இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்
இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்
Junk food factory யைப் போல் மனம் எண்ணங்களை உற்பத்தி செய்துகொண்டே செல்வதால்தான மன அழுத்தம், மனச் சோர்வு, வெறுமை, விரக்தி, பயம், கோவம் ஆகிய உணர்வுகள் பிறக்கின்றன. அந்த எண்ண உற்பத்தியை கட்டுப்படுத்துவதற்கு எந்த மருத்துவத்திலும் மருந்தில்லை. ஒரு உடல் உறுப்பைப் போல் அதை மருந்து கொடுத்து குணப்படுத்த முடியாது. ஆனால் மக்களோ, மனநல மருத்துவர்களிடம் சென்று மாத்திரைகளை வாங்கி விழுங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள். தன்னிடம் பேசுவதற்கு ஆள் இல்லாமல் தவிக்கும் மேற்கத்தியர்களோ, பணத்தை கொடுத்து தனது மன பாரத்தை ஒன்று விடாமல் வேறு ஒருவரிடம் பகிர்ந்துகொண்டு அதில் ஒரு தற்காலிகமான மன அமைதியை அடைகிறார்கள். ஆனால் சிறிது நாட்களில் மீண்டும் பலவிதமான பிரச்சனைகளோடு அதே மனநல மருத்துவரின் பின்னே ஓடுகிறார்கள். மனதிற்கு பிரச்சனை என்றால் செல்ல வேண்டிய இடம் மருத்துவமனை அல்ல. பிறகு வேறு எங்குதான் அதற்குத் தீர்வு என்று கேட்டால் “வழிபாட்டுத் தலங்கள்” என்பதுதான் நேர்மையான பதில். மதங்களை வெற்று சடங்குகளாகவும், வழிபாட்டுத் தலங்களை நேரத்தை வீணாக்கும் இடமாகவும் பார்க்கும் நாத்திகர்கள் தங்கள் மனப் பிரச்சனைகளைத் தீர்க்க தியானத்தில் இறங்கலாம். கடவுளை, வழிபாட்டை நிராகரிக்கலாம் ஆனால் மனதை நிராகரிக்க முடியாதே. அதனோடு தினமும் போராடுவதற்கு ஏதாவது ஒரு வழிமுறையை பிடித்துத்தானே ஆக வேண்டும். ஆனால் தியானம் என்றாலும் ஏமாற்று வேலை என்று நினைப்பவர்களை நம்பித்தான் மனநல மருத்துவமனைகள் இன்னும் கட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
தன்னை அடக்கும் உபாயத்தை மேற்கொள்ளாமலிருக்க மனம் எந்த எல்லைக்கும் சென்று எல்லாவற்றையும் பொய் என்றும் ஏமாற்று என்றும் கூறும். இப்படிப்பட்ட தந்திரமான மனதை தந்திரத்தால் வீழ்த்துவதற்குத் தான் வழிபாட்டு முறைகள் உருவாக்கப்பட்டு நாளடைவில் மதங்களாகவும் அறியப்பட்டன. தியானத்தில் செயலற்ற தன்மை இருப்பதால்தான் பல்வேறு பிரச்சனைகள் உருவாகிறது என்பதை கண்டறிந்த அறிவார்ந்த மக்கள், மனதை நேரடியாக அணுகாமல் நிறைய செயல்கள் இருப்பது போன்ற சடங்குகளை, சம்பிரதாயங்களை, சட்ட திட்டங்களை கட்டமைக்க ஆரம்பித்தனர். அப்படித்தான் மதங்கள் ஏற்ப்பட்டன. மதம் என்பது பாமரத்தனமானது என்று கூறுபவர்களுக்கான பதில் என்னவென்றால் “ஆம், ஏனென்றால் அவை பாமரர்களுக்கானதே”. யாரும் எளிதாக பயன்படுத்தும் வகையில் கட்டமைக்கப்பட்டதே மதம். அந்தக் கருவியை சரியாக பயன்படுத்தினால் யாரும் தன் மனதை கட்டுக்குள் கொண்டு வர முடியும். நம்பிக்கையை மட்டுமே அச்சாணியாகக் கொண்டு, எளிய மனிதர்கள்கூட மிக சுலபமாக மன அமைதியைப் பெறுவதற்காகத்தான் அவ்வாறு உருவாக்கப்பட்டது. ஆனால் மிகவும் அறிவு சார்ந்து இயங்குபவர்கள் தியானத்தை நோக்கித் தான் நகர வேண்டும். வேறு வழி கிடையாது. இல்லையேல் வழிபாடு செய்யும் சூழ்நிலைகளில் “இதெல்லாம் முட்டாள்தனம்” என்று மனம் தொடர்ந்து சொல்லி நோக்கத்தைக் கலைக்கும். இந்த காரணத்தினால்தான் மெத்தப் படித்த அதிமேதாவிகளைவிட சாதாரண மனிதன் அமைதியாக வாழ்க்கையை நடத்துகிறான். சரி அப்படியென்றால் அறிவாளிகள் மிக எளிதாக தியானம் பழகிவிட முடியுமா? கடினம்தான். ஏனெனில் தியானம் செய்வதற்கு அறிவைவிட மிகுந்த பொறுமை தேவைப்படுகிறது.
தியானம் என்றால் மனதை ஒருமுகப்படுத்துவது என்ற தவறான புரிதல் பரவலாக இருக்கிறது. நமது மனத்திரையில் ஓடும் அனைத்து காட்சிகளையும் ஒரு சினிமா பார்ப்பது போல் பார்த்தால் மட்டுமே போதும் அது தான் தியானம். அவ்வாறு கண்காணிப்பதால் என்ன நடந்துவிடும் என்று நினைக்கலாம்? கண்காணிக்கும் போது நாம் விழிப்புணர்வுடன் இருப்போம். நிகழ்காலத்தில் இருப்போம். மனதின் கட்டுப்பாட்டில் இருக்க மாட்டோம். ஏனென்றால் மனம் என்பதே கடந்த கால எண்ணங்கள் அல்லது எதிர்கால எண்ணங்கள் தானே. இப்படித் தொடர்ந்து கவனித்து வரும்போது சிறிது நாட்களில் நாம் வேறு, மனம் வேறு என்ற உண்மை புரிய ஆரம்பிக்கும். மனம் தன்னிச்சையாக எண்ணங்களை உற்பத்தி செய்கிறது என்பது புரியும். மனம் நம்முடையதாக இருந்தால் நாம் நினைத்தவுடன் எண்ணங்களை நிறுத்த வேண்டுமல்லவா? மனம் கைகால்களைப் போல் கட்டுப்படவில்லையே. அது அந்நியமாக அல்லவா இருக்கிறது. முதன் முறையாக நமக்குள் வேறு யாரோ ஒருவன் இருக்கிறான் என்ற உணர்வு ஏற்படும். நாம் மனதிடமிருந்து சற்று தள்ளி நின்று பார்க்க ஆரம்பிப்போம். ஒரு முறை முயன்று பாருங்கள். முதலில் ஒரு நிமிடத்திற்கு ஆயிரம் எண்ணங்கள் என்ற அளவில் தறிகெட்டு ஓடும் மனம் நாளடைவில் மெல்ல மெல்ல தன் வலுவிழந்து நூற்றுக்கணக்கான எண்ணங்களாக குறையும். அது நிகழும் வரை மிகுந்த பொறுமையும் விடாமுயற்சியும் தேவை. பெரும்பாலான மக்களுக்கு இந்த முறை பயனுள்ளதாக அமையாததால்தான் மதத்தின் தேவை உண்டானது. எனவே மதங்களை கண்மூடித்தனமாக விமர்சிப்பவர்கள் மனதை வெல்லும் மாற்று வழிகளை மக்களுக்குச் சொல்லிவிட்டுத் தங்கள் பணிகளைத் தொடரலாம்.
எந்த மதமாக இருந்தாலும் சரி அந்தந்த வழிபாட்டுத் தலங்களை விட மனதை அமைதியடையச் செய்யும் இடம் இந்த உலகில் வேறு எதுவுமே இல்லை. தனியாக கண்களை மூடி அமர்ந்து தியானம் செய்வது மிகக்கடினமாக இருப்பதால்தான், நிறைய பேர் இணைந்து மனதை வழிக்கு கொண்டு வருவதற்காக கோவில்கள் உருவாக்கப்பட்டன. (இதை முன்பே ஒரு பகுதியில் விரிவாக பார்த்திருப்போம்) ஆனால் மதத்தை விஞ்ஞானப்பூர்வமாக அணுகினால் மட்டுமே அந்தப் பலன் கிட்டும். துரதிர்ஷ்டவசமாக மதம் தற்போது அரசியல் காரணுங்களுக்காகவே பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. யாருக்கு ஓட்டுப் போட வேண்டுமென்பதை நிர்ணயிக்கும் இடங்களாக வழிபாட்டுத்தலங்கள் மாறிக்கொண்டு வருவது காலத்தின் கூத்து. எப்போது மதம் அரசியலாக்கப்பட்டதோ அப்போதுதான் மதத்தின் பெயரால் வன்முறைகளும் ஆரம்பமாயின. ஆனால் அதற்காக இந்த வன்முறைகளை மட்டுமே பார்த்துவிட்டு, மதங்களே வேண்டாமென்று சொல்லி, பிரச்சனைகளுக்கெல்லாம் காரணமே மதம்தான் என்பது போல் ஒட்டுமொத்த பழியையும் அதன் மேல் போட்டுவிட்டு பகுத்தறிவுப் போர்வையில் ஒளிந்துகொள்வது, மனித மனதின் சாமர்த்தியம் தானே தவிர உண்மையில் அத்தகைய மேலோட்டமான, குழந்தைத்தனமான முடிவெடுக்க எந்த அறிவும் அவசியம் இல்லை.
ஆரம்பிக்கப்பட்ட நோக்கம் நாளடைவில் மறந்துபோவது எல்லா சித்தாந்தங்களுக்குமே நடக்கக்கூடிய ஒன்றுதான். உருவ வழிபாடை வேண்டாமென்று சொன்ன புத்தரையே சிலையாக்கி பூஜை செய்கிறார்கள். ஆனால் அவர் சொன்ன தம்மபதத்தின் வழியே நடப்பவர்கள் மிக சொற்பமே. கடுமையான தியான முறைகளை விதித்த நிறைய மதங்கள் பின் பற்றுபவர்கள் இன்றி காலப்போக்கில் அருகிவிட்டன அல்லது புத்தருக்கு நடந்தது போல் அவர் சொன்னதற்கு நேர்பதமாய் பின்பற்றப்படுகின்றன. ஆனால் ஆரம்பித்தவர்கள் அத்தனை பேரின் நோக்கமும் மனதை வெல்வதுதானே தவிர மனிதன் ஒருவனை ஒருவன் வெல்வதற்கல்ல. என்னதான் மனதை வெல்வதற்காக உருவாக்கப்பட்டாலும் மற்ற அமைப்பைப் போல் மதம் என்ற அமைப்பிலும் அதிகாரம் ஓர் இடத்தில் குவியத்தான் செய்கிறது. அந்த அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தும் போதுதான் அங்கே அரசியல் நுழைகிறது. அத்தகைய சூழ்நிலையில்தான் மதத்தின் சட்ட திட்டங்கள் மக்களை மேன்மையாக்குவதற்குப் பதிலாக பிரிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. இதைப் புரிந்து கொண்டு சிக்காமல் இருப்பதுதான் மனித சமூகத்திற்கு நாம் செய்யும் மிகப் பெரிய சேவை.
– தொடரும்
சுவாரசியமான தகவல்கள். மிக அருமை. மனத்தைப் பழக்கப்படுத்த நல்ல நல்ல யோசனைகளை. ????
மிக்க நன்றி நண்பரே.