அம்மா பால்….

சிறுகதை

- Advertisement -

“அம்மா பால்….”

சைக்கிள் பெல்லை நாலைந்து முறை அடித்தேன். “கினிங்…. கினிங்…. கினிங்….”

“கினிங்….கினிங்….”

“அம்மா பால்….” கேட்டைத் தாண்டி உள்ளே எட்டிப்பார்த்தேன். நிலைக்கதவு சாத்தியே இருந்தது. இப்போதுதான் கேட்டைக் கவனித்தேன். அதில் பெரிய பூட்டு தொங்கிக்கொண்டிருந்தது.

“டேய்…. தம்பி… குமாரு… இங்க வா…” சைக்கிளைத் தள்ளிக்கொண்டு அடுத்த வீடான சரோஜா டீச்சர் வீட்டிற்கு சென்றேன். அவர்தான் என்னை அழைத்தது.

“அவங்க எல்லாம் நேத்து திடீர்ன்னு கிளம்பி ஊருக்குப் போய்ட்டாங்கடா. என்னன்னு தெரியல. எனக்கு ஊத்து”

சரோஜா டீச்சர் எப்போதும் ஐநூறு மில்லி லிட்டர் பால் வாங்குவார். காலையில் ஐநூறு இரவில் ஐநூறு. முகத்தில் அணிந்திருந்த துணி முகக்கவசம் அவர் குரலை கொஞ்சம் மாற்றியிருந்தது. நான் துண்டால் முகமூடிக் கொள்ளைக்காரன் மாதிரி மூக்கோடு சேர்த்து வாயையும் மறைத்துக் கட்டியிருந்தேன். பால்கேனின் குழாயைத் திறந்து அவருக்கான பாலை அளந்து ஊற்றினேன். இந்தப் பகுதியில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் ஆசிரியர்கள்தான். என் சமூகஅறிவியல் ஆசிரியர் ஜான்சன் கூட இங்குதான் வசிக்கிறார். அதனாலேயே இந்தப் பகுதி டீச்சர்ஸ் காலனியாகிப் போனது. முன்பொரு காலத்தில் பெரிய கண்மாயாம். என் அப்பா சொல்லித்தான் தெரியும். சொல்ல மறந்துவிட்டேன் நான் மதுரை புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்புப் படிக்கிறேன்.

“என்னடா பாலு தண்ணியா இருக்கு?”

“யக்கா…” கோவப்படுவதுபோல் முகத்தில் பாசாங்கு காட்டிவிட்டு. “கறந்த உடனே அப்படியே கொண்டாறேன்க்கா. இதென்ன எருமைப் பாலா? தொருதொருன்னு இருக்கதுக்கு”

“இத்தனை நாளா உன்கிட்டத்தான் வாங்குறேன். என்னைக்காவது சொல்லிருக்கேனா? சும்மா கோவிக்காத போ” என்றார் ஒரு போலிக்கோபத்தோடு.

உண்மைதான். இத்தனை நாளில் என்றுமே நான் பாலில் தண்ணீர் கலந்தது இல்லை. இன்று மட்டும்தான் கொஞ்சம் கலந்தேன். அதுவும் ராமு வாத்தியார் வீட்டில் ஆள் இல்லை என்று தெரிந்திருந்தால் கலந்திருக்க மாட்டேன். திடீரென இலட்சுமி உடம்புக்கு முடியாமல் விழுந்துவிட்டாள். நேற்றுவரை நான்கு லிட்டர் கொடுத்துக்கொண்டிருந்த செவலை இன்று மூன்றாகக் குறைத்துவிட்டாள். இது அவளுக்கு ஆறாவது மாதம். இன்னும் ஒரு மாதம் போனால் வயிற்றுக்குள் இருக்கும் அவள் பிள்ளைக்காக காம்புகளை மொத்தமாக வற்ற வைத்துவிடுவாள். கறுப்பியும் கோவக்காரியும் தரும் பாலை வைத்துதான் சமாளிக்க வேண்டும். இந்தப் பாக்கெட் பால் உலகில் வாடிக்கையாளர்களை விட்டுவிட்டால் பிடிப்பது கடினம். இலட்சுமி மட்டும் சரியாகி எழுந்துவிட்டால் என்றால் எந்தப் பிரச்சனையும் இல்லை.

வாடிக்கையாளர்களைத் தவிர்த்து வழியில் உதிரியாக கேட்ட இருவருக்கும் சேர்த்து ஒன்பது லிட்டர் பாலோடு ஒரு லிட்டர் தண்ணீரையும் விற்றுவிட்டு வீட்டிற்கு வந்தேன். கொட்டத்தில் அவள் எப்போதும் கட்டியிருக்கும் காடியிலிருந்து தள்ளி வேறு ஒரு கட்டையில் கட்டப்பட்டிருந்தாள் இலட்சுமி. மற்ற மாடுகளிடமிருந்து தனியாக படுத்துக்கொண்டிருந்த அவளின் வாய் அசைபோட்டுக் கொண்டிருந்தது. அவள் காவிநிற மேனி ஆங்காங்கே சிலிர்த்து அடங்கியது. சாணியிலும் கோமியத்திலும் நனைந்திருந்த வாலை சுழற்றி அவள்மேல் இருந்த பூச்சிகளுக்குப் பன்னீர் தெளிப்பதுபோல் அவளைச் சுற்றி இருந்த இடம் முழுவதும் தெளித்துக்கொண்டிருந்தாள். கண்ணீர் வடிந்ததற்கான அடையாளம் கண்களுக்குக் கீழ் இருந்தது.

சைக்கிளில் இருந்து பால்கேனை இறக்கிக்கொண்டு வீட்டிற்குள் சென்றேன். என் அம்மா நேற்று இரவு மிஞ்சிய பாலை இப்போது மோராக மாற்ற ‘சரக்… சரக்..’ என்று கடைந்து கொண்டிருந்தாள். இன்னும் சிறிது நேரத்தில் அதைப் பானையில் ஊற்றி விற்றுவர அவள் கிளம்பிவிடுவாள்.

“என்னம்மா… லட்சுமி எந்திரிக்கவே இல்லையா?”

“ஆமாடா ரெண்டுநாளா அப்படியே கெடக்கு. படுத்துக்கிட்டே கழியுது. பாவம் என்ன செய்தோ தெரியல? நீ வரட்டும்ன்னுதான் உட்காந்து இருந்தேன். வெண்ணை எடுத்து வச்சுட்டு வர்றேன். மருந்தக் குடுத்திருவோம்.”

சின்ன சீரகம், கசகசா, வெந்தயம், மிளகு, மஞ்சள், பெருங்காயம் வெங்காயம், பூண்டு எல்லாத்தையும் வறுத்து இடித்து வெல்லத்தில் சேர்த்து உருண்டை பிடித்து வைத்திருந்தாள் என் அம்மா. இலட்சுமியின் தலைக்குப்பின் சென்று கொம்புகளுக்கு நடுவில் கையை விட்டு மூக்கணாங்கயிற்றை ஏத்திப் பிடித்தேன். என் அம்மா இலட்சுமியின் வாய்க்குள் இடது கையை விட்டு நாக்கை வெளியே இழுத்தாள். பின் ஒவ்வொரு உருண்டையாக வலது கையில் எடுத்து அவள் வாய்க்குள் திணித்தாள். உருண்டைகள் தீர்ந்த உடன் என் அம்மா விலகினாள். நான் மூக்கணாங்கயிறை விட்டவுடன் தலையை ஒரு சிலுப்பு சிலுப்பி நாக்கை மூக்குக்குள் விட்டு இரண்டு மூன்று முறை துழாவிய இலட்சுமி. பின் பழையபடி அசைபோடத் தொடங்கினாள்.

என் அப்பா ஒரு கொத்தனார். விடிகாலையிலேயே மட்டைக்கம்பையும் கரண்டியையும் தூக்கிக்கொண்டு கிளம்பிவிடுவார். மாட்டுப் பொறுப்பு எங்களுடையதுதான். ஞாயிற்றுக்கிழமைகளில் உதவி செய்வார். கொரோனா நோய்த்தொற்று காரணமாக வந்த முதல் ஊரடங்கின்போது வீட்டில்தான் இருந்தார். அடுத்தடுத்து அறிவிப்பாக மட்டுமே வந்த ஊரடங்கு அவரை அடக்கிவைக்கவில்லை. ஊரின் ஏதோவொரு மூலையில் இன்னும் முடிக்கப்படாமல் இருக்கும் கட்டிடம் அவரை அழைத்துக்கொண்டே தானிருந்தது. ஊருக்குள்ளே என்பதால் அவரும் சத்தமில்லாமல் போய்வந்து விடுவார்.

பால் கறக்கும் இராமையா அண்ணன் வந்தார். ஐம்பது வயதைக் கடந்திருந்தாலும் அவரின் வலுவான கைகள் வேறு யார் கறப்பதை விடவும் குறைந்தது ஒரு லிட்டர் பால் அதிகமாகவே கறக்கும். அவர் சட்டை அணிந்து நான் பார்த்ததேயில்லை. இடுப்பில் ஒரு காக்கி டிரவ்சரும் அதற்கு மேல் பச்சையோ சிவப்போ ஒரு குற்றாலத் துண்டும்தான் அவரின் அன்றாட உடை. அதிகாலை வந்து அத்தனை மாடுகளிலும் பாலைக் கறந்து வைத்துவிட்டு அடுத்த தொழுவத்திற்கு சென்றுவிடுவார். நெஞ்சில் இடது பக்கத்தில் எம்.ஜி.ஆர் என்று ஆங்கிலத்தில் பச்சை குத்தியிருப்பார்.

“என்னடா இன்னும் உங்க லட்சுமி எந்திரிக்கலையா?” என்று என்னைப் பார்த்து கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தார்.

“ஆமாண்ணே.. அப்படியேதான் இருக்கு. பாவம் படுத்தமேனிக்கு கழிஞ்சுக்கிட்டே இருக்கு”

இலட்சுமியைப் பார்க்கவே எனக்கு பாவமாக இருந்தது. எங்கள் வீட்டு மகாலட்சுமி. அவள் வந்தபின்தான் எனக்கு சைக்கிளே கிடைத்தது. அப்பாவின் அற்ப வருமானம் வயிற்றைக் கழுவவே சரியாக இருந்த காலத்தில் அதிக நாள்கள் நாங்கள் கழனிப் புளிச்சாறும் துவையலும் வைத்துதான் சாப்பிட்டிருக்கிறோம். வாராவாரம் கறி எடுப்பது எல்லாம் இலட்சுமி வந்தபின்தான். செவலை, கறுப்பி, கோவக்காரி எல்லாம் இலட்சுமி கொடுத்த பாலில் சம்பாதித்தவை. இரண்டு நாள்களாக அவள் எழுந்திருக்கவேயில்லை. வாலைப் பிடித்து திருகிப் பார்த்தேன், வயிற்றைப் பிடித்து தூக்கிப் பார்த்தேன், மூக்கணாங்கயிறைப் பிடித்து இழுத்துப் பார்த்தேன். ம்ம்ஹீம் அவள் படுத்த இடத்தைவிட்டு அசையவேயில்லை. வைக்கோல் புல் எடுத்து முன்னால் போட்டால் கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடுவாள். பொதுவாக புண்ணாக்கு தண்ணீர் வைக்கும் நேரம் வந்த உடனே தடக் புடக் என கால்களை ஆட்டிக்கொண்டு வாலை வீசி “ம்மா…” “ம்மா…” என்று கத்தத் தொடங்கிவிடுவாள். தண்ணீர் வைத்தவுடன் ‘சர்ர்ர்..’ என்று உறிஞ்சிவிடுவாள். இப்போது மெதுவாக நக்கிப் பார்க்கிறாள். கொஞ்சம் நக்கிவிட்டு தலையைத் தூக்கிக் கொண்டாள். வாய் மட்டும் அசை போட்டுக்கொண்டே இருந்தது.

“நம்ம ஐலாநூரு டாக்டர் எல்லாம் இப்போ வேலைக்கு வந்திருக்க மாட்டாரு. அனுப்பானடில ஒரு டாக்டர் இருக்காரு. அவரைக் கூட்டியாந்தா சரி பண்ணிரலாம்”

எங்கள் ஊரில் இருந்து அனுப்பானடி செல்லவேண்டுமானால் தெப்பக்குளத்திற்கு முன் இருக்கும் காவல்துறை செக்போஸ்ட்டைக் கடக்க வேண்டும். கொரோனாவின் ஆதிக்கம் அதிகமாகிக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் கொஞ்சம் கஷ்டம்தான். இலட்சுமியையே பார்த்துக்கொண்டிருந்தேன். அது அதற்கு வைக்கப்பட்டிருந்த வைக்கோலில் தலையை சாய்த்துக் கொண்டு படுத்திருந்தது. இவள் எப்போதும் போல் எழுந்துவிட வேண்டும் நான் அவள் நெற்றியில் முட்டிவிளையாட வேண்டும். மழைக்காலங்களில் நிறையும் கண்ணாடிக் காளவாசல் கண்மாயில் அவளை நீந்தவிட்டு ஏறி சவாரி செய்ய வேண்டும். அவளின் கன்று ‘குட்டி இலட்சுமி’ அவளைப் போலவே காவிநிறம் கொண்டிருந்தது. இப்போது அது அம்மாவிடம் பால் குடிப்பதை மறக்கும் வயதை எட்டி, புல் தின்று கொண்டிருந்தது.

“போலீஸ்காரய்ங்க இருப்பாய்ங்க டாக்டர் எப்படி வருவாரு? போன் நம்பர் வச்சுருக்கீங்களா?” என் அம்மா கேட்டாள்.

“போன் நம்பர்லாம் இல்லை. அனுப்பானடி உள்ள நுழைஞ்சு அம்பேத்கர் செலை இருக்குள்ள.. ரைட்சைடு இருக்க தெருவுல போய் டாக்டர் வேலாயுதம்ன்னு கேட்டா யார்னாலும் சொல்லுவாங்க”

இலட்சுமியை எப்படியும் காப்பாற்றி விடவேண்டும் என்ற எண்ணம் என்னைத் தூண்டியது.

“பாத்துப் போயிட்டு வாடா. போலீஸ் இருந்தா வந்துரு” அம்மாவின் எச்சரிக்கையை வீட்டிலேயே விட்டுவிட்டு எப்படியும் மருத்துவருடன்தான் வரவேண்டும் என்று சைக்கிளை மிதித்துக் கிளப்பினேன்.

ஐராவதநல்லூர் தாண்டி தெப்பக்குளம் செக்போஸ்ட் இருந்தது. அங்கே காவலர்கள் கையில் கண்ணாடிப்பைபோல ஒன்றைக் கறுப்பு கைப்பிடியுடன் வைத்திருந்தார்கள். அந்தச் செக்போஸ்ட்டைத் தாண்டி தெப்பக்குளத்தின் பின்புறம் சென்று அனுப்பானடிக்குள் நுழைய வேண்டும். சைக்கிளில் இருந்து மெதுவாக இறங்கி உருட்டிக்கொண்டே காவலர் அருகில் சென்றேன். அவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்தார்கள். நானும் என் துண்டை எடுத்து முகத்தில் சுற்றிக்கொண்டேன். கண்ணாடிக் குச்சியை நீட்டிக்கொண்டு என்னைப் போ போ என்பது போல் சுற்றிக்கொண்டே ஒரு காவலர் என்னை நோக்கி வந்தார். நான் சைக்கிளை ஸ்டாண்டு போட்டு நிறுத்திவிட்டு. “சார்… சார்… ப்ளீஸ் சார்… மாட்டுக்கு முடியல சார்… டாக்டரை கூப்ட போறேன் சார்” என்று கை எடுத்துக் கும்பிட்டுக் கேட்டேன்.

“போடா… போயிரு… மாட்டுக்கு முடியல காட்டுக்கு முடியலன்னு நீ அடிவாங்கிறாத.”

“சார்… சார்… ப்ளீஸ் சார்… பாவம் சார் இலட்சுமி. தெப்பக்குளம் பின்னாடிதான் சார் டாக்டர் இருக்காரு. போய் அவரை கூப்ட்ட உடனே வந்துருவேன் சார்.”

“டேய் சொன்னா புரியாது. மாஸ்க் கூட இல்லை. துண்டை சுத்திக்கிட்டு வந்திருக்க. அதுக்கே உன்னை ரெண்டு வெளு வெளுக்கணும். அனுப்பானடில எத்தனை கேஸ் தெரியுமா? அங்குட்டு பூராம் நிறைய தெருவ அடைச்சு வச்சிருக்காங்க. போ. ஓடிரு”

அவரின் கண்ணாடிக் குச்சி என்னை போ போவென்று விரட்டியது. நான் சைக்கிளை எடுத்துக்கொண்டு திரும்பினேன் சிறிது தூரம் வந்தபின் ஒரு மறைவில் நின்றுகொண்டு அந்தக் காவல்துறை அதிகாரிகளைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். இதுதான் சந்தர்ப்பம் அங்கே நிழலில் ஒதுங்கி அவர்களில் இருவர் ஏதோ பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஒருத்தர் பின்னால் இருந்த புதருக்குள் சென்று ஒன்றுக்கு அடித்துக்கொண்டிருந்தார். சைக்கிளை வெறிகொண்டு மிதித்தேன் அது இதுநாள்வரை அடையாத வேகத்தை அடைந்தது. அதே காவல்காரர் கண்ணாடிக் குச்சியுடன் “டேய்… டேய்… ” என்று வேகமாக முன்னேறி வந்தார். நான் இரண்டு தடுப்பு அரணுக்கும் இடையில் புகுந்து அந்தப் பக்கம் செல்வதற்கும் அந்தக் கண்ணாடிக் குச்சி என் முதுகில் தடம் பதிப்பதற்கும் சரியாக இருந்தது. வலி உயிர் போனது. நின்றால் உண்மையில் உயிர் போய்விடுமோ என்ற அச்சம் என்னை வெறியேற்றியது. யாராவது என் சைக்கிளின் வேகத்தை இப்போது குறிப்பார்களானால் நிச்சயம் இது உலக சாதனையாக அறிவிக்கப்படலாம். முதுகில் வலி எரிச்சலாக மாறியது. நான் சைக்கிளை நிறுத்தவேயில்லை. அனுப்பானடி எல்லையிலும் காக்கித் தொப்பிகளும் கண்ணாடிக் கம்புகளும் தெரிந்தன. ஆனால் இங்கிருந்து தப்பிச்செல்ல வேறு சில பாதைகளும் இருந்தன. கொஞ்சம் முள்களோடு உரசிச் செல்ல வேண்டியிருந்தது.

அம்பேத்கர் சிலையின் வலதுபுறம் தெரு வெறிச்சோடிக் கிடந்தது. இடதுபக்கம் உள்ள தெரு பெரிய தகரங்களால் மூடப்பட்டிருந்தது. நான் ஒவ்வொரு வீடாக சென்று விசாரித்து டாக்டர் வீட்டைக் கண்டறிந்தேன். வழுக்கைத் தலையோடு பெரிய தொப்பையைத் தள்ளிக்கொண்டு கறுப்பாக, ஊதா கட்டம் போட்ட கைலியும் தங்க ப்ரேம் கண்ணாடியுமாக டாக்டர் வேலாயுதம் வெளியே வந்தார்.

“சார். விரகனூர்ல இருந்து வரேன் சார். எங்க மாடு நாலஞ்சுநாளா ஒரே கழிசல் சார். இப்போ எந்திரிக்கவே முடியல சார். ராமையா அண்ணேதான் உங்களக் கூட்டிட்டு வந்தா காப்பாத்திறலாம்ன்னு சொன்னாரு சார்.”

“விரகனூர்ல இருந்தா வர்ற. எப்டிடா வந்த? போலிஸ் ஒன்னும் இல்லையா?”

“இருக்காங்க சார். முதுகுல வேற அடிச்சுட்டாங்க சார். நான் தப்பிச்சு ஓடியாந்துட்டேன்.”

“இப்போ உன்கூட வந்து என்னையும் அடி வாங்கச் சொல்றியா?”

“சார் சார்… ப்ளீஸ் சார்… பாவம் சார் லட்சுமி” எனக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. உடல் முழுவதிலும் அருவிகளாய்ப் பாய்ந்த வியர்வையால் சட்டை தொப்பலாகி முள்களும் கண்ணாடிக் குச்சியும் தந்த காயத்தில் தீவைத்து எரித்தது.

“தம்பி நான் வேணும்ன்னா மருந்து எழுதித் தர்றேன். அதைப் போய்க் குடு. இருக்குற நிலைமைல. என்னால வேற ஒன்னும் செய்ய முடியாது.”

“சார் ஒரு தடவை நீங்க வந்து பாத்துடீங்கன்னா போதும் சார். ராமையா அண்ணே கூட நீங்க வந்து பாத்தாலே சரியாகிடும். கைராசிக்கார ஆளுன்னு சொன்னாரு சார். ப்ளீஸ் சார்.” நான் அவரின் காலில் விழாதகுறையாக கெஞ்சினேன்.

“தம்பி அப்படிலாம் இப்போ வர முடியாதுப்பா. சொன்னாக் கேளு. போ”

இப்போது என் கண்களும் வியர்த்தன. மூச்சுக்காற்று நெஞ்சை முட்டிமுட்டி என்னைக் குலுக்கியது. நான் அழுதுகொண்டிருந்தேன். “சார்… சார்… ப்ளீஸ் சார்… ப்ளீஸ் சார்…” அவர் வீட்டு வாசலில் விழுந்து அழுதேன்.

“ஏய்… ஏய்… என்னாப்பா நீ. சொன்னா புரிஞ்சுக்கவே மாட்றியே. எந்திரிப்பா.. எந்திரி”

நான் கண்ணைக் கசக்கிக்கொண்டே அவர்முன் நின்றேன். என்னை ஒரு பைத்தியக்காரனைப் பார்ப்பதுபோல் பார்த்தார்.

“நின்னா பரவும், உட்காந்தா பரவும், காத்துல பரவும், கண்ணுல பரவும்ன்னு கதையா சொல்லிக்கிட்டு இருக்காய்ங்க. நான் இப்படி உன்கூட நின்னு பேசவே கூடாது தெரியுமா?”

“சார்… ப்ளீஸ் சார்….”

“சரி சரி… இரு…” என்னை அமைதிப்படுத்திவிட்டு. சத்தமாக “மேனகா இந்தப் பயலுக்கு கொஞ்சம் தண்ணி கொண்டாந்து குடுமா.” என்றார். பின் “நான் போய் டிரஸ் மாத்திட்டு வர்றேன் வெயிட் பண்ணு.”

நான் “ம்ம்ம்ம்… டாங் யூ சார்” என்றுவிட்டு கண்ணைக் கசக்கினேன். அவர் மகள் சொம்பில் தண்ணீரை எடுத்துவந்து என் முன் வைத்துவிட்டு தூரமாக விலகிக்கொண்டாள். முகத்தில் பாதியை முகக்கவசம் விழுங்கியிருந்தது. நான் தண்ணீரை எடுத்து முழுவதும் குடித்தேன். வறண்டுபோய்க் கிடந்த என் தொண்டை குளிர்ச்சியாகி வயிறு நிறைந்தது.

“கைல க்ளவ்ஸ் மாட்டிக்கிட்டு சொம்ப வாங்குடீ” உள்ளிருந்து ஒரு பெண்குரல் கேட்டது. அவள் அம்மாவாக இருக்கலாம். இவள் தண்ணீர்ச்சொம்பை கொண்டு வரும்போதே கையில் உறை மாட்டிதான் வந்திருந்தாள்.

முகக்கவசம், கண்ணாடி, வெள்ளைச் சட்டை கறுப்பு பேன்ட் கையில் ஒரு கறுப்புப்பெட்டி என வந்து நின்றார் டாக்டர் வேலாயுதம்.

“நான் முன்னால பைக்ல போறேன். நீ வேகமா வந்துருவையா?”

“வந்துருவேன் சார்…” அவர் வருகிறார் என்பதே இலட்சுமியும் குட்டி இலட்சுமியும் என்னோடு துள்ளித்துள்ளி விளையாடுவது போலிருந்தது. அவர் வண்டியை மெதுவாகவே ஓட்டிச் சென்றார். ஆனால் அவர் அனுப்பானடி எல்லையில் போலிஸ் இருந்த முதல் செக்போஸ்ட்டுக்கு நேரடியாகச் சென்றார். இப்படிப் போனால் மாட்டிக்கொள்வோம் கருவேல முள்மரங்களின் ஊடாகச் செல்ல வேண்டும் என்று அவரிடம் எப்படிச் சொல்வது. நான் அழுத்தி மிதித்து என் வேகத்தைக் கூட்டினேன். டாக்டர் அடிவாங்கும் முன் அவரைக் காப்பாற்றி விட வேண்டும் என்ற என் எண்ணத்தைப் பொய்யாக்கி. அவர் நேரே அந்தக் காவலர்களிடம் சென்று ஏதோ பேசிக்கொண்டிருந்தார். எனக்கு அங்கு போவதா இல்லை முள் மரங்களுக்குள் புகுந்துகொள்வதா என்ற தயக்கம் இருந்தது. டாக்டர் என் பக்கம் திரும்பி வேகமாக வா என்று கையசைத்தார். முதுகு எரிந்தது. அவர்கள் அருகில் சென்றேன்.

“ஓகே சார்… தேங்க்ஸ் சார்…” என்று கூறி ஒரு குட்மார்னிங் சல்யூட் அடித்துவிட்டு டாக்டர் காவல்துறையைக் கடந்து முன்னேறினார். நான் அவரை நடுங்கும் கால்களோடு தொடர்ந்தேன். இவர்கள் நல்லவர்கள்போல. நான்தான் தெரியாமல் முள்களிடம் கீறல் வாங்கிவிட்டேன். அடுத்து இருப்பவர்கள்தான் ஆபத்தானவர்கள் அதை எப்படியும் டாக்டரிடம் எச்சரிக்க வேண்டும். நான் சைக்கிளை எவ்வளவு மிதித்தாலும் அவர் என்னிலிருந்து இருபதடி தூரத்திலேயே சென்றுகொண்டிருக்கிறார். அடிக்கடி அவர் நான் வருகிறேனா என்று சைடு மிர்ரரில் பார்த்துக்கொள்கிறார். ஆபத்தை நெருங்கிவிட்டோம். அங்கே பேசியதைப்போல் இங்கும் பேசினார். நான் நெருங்கிச் சென்றேன். அந்தக் கண்ணாடிக் குச்சியும் அதே கறுத்த ஏட்டும் அங்கே இருந்தனர்.

“பய உண்மையத்தான் சொல்லிருக்கான். போகைல நான் வேற அடிச்சுப்புட்டேன். சும்மாதான் வீசுனேன் நல்ல அடி.” என்று என்னைப் பற்றி டாக்டரிடம் அந்த ஏட்டு சொல்லிக்கொண்டிருந்தார்.

“ஏலே… அப்படியாடா தப்புச்சு ஓடுவ. இதுவே மொதலும் கடைசியுமா வச்சுக்க. அடுத்த தடவ இந்த மாதிரி ஓடுன. விரட்டி வந்து அடிப்பேன்.” அவர் விட்ட எச்சரிக்கைக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் தலைகவிழ்ந்து நின்றேன்.

டாக்டரின் வண்டி செக்போஸ்ட்டைத் தாண்டியது. நானும் தாண்டினேன் என் மனம் குளிர்ந்தாலும் முதுகில் எரிச்சல் குறையவேயில்லை. அம்மாவிடம் சொல்லி உப்பு ஒத்தடம் வைக்கணும்.

வண்டியை விட்டு இறங்கியவுடன் நான் வேகமாகச் சென்று டாக்டரின் பெட்டியை கையில் வாங்கிக்கொண்டேன். “வாங்க சார் இந்தப் பக்கம்தான்” எங்கள் மாட்டுத்தொழுவத்திற்கு வெளியில் ஒரு ட்ரைசைக்கிள் நின்றுகொண்டிருந்தது. இராமையா அண்ணன் யாரோ நால்வருடன் சேர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.

நான் டாக்டரின் பெட்டியை கையில் வைத்தபடி அங்கு நடப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். இரண்டு சவுக்குக் கட்டைகளை, உடலை தரையில் சாய்த்துப் படுத்துக்கிடந்த இலட்சுமிக்கு அடியில் கொடுத்து நால்வரும் மெதுவாக தூக்கிக்கொண்டே நகர்ந்தார்கள். பின் இளைப்பாறிவிட்டு “ஏய் சொல்லும்போது தூக்குங்கயா.. ம்ம்.. தூக்குவோமா.. தூக்குவோமா… தூக்கு தூக்கு…” வெளிக்காற்றை உள்ளே இழுத்து நிரப்பிக்கொண்டு ஒரு மூச்சில் இலட்சுமியை ட்ரை சைக்கிள் அருகில் கொண்டு வந்தனர். பின் அதில் ஏற்றினர்.

என் கண்கள் வெடித்து தலை சிதறிவிடும் போல இருந்தது. தாரை தாரையாக கண்ணீர் கொட்டியது. ட்ரைசைக்கிள் மெதுவாக நகர்ந்தது. அந்த நால்வரும் அதில் ஏறிக்கொண்டனர்.

இராமையா அண்ணன். “நல்ல மாடு சார். போச்சு சார்.” என்றார் டாக்டரிடம்.

டாக்டர் என் தலையில் கையை வைத்து முடியை கோதினார். பின் முதுகில் தட்டிக்கொடுத்தார். அவர் தட்டிய இடத்தில் எரிந்தது. முதுகை வளைத்தேன். “சாரிடா…” என்றவாறு என் கையில் இருந்த அவர் பெட்டியை வாங்கிக்கொண்டு அவர் கிளம்பினார்.

அம்மா முதுகுக்கு உப்பு ஒத்தடம் கொடுத்தாள். ஆனாலும் வியர்க்கும் போதெல்லாம் அது எரிந்துகொண்டு தானிருந்தது.

மாலையில் இராமையா அண்ணன் வந்து பால் கறந்து கொடுத்தார். பத்து லிட்டர் கேனில் ஒரு லிட்டர் கம்மியாக இருந்தது. நான் ஒரு லிட்டர் உழக்கில் ஒரு உழக்கு தண்ணீரை எடுத்து அதில் ஊற்றிவிட்டு சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பினேன். மாலையில் அவ்வளவு பால் தேவையில்லைதான், இருந்தாலும் இலட்சுமி இருக்கும்வரை நான் கேன் நிறையத்தான் பால் கொண்டு போவேன்.

“அம்மா பால்….”

ஜெயக்குமார்
ஜெயக்குமார்https://minkirukkal.com/author/jeyakumar/
கதைகள், கவிதைகள், கட்டுரைகள் வாசிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். சிறுகதைகள், கதை மற்றும் நூல் விமர்சனங்கள், கட்டுரைகளை மின்கிறுக்கல் தளத்திற்காக எழுதி வருகிறார்.

2 COMMENTS

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -