிர்பார்ப்பு தெரிந்தது. கண்களால் கைது செய்து உருண்ட  அவளது விழிகளால்  எதையோ அவள் பறைச்சாற்ற முயன்றது போலிருந்தது.அவனது தொண்டைக்குழியிலிருந்து வார்த்தைகள் வெளிவருமா முன்னரே கைப்பேசியில் புலனச்செய்தி.

“இன்னும் யேன் லேட்….போ…”

செய்தியை வாசித்து நிமிர்வதற்குள் அறைக்கதவு சாத்தப்பட்டது‌.ஒன்றும் விளங்கிக் கொள்ளயியலாத நிலையில் நடந்தான்.நான்கைந்து அடிகளுக்குப் பிறகு அவளை நினைவை இழக்க விரும்பாதவனாய் திரும்பியபோது அறை எண் 213 க்குள் இன்னோருவன்.கணம் நிறைந்த மனத்தோடு விலகிப் போனான்.

அவளது மரணத்திற்கும் அன்பழகனிடம் அவள் சொல் முயன்ற விடயத்திற்கும் தொடர்புப்படுத்தியே பார்த்தான்.பல முறை சிந்தனையைக் தூண்டி விட்டதில் பால்ய நண்பன் ஒருவன் ஊடகவியலாராக இருப்பதை உணர்ந்தான்.அவளது மரணத்திலிருக்கும் மர்மத்தை அவனால் மட்டுமே அவிழ்த்திட முடியும் என்பதை அறிந்து வாகனத்தைப் பூச்சோங்கிற்குச் செலுத்தினான்.அவளது உருவம் அவளைப் பின் தொடர்வதை உணர்ந்தான்‌.

ஆக்கம்

காந்தி முருகன்

காந்தி முருகன்
காந்தி முருகன்https://minkirukkal.com/author/kanthimurugan/
மலேசியாவில் வளர்ந்து வரும் புதிய படைப்பாளர்.இயல் பதிப்பகத்தின் வெண்பலகை சிறுகதை பயிலரங்கில் எழுத்தாளர் கே.பாலமுருகன் அவர்களின் வழிக்காட்டுதலில் பயிற்சி பெறும் மாணவி. சிறுகதை,கவிதை,விமர்சனப் பார்வை என தனது எழுத்தாற்றலை விரிவாக்கி கொண்டிருக்கிறார்.தமிழ் நாட்டின் பைந்தமிழ் இலக்கியப் பேரவை நடத்திய சிறுகதைப் போட்டியில் தி.ரா. விருது பெற்றிருக்கிறார். மலேசிய வானொலி மின்னல் பன்பலையில் அமுதே தமிழே நிகழ்ச்சியின் சிறுகதைப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -