அழுக்குக்கண்ணாடி – 12

- Advertisement -

இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்

மனிதர்கள் எப்போதும் எதையாவது தேடிக்கொண்டே இருக்கும் இயல்புடையவர்கள். தேடலுக்கு, ஏதோ ஒன்றை இழப்பதால் அல்லது இருப்பதன் மேல் அதிருப்தியால் என்ற இரண்டு காரணங்கள் மட்டுமே இருக்க முடியும். இல்லாவிட்டால் ஏன் எதையாவது தேடி அலைய வேண்டும். இதில் இழப்பினால் வரும் தேடலுக்குக் கூட ஒரு ஞாயம் கற்பிக்கலாம் ஆனால் அதிருப்திக்கு எல்லையே இல்லை. எதுவும் மனிதனை திருப்திபடுத்துவதாக தெரியவில்லை. கற்பனை செய்யமுடியாத உச்சத்தை அடைந்த பிறகும், ஒருவிதமான வெறுமையும், திருப்தியின்மையும் மட்டுமே மிஞ்சுகிறது. ஒவ்வொரு வேளையும் உணவு சாப்பிடுவது போல்தான் இது. எத்தனை வயிறு புடைக்க உண்டாலும், எப்பேர்ப்பட்ட அறுசுவை உணவாக இருந்தாலும், சில மணி நேரங்களில் மீண்டும் பயங்கரமாகப் பசிக்கிறது. ஆனால் உடலின் இந்த எதார்த்தத்தை உணரும் நாம் மனதிற்கும் இது பொருந்துமென்று நினைப்பதில்லை. அனைத்துவிதமான பிரச்சனைகளுக்கும் அதுதான் விதை.

வாழ்க்கையில் “செட்டில்” ஆக வேண்டும், வீடு, கார் வாங்கி “செட்டில்” ஆகவேண்டும், திருமணம் செய்துகொண்டு “செட்டில்” ஆகவேண்டும், என்று தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் நாம், உண்மையில் எதற்கும் “செட்டில்” ஆவதில்லை என்பதை, அவற்றை அடைந்த சில நாட்களிலேயே உணர ஆரம்பிப்போம். ஏனென்றால் மனதின் தாகத்தை நாம் நினைப்பது போல் “செட்டில்” செய்யவே முடிவதில்லை. நாம் எவ்வளவு நிரப்பினாலும் மேலும் மேலும் மனதின் தேவைகள் பிரம்மாண்டமாக வளறுகிறதே தவிர அடைந்ததை நினைத்து சந்தோஷமாக வாழ விடுவதில்லை. நாம் நினைக்கும் வெற்றிகளை அடைந்தபிறகும், சந்தோஷத்திற்கு மாறாக, முகத்தில் அறைந்தால் போல் ஒரு பெரும் ஏமாற்றமே வரவேற்கிறது. மனதின் இந்த நிஜத்தன்மையை ஆழமாக உள்வாங்கிக்கொண்டால் ஒரு உண்மை புரியும், “மகிழ்ச்சி” என்ற நிலை “எதிர்காலத்தில்” இல்லை என்பதுதான் அது. மகிழ்ச்சியின் காலம் நிகழ்காலம் மட்டுமே.

சந்தோஷத்தை அடைவதற்காகவே நாம் எந்த ஒரு வேலையையும் செய்கிறோம். ஆனால் எதை அடைந்தாலும் அந்த சந்தோஷம் மட்டும் கிடைப்பதாகத் தெரியவில்லை. பிரச்சனை எங்கே இருக்கிறது என்று பார்த்தால், சந்தோஷம் எங்கோ இருக்கிறது என்று இல்லாத ஒரு ஊருக்கு வழி சொல்லும் மதிடம்தான் இருக்கிறது. ஊருக்கு வழிகாட்டும் திசை காட்டிப் பலகை வைக்கப்பட்ட இடம் எதுவோ அதுதான் நாம் அடைய வேண்டிய ஊரென்று சொன்னால் புரிந்துகொள்வது சற்றுக்கடினமாகத்தான் இருக்கும். ஆனால் அதுதான் உண்மை. வாழ்க்கை என்ற இந்தப் பாலைவனத்தில் பெரும்தாகம் கொண்டு எப்போதும் அலையும் நம்மை, தவறாக வழி காட்டுவதே இந்த மனம்தான்.

பிரச்சனை என்று ஒன்று இருந்தால் நிச்சயம் தீர்வும் இருந்துதானே ஆக வேண்டும். நிச்சயமாக எங்கோ ஓர் இடத்தில் நமக்கு கிடைக்க வேண்டிய நீர் இருக்கத்தான் செய்கிறது. அந்த நீர் இருக்கும் கிணற்றின் மேல்தான் “மனம்” என்ற போலி உரிமையாளன் அமர்ந்துகொண்டு ஆட்சி செய்கிறான். ஒவ்வொரு முறை கிணற்றை அடையும்போதும் வேறு இடத்தை காட்டி “அங்கே செல், தாகம் தணியும்” என்கிறான். அவன் காட்டும் இடத்தில நீர் இருப்பது போல் தெரிகிறது. உடனே அதை நோக்கி ஓடுகிறோம். அங்கே சென்ற பிறகு தான் தெரிகிறது, அது கானல் நீரென்று. ஆனால் மீண்டும் மீண்டும் தளராமல் மனம் காட்டும் கானல் நீரைக்கொண்டே தாகம் தணிக்க முயல்கிறோம். நம்முடைய சொத்தான அந்தக் கிணற்றை அவன் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வரை நமக்கு தாகம் தணிய வாய்ப்பே இல்லை. எது அந்தக் கிணறு?

அது தான் உண்மையான “நாம்”. மனம் திரை போட்டு மறைத்து வைத்திருக்கும் “நாம்”. பொதுவாக நம் சொத்தை அபகரித்தவனோடு நாம் நட்பை வளர்த்துக்கொள்ள மாட்டோம். மாறாக முடிந்தால் அவனை கொல்லக்கூடத் தயங்க மாட்டோம். கண்ணுக்குத் தெரிவதால் வெளியுலக விஷயங்களை கையாளும் போது மிக எளிதாக பிரித்துப் பார்க்க முடிகிறது. ஆனால் உள்ளே நாம் என்ன செய்கிறோம்? நமக்கே உரித்தான, நம் தாகத்தை நிரந்தரமாகத் தீர்க்கும் ஒரு கிணற்றை மூடி வைத்துக்கொண்டு, அதன் மேல் அமர்ந்து அராஜகம் செய்பவனுக்கு அடிமையாக இருக்கிறோம். நம் சொத்தை பிடுங்கித் தனதாக்கிக்கொண்டு, தொடர்ந்து ஏமாற்றும் ஒருவனுக்கு சேவகனாக இருக்கிறோம். அவன் இட்ட கட்டளையை ஒரு கணம்கூட தாமதிக்காமல் நிறைவேற்றுகிறோம். சொந்த வீட்டிலேயே வேலைக்காரனாக இருக்கிறோம். இந்நிலை மாற நாம்  செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான், மீண்டும் நம் உரிமையை மனதிடமிருந்து மீட்பதே அது. உண்மையில் உலகில் நடக்கும் மற்ற எல்லாப் புரட்சிகளை விடவும் உயர்ந்த, தேவையான புரட்சி மனதிடமிருந்து நம்மை மீட்டெடுப்பதுதான். இந்த ஒரு புரட்சி நடந்தாலே மற்ற எல்லாப் புரட்சிகளுக்கும் தேவையில்லாமல் போய்விடும். ஒட்டு மொத்த மனித குலமே அவரவர் மனதிற்கு அடிமையாக இருந்து கொண்டு, வெளியே அடிமைத்தனத்தை எதிர்க்கிறேன் என்று ஒரு அடிமை இன்னொரு அடிமையோடு சண்டைபோடுவதைப் பார்த்து மனம் கைகொட்டிச் சிரிக்கிறது.

சரி,மனம்தான் இதற்கெல்லாம் மூல காரணம் என்று தெரிந்து கொண்டவுடன் எல்லாம் மாறப்போகிறதா என்ன?

நம்மை ஏமாற்றுகிறான் என்று தெரிந்தும் ஏன் நாம் தொடர்ந்து ஏமாறத் தயாராக இருக்கிறோம். ஏனென்றால் அவன் கையில் ஒரு மகுடி இருக்கிறது. நம்மை வீழ்த்தும் எதிரி யார் என்று தெரிந்து கொண்ட பின்பும், அவனிடம் நாம் தொடர்ந்து தோற்றுப் போவதற்குக் காரணம் அந்த மகுடிதான். அந்த மகுடியை அவன் வாசிக்க வாசிக்க நாம் மயங்கிப் போய் அவன் சொல்வதைச் செய்கிறோம். அவனுக்கு அடிமையாக இருக்கிறோம். அந்த மகுடிக்குப் பெயர் தான் “ஆசை”.

– தொடரும்

Previous article
Next article
ராகவ் மிர்தாத்
ராகவ் மிர்தாத்http://www.rakavmirdath.com
மனித உளவியலையே மாற்றக்கூடிய சக்தி படைத்த சினிமாவில் தானும் ஒரு தவிர்க்க முடியாத பங்காற்ற வேண்டுமென்ற தணியாத கலைத்தாகத்தால் உந்தப்பட்ட படைப்பாளி, இயக்குனர், எழுத்தாளர்.இவரது படைப்புகள் வெகுவிரைவில் வெள்ளித்திரையில் காணக்கிடைக்கும் என்பதில் மகிழ்ச்சி.தேசிய விருது பெற்ற “பாரம்" படத்தின் திரைக்கதை மற்றும் வசனகர்த்தா.இவருடைய “மிருணா” என்கிற குறும்படம் ரீகல்டாக்கீஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -