இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்
இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்
புதையலைச் சுற்றும் நாகம் போல் “நம்மை”ச் சுற்றி வருகிறது மனம். அது கக்கும் விஷம்தான் “EGO”. பொதுவாக EGO என்றால் திமிர் என்ற பொருள்படும்படிதான் பெரும்பாலானோர் அந்த வார்த்தையை பயன்படுத்தியிருப்போம். ஆனால் இங்கே நான் குறிப்பிடுவது “தான்” என்ற உணர்வு அல்லது ‘’சுயத்தன்மை”. இந்த EGO தான் ஒரு மனிதனை மற்ற மனிதனிடமிருந்து வித்யாசப்படுத்துகிறது. ஒவ்வொருவருக்கும் தனித் தனியான அனுபவத்தை தருகிறது. இந்த உலகில் எந்த இரண்டு பேரை எடுத்துக்கொண்டாலும், எவ்வளவு நட்பாக இருந்தாலும், அவர்கள் ஒரே போல் எல்லா விஷயத்தையும் உணர்வதில்லை. திருவிழாவில் விற்கும் கலர் கலர் கண்ணாடியை உதாரணமாக எடுத்துக்கொண்டால் எளிதாக புரியும். பச்சை நிற கண்ணாடி போட்டவனுக்கு ஊதா கண்ணாடிக்காரனின் அனுபவம் என்றுமே புரியாத புதிராகவே இருக்கும். உலகம் பச்சைதான் என்று வாக்குவாதம் செய்வான். இல்லை ஊதா தான் என்று அவன் சண்டைக்கு வருவான்.உலகம் ஒன்றுதான், அணிந்திருக்கும் கண்ணாடியால் வேறு வேறு வண்ணங்களில் தெரிகிறது என்கிற அடிப்படை புரிதல் இருந்தால் மட்டுமே சச்சரவுகள் தீரும்.
கணவன்-மனைவி பிரச்சனையில் ஆரம்பித்து, சாதி மத பிரச்சனைகள் மற்றும் உலக நாடுகளின் பிரச்சனைகள் வரை நீங்கள் எதை எடுத்துக்கொண்டாலும் மனம் என்கிற இந்த கலர் கண்ணாடி உருவாக்கியது தான் என்பது புரிகிறதா.? தான் பார்க்கும் நிறம் மட்டுமே உண்மையில்லை, மற்றவர்களுக்கு வேறு வேறு நிறம் தெரியலாம் அதில் தவறில்லை என்ற நிலைப்பாடு, ஏன் நமக்கு வருவதில்லை?
பிறந்ததிலிருந்தே அந்தக் கலர் கண்ணாடியோடு பழகிவிட்டதால்தான், அதைத் தாண்டி நம்மால் உணர முடியாமல் போகிறது. தினமும் சிறிது நேரமாவது அதைக் கழற்றி வைத்து எந்த ஒரு சார்பு வண்ணங்களுமற்ற உலகைக் காணப் பழகினால், அனைத்து பிரச்சனைகளையும் தனித் தனியாக நாம் தீர்க்க வேண்டிய அவசியமே இல்லாமல் போகும். அவ்வாறு செய்வதற்குப் பெயர்தான் தியானம்.
ஆனால் அந்தக் கலர் கண்ணாடியைத் தவிர வேறு எந்த பார்வையையுமே அறியாத மனிதனை தியானத்தில் அமர வைப்பது எளிதாக இல்லை. ஏனென்றால் அந்தக் கலர் கண்ணாடி தன்னிச்சையாக செயல்படும் ரோபோவைப் போல் இருந்து கொண்டு “நம்மை” கடுமையாக எதிர்க்கிறது. மனிதன் தயாரிக்கும் எந்திரம் சுயமாக செயல்பட்டு கடைசியில் மனிதனையே அடிமைப்படுத்துவது போல் ஹாலிவுட் திரைப்படங்களில் பார்த்திருப்போம், ஆனால் அது நமக்கே தினம் தினம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. கண்களை மூடினால் அது தூங்குவதற்காக மட்டுமேதான், என்று மனம் நம்மை பழக்கப்படுத்தி வைத்திருக்கிறது. தூங்காமல் அதே சமயம் கண்களை மூடியபடி இருந்தால் உடனே நமக்குத் தேவையில்லாத உணர்வுகளைத் தூண்டும் வகையில் எக்கச்சக்க குப்பைகளை மனம் கைவசம் வைத்திருப்பதால் அதன் தாக்குதலில் இருந்து தப்புவது எளிதான காரியமல்ல.
மேலோட்டமாக பார்த்தால் மனம் அமைதியாக இருப்பதுபோல் சில சமயம் தோன்றும் ஆனால் அது உண்மையில்லை. முதலாம் உலகப் போரின் போது, நாடுகளுக்கிடையே யாருமற்ற நிலம்தான் மிக பயங்கரமான இடங்களாக குறிப்பிடப்பட்டன. மனித வாசனைகளே இல்லாத அந்த இடத்தில்தான் போட்டி போட்டுக்கொண்டு கன்னி வெடிகளைப் புதைத்து வைத்திருந்தார்கள். தூக்கம் வராத இரவுகளில் கண்களை மூடிய படி இருக்கும் ஒவ்வொரு நொடியும் இந்த இடங்களில் பயனிப்பது போன்றதுதான். கடந்தகால வாழ்வில் நடந்த கசப்புகள், அல்லது எதிர்காலத்தைக் குறித்த கற்பனையான பயங்கள் என்று ஏகப்பட்ட கன்னி வெடிகளை புதைத்து வைத்திருக்கிறது மனம். தியானம் செய்ய வேண்டுமென்று நம்மை நாமே கட்டாயப்படுத்திக்கொண்டு அமர்ந்தாலும்கூட இந்த கன்னி வெடிகளில் கால் பதிக்காமல் இருக்கவே முடியாது. அடுத்தடுத்து வெடிக்கும் உணர்வுகளின் வேகத்தால நிறைய கோபத்தோடும், வருத்தத்தோடும், பயத்தோடும்தான் நாம் கண்களைத் திறப்போமே தவிர ஆரம்பத்தில் அது ஒரு இனிமையான அனுபவமாக இருக்கப்போவதில்லை.
இதனால்தான் ஆரம்பத்தில் மனதை அடக்கும் ஆர்வத்தோடு தியானம் பழக வருபவர்கள்கூட வெகு சீக்கிரம் தாக்குப்பிடிக்க முடியாமல் விலகிவிடுகிறார்கள். இத்தகைய தந்திரமான self defense mechanism-மை மனம் வைத்திருப்பதால் யாராலும் அவ்வளவு எளிதாக ஒரு சார்பு வண்ணங்களற்ற உலகத்தைக் காண முடியாமல் போகிறது. அதனால் சண்டை சச்சரவுகள் உருவாகிறது. மனிதனை இப்படி நிம்மதியற்று அலைய வைப்பதன் மூலம் தன்னை எப்போதும் தற்காத்து உயிர்ப்புடனே வைத்துக்கொள்கிறது மனம். மிகக் கடுமையாக மீண்டும் மீண்டும் முயற்சித்தாலொழிய தியானம் கைகூடாது என்பதால், அதற்கு பக்குவமான சிலர் மட்டுமே செல்லக்கூடிய வழியாக தியானம் ஆகிப்போனது. அப்போது பெரும்பாலான மக்களின் கதி ?
– தொடரும்
Altogether a different & good perspective of life… Keep writing.. I love it..
Thank you 🙂
Very nice ?
Thank you 🙂