அம்மா பசிக்குதும்மா – சிறுகதை

கார்கால சிறுகதைப் போட்டி - ஆறுதல் பரிசு

- Advertisement -

அம்மா பசிக்குதும்மா


இரவிலிருந்தே மழை நசநசவென்று தூறிக்கொண்டேயிருந்தது. காலையில் மழை ஓய்ந்திருக்கும்னு கதவை திறந்து கோலம் போட வாசலில் இறங்கினால், இன்னும் சாரல் அடித்துக் கொண்டே தான் இருந்தது.        இப்படி விடாமல் தூறிக் கொண்டிருக்கும் மழையில் கோலம் போட்டாலும் வீண் தான். சிறிது நேரத்துலயே அழிந்து விடும், இன்னைக்கு ஒருநாள் போடாம இருப்போம்னு திரும்பி வீட்டுக்குள் நுழையும் போது, கிணற்றுக்குள்ளிருந்து வருவது போல மெல்லிய முனகல் சத்தம்.

சத்தம் எங்கிருந்து வருதுனு யோசிக்கும் போதே, ராமு,நிம்மி ரெண்டு பேரும் எதிரிலிருந்த சாக்கடையை எட்டிப்பார்க்கவும், அதன் ஓரமாகவே எதிரெதிர் திசையில் ஓடவுமாக இருந்தானுங்க.

சாக்கடைக்குள்ள அப்படி என்ன இருக்கு? ஏன் அடிக்கடி உள்ள எட்டிப்பார்க்கிறானுங்க. ஏதோ வித்தியாசமாகபட  அருகில் சென்று பார்த்தேன். நிம்மியின் இரண்டு குட்டிகள் உள்ளே விழுந்து கத்திக் கொண்டிருந்தன.
நாலடி ஆழமும், ஒன்றரை அடி அகலமும் கொண்ட வீடுகளின் கழிவுநீர் போகும் சாக்கடை அது.

எங்க காலனி வாட்ச்மேன் வளர்த்த நாய்க்குட்டிங்க தான் இந்த ராமும்,நிம்மியும். எதிர்பாராதவிதமாக அவரது மகன் விபத்தில் இறந்து விட, தன் சொந்த ஊருக்கே திரும்பி சென்று விட்டார். செல்லும் போது என்னைக் கையெடுத்து கும்பிட்டவாறே,இந்த நாய்க்குட்டிகளுக்கு மட்டும் சாப்பாடு போட்ருப்பானு சொல்ல, நீங்க சொல்லாட்டியும் நான் சாப்பாடு போட்டு பார்த்துப்பேன், கவலைப்படாமல் போயிட்டு வாங்கனு சொல்லி அனுப்பி வச்சேன்.
அன்றிலிருந்து இவனுங்க ரெண்டு பேரும் என்கிட்ட சாப்பிட்டுகிட்டு இந்த காலனிக்குள்ளேயே சுத்தி வரானுங்க. இதில் நிம்மி பக்கத்தில் புதிதாக கட்டிக் கொண்டிருக்கும் கட்டிடத்திற்குள் குட்டி போட்டிருந்தாள்.மொத்தம் ஆறு குட்டி அத்தனையும் அழகு. என் மகனுக்கு நாய்க்குட்டிகளென்றால் அவ்வளவு பிரியம்.தினமும் அவற்றிற்கு பாலும் ப்ரெட்டும் கொண்டு போய் வைத்துக் கொண்டிருந்தான்.

நிம்மி வெளியில் சென்றிருக்கும் போதெல்லாம் ராமும், எங்கள் குகனும் தான் குட்டிகளுக்கு பாதுகாவல். அப்படியும் ஆறில் மூன்று குட்டிகளை யாரோ எடுத்து சென்று விட்டார்கள். 

குட்டிகளை காணவில்லையென அதன் அம்மாவை விட குகன் தான் பதறிட்டான். சரியாக சாப்பிடல, தூக்கத்தில் கூட அதைப்பற்றியே புலம்பல். இதற்கிடையில் எங்கள் தோட்டத்தில் குடியிருக்கும் வேலையாள், காவலுக்கும் துணைக்கும் ஒரு நாய்குட்டி இருந்தால் நல்லாருக்கும்னு கேட்க.

குகன் அப்பா அந்த மூன்று குட்டிகளில் ஒன்றை தோட்டத்திற்கு தூக்கி சென்று விட்டார். குகனுக்கு தெரிந்து வீட்டில் ஒரே ரகளை.

மூன்று குட்டிகளை நிம்மியால் பாதுகாக்க முடியாது, எப்படியும் யாராவது தூக்கிட்டு போயிடுவாங்க.நம்ம தோட்டத்திலென்றால் நல்லா பார்த்துப்பாங்க, நீயும் அடிக்கடி போய் பார்த்துக் கொள்ளலாம் என்று சமாதானப்படுத்தவும், உடனே தோட்டத்திற்கு போகனும் நாய்க்குட்டியை பார்க்கனும்னு நச்சரிக்க ஆரம்பிச்சுட்டான்.

மறுநாள் காலை அப்பாவோடு தோட்டத்திற்கு கிளம்பிட்டான். குட்டி இவனைப் பார்த்ததும் ஓடி வந்து தொற்றிக் கொண்டு ஒரே விளையாட்டு. 
குகன் கவனமா விளையாடு அப்பா மோட்டார் எடுத்து விட்டு வாரேன்னு சொல்லி கிணத்துப் பக்கம் போக, அந்த நேரம் பார்த்து நாய்க்குட்டியின் கூர்மையான பல் குகனின் விரலில் கிழித்து விட்டது. சிறிது ரத்தம் வேறு எட்டிப்பார்க்க புள்ள பயந்துட்டான், எனக்கு தெரிந்தால் நான் வேறு திட்டுவேன் என்று.

மூன்று மாதமே ஆன குட்டியாக இருந்தாலும் மற்றவர்களின் அனுபவமும், கேள்விப்பட்டவைகளும் பயத்தைக் கொடுத்தன. உடனே அருகிலிருந்த கண்டமனூர் அரசு மருத்துவமனைக்கு போய் ரேபிஸ் தடுப்பூசி போட்டாச்சு. இரண்டு தவணைகள் போட்டாச்சு, இன்னும் இரண்டு தவணை ஊசி போடனும்.
இது நடந்து ஒரு வாரம் தான் ஆகுது. இந்த சம்பவத்துக்கு பின் வெளியில் நாய்களுடன் அதிகம் விளையாடவும், நெருங்கவும் விடுவதில்லை. 
இப்போ இந்த நாய்க்குட்டிங்க சாக்கடையில் விழுந்திருப்பது தெரிஞ்சா உடனே உள்ளே இறங்கிடுவான். 

நல்லவேளை இப்போ தூங்கிட்ருக்கான், அவன் எழுந்திருக்கறதுக்குல்ல எப்டியாவது குட்டிங்களை வெளியே எடுத்திடனும்.
யாராவது வராங்களானு தெருவின் இருபுறமும் பார்த்தேன். பால்காரர் வந்துட்டுருந்தார்.

அண்ணே ரெண்டு நாய்க்குட்டிங்க சாக்கடைக்குள்ள விழுந்திருச்சு, ஆழமா இருக்கறதால எனக்கு எட்டல கொஞ்சம் உதவி பண்ணுங்களேன்.
இரும்மா பாக்கறேன்… 

அவர் குனிஞ்சு அவைகளை தூக்கப் போக ராமும், நிம்மியும் குட்டிங்களை தூக்கிட்டு போயிடுவாருனு அவரைப் பார்த்து உறுமிக்கொண்டு கடிக்க வர…
நான் எவ்வளவு விரட்டியும் ரெண்டும் அவரை குட்டிங்களை தொட விடல.
அவரும் எனக்கு பால் ஊத்த நேரமாகுதும்மா பெரிய நாய் ரெண்டும் தொட விட மாட்டுதுங்கனு சொல்லிட்டு கிளம்பிட்டார்.

தூறல் விழுந்துட்டேயிருந்தது, இவ்ளோ நேரம் நனைஞ்சுட்டே நின்னுட்டிருக்கோம்னு இப்போதான் உரைச்சது. 
ராமும் நிம்மியும் ஒரு இடத்தில் நில்லாமல் அலைஞ்சுட்டே இருந்ததுங்க. ரெண்டும் கைல கிடைச்சா அடி வெளுக்கனும் போல இருந்துச்சு எனக்கு. அமைதியா இருந்திருந்தா இந்நேரம் பால்காரர் குட்டிங்கள எடுத்துக் கொடுத்துட்டு போயிருப்பார்.

இன்னும் பாலைக் காய்ச்சாம இருக்கோம், காலை டிபனுக்கு எதுவும் செய்யாம இருக்கோம்னு நினைவு வர, வீட்டுக்குள் வந்து டீ போட்டு வச்சிட்டு, குட்டிங்க நினைப்போடவே டிபன் ரெடி பண்ணிட்டு, பெட்ரூமுக்குள்ள எட்டிப் பார்த்தேன் இன்னும் குகன் எழல.

இந்த மழைக்கும் குளிருக்கும் காபி குடிக்கனும் போல தோணினாலும், குடிக்க மனசு வரல…
மறுபடியும் வெளில வந்து சாக்கடைக்குள் எட்டிப்பார்த்தால் குட்டிகளை காணோம். நாம வீட்டுக்குள்ள போன நேரம் யாராவது தூக்கிருப்பாங்களா??
யோசிக்கும் போதே, நிம்மியும் ராமும் இந்த சிறியசாக்கடை சென்று சேரும் மெயின் ரோட்டில் உள்ள கழிவு நீர்  கால்வாயின் ஓரமாக கிழக்கும் மேற்குமாக எதிரெதிர் திசையில்  குரைத்துக் கொண்டும் எட்டிப்பார்த்துக் கொண்டும் ஓடின.
குட்டிங்க ரெண்டும் சாக்கடை வழியாகவே அந்தப் பக்கம் போயிடுச்சுங்க போல, இந்த சின்ன சாக்கடையில் இருந்து தூக்கறதே கஷ்டமாருந்தது. இனி ரோட்டில் உள்ள பெரிய சாக்கடைக்குள் போயிருந்தா அது  இதை விட ஆழமும் அகலமுமானதாக இருக்குமே. எப்படி தூக்கறது?

பின்னால் சைக்கிள் பெல் சத்தம், திரும்பி பார்த்தா குகனோட ப்ரண்ட் ஹரி.
மழை சற்று வெறித்திருந்தது, அதனால் தான் வெளில வந்திருக்கான். மழை மட்டும் இல்லேனா காலை ஆறு மணிக்கெல்லாம் காலனியில் உள்ள மொத்த வாண்டுகளும் வீட்டினருகே உள்ள மைதானத்தில் ஒன்னு கூடிடுங்க.
அந்த சத்தத்திலேயே குகனும் எழுந்து விடுவான். அவன் எழவில்லையென்றாலும் காலிங் பெல் அடிச்சு, சைக்கிள் பெல் அடிச்சுனு எழுப்பி விட்ருங்க.
இப்போ இவன் சைக்கிள் பெல் சத்தத்துல குகன் எழுந்திருப்பானே. அவன் எழறதுக்குள்ள குட்டிங்கள தூக்கனும்னு நினைச்சோமேனு எனக்கு ஒரே பதட்டம்.
ஆன்ட்டி அங்க என்ன பார்த்துட்ருக்கீங்க, குகன் எழுந்துட்டானா… கேட்டுக் கொண்டே இன்னும் ரெண்டுமுறை பெல் அடித்தான். இது குகனுக்கான சிக்னல்.
இருடா பெல் அடிக்காத, இங்க வா…நிம்மியோட குட்டிங்க ரெண்டும் சாக்கடைக்குள்ள விழுந்துடுச்சுங்க, இப்போ காணோம்.
அதற்குள் சைக்கிள் பெல் சத்தத்தில் எழுந்த குகன் வெளில வந்துட்டான்.
என்னை ஏன்மா எழுப்பல, முதல்லயே என்கிட்ட சொல்லிருந்தா உள்ள இறங்கி கூட சுலபமா எடுத்திருக்கலாம். இப்போ பாரு பெரிய சாக்கடையில போய் மாட்டிக்கிச்சு…

ராமும், நிம்மியும் எங்களைப் பார்த்து குரைத்து கூப்பிட, மூவரும் அந்த இடத்தில் சென்று பார்த்தோம்.
நாங்கள் இருக்கும் ஏரியாவின் மொத்த கழிவு நீரும், பாதாள சாக்கடை இணைப்பில் சென்று சேரும் இடம். அதில் இரும்புக் கம்பியால் வலை போல பதித்திருந்தார்கள். அதன் ஓரத்தில் இருந்த சிறிய இடைவெளியில் ரெண்டு குட்டிகளின் முகமும் தெரிந்தன. கீச் கீச்சென்று மெல்லிய சத்தம் வேறு வரவும் தான் உயிரோட இருக்குதுங்கனு நிம்மதி வந்தது.

குகனுக்கு கண்ணெல்லாம் கலங்கிடுச்சு, அந்தத் தண்ணிக்குள்ளயே இருந்தா மூச்சுத் திணறும்லம்மா, குளிரும்லம்மானு புலம்பிட்டேயிருக்கான். 
அந்தக் கம்பி வலைய வளைச்சு தான் குட்டிங்கள வெளில தூக்க முடியும். அது நம்மால முடியாது. யாரையாவது கூப்பிடலாம், இல்ல தீயணைப்பு நிலையத்துக்கு சொல்வோம். அவங்க வந்தா உடனே எடுத்துக்கொடுத்துடுவாங்க.

அதெல்லாம் வேண்டாம்மா நாங்களே எடுத்திடுவோம். நீ மட்டும் எதுவும் சொல்லாம பேசாம இரு…
வீட்டுக்குள்ள ஓடிப்போய் ரெண்டு க்ளவுஸ் எடுத்துட்டு வந்தான். 
குகன், இந்தாடா ஹரி நீ ஒன்னு கைல மாட்டிக்க, சாக்கடையின் ஆளுக்கொரு கரைப்பக்கமாக தரையோடு படுத்துக் கொண்டானுங்க. ரெண்டு பேரும் கைக்கும் அந்த கம்பி வலை எட்டியது.


ஒரே நேரத்தில் ரெண்டு பேரும் அதைப்பிடித்து இழுக்க, ஓரத்தில் இருந்த இடைவெளி சற்று அதிகமாக, அந்த இடைவெளியில் ரெண்டு குட்டிங்களும் வெளியே வந்துடுச்சுங்க. இப்போ சாக்கடைக் குள்ளிருந்து மேலே தூக்கனுமே. 
வீட்டுக்குள் ஓடிப்போய் ஒரு டவல் எடுத்து வந்தேன். கைக்கு எட்டினா இந்த டவல் வச்சு தூக்கிடுங்கடா.தூக்கும் போது அதோட பல் பட்றாம பார்த்து தூக்குப்பா, இப்போதா ஊசி போட்டுட்ருக்கோம்.

குகன், அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்மா பயப்படாத.
முன்பு போலவே தரையோடு படுத்து தூக்க முயற்சி பண்ணியும் கைக்கு எட்டல. 
இப்போவே மணி 10 ஆயிடுச்சு. ரெண்டு பேரும் வந்து ஆளுக்கொரு டம்ளர் பால் குடிச்சுட்டு வந்து அப்றம் பாருங்க.
அம்மா எங்களுக்கு மாதிரியே அதுங்களுக்கும் பசிக்கும்ல, குட்டிங்கள மேல தூக்கிட்டு, அதுங்களுக்கு சாப்பாடுபோட்டுட்டு தான் நான் சாப்டுவேன். இல்லேனா எனக்கு குற்றவுணர்வா இருக்கும்.

என்னது குற்றவுணர்வா??  அடேய் உன் வயசுல எனக்கிந்த வார்த்தைக்கு அர்த்தம் கூட தெரியாது. நீ இப்போவே இதெல்லாம் பேசற.
இப்போ குட்டிங்க இருந்த இடத்திலிருந்து 30 அடி தூரத்தில் ஒரு வீடு கட்டிட்ருந்தாங்க. அந்த இடத்திலிருந்த சாக்கடையில் உடைந்த செங்கல், மண் என விழுந்து கொஞ்சம் மேடாக இருந்தது. 

குகன் குட்டிகளை ச்சூ ச்சூ என கையில் பிஸ்கட் வைத்து அழைத்துக்கொண்டே சாக்கடை வழியாகவே அந்த மேடான இடத்திற்கு கூட்டி வந்தான்.
நமக்கு இந்த ஐடியா தோணவே இல்லியா!!இந்தப் பயலுக்கு எம்புட்டு அறிவுனு மனசுக்குள்ளேயே மெச்சிக்கிட்டேன்.

நிம்மி அந்த இடத்தில் வந்து நின்று குரைக்கவும், சாக்கடைக்குள்ளிருந்த மண்மேட்டில் குட்டிங்க ஏறவும், குகனுக்கு இப்போ கைக்கு எட்டியது. உடனே ஒவ்வொரு குட்டியாக டவலை வைத்து தூக்கி மேலே விட்டான்.
உடனே ரெண்டும் தன் அம்மாவிடம் ஓடிப்போய் கொஞ்சியது. நிம்மி தன் நாவால் குட்டிகளை சுத்தம் செய்யத்துவங்க, குட்டிங்க அதன் வயிற்றில் முட்டி பால் குடிக்க தொடங்கின.

சிறிது நேரம் அவற்றையே பார்த்துக் கொண்டிருந்த குகன், திரும்பி என்னைப்பார்த்தான்.
என்ன தங்கம்…
அம்மா பசிக்குதும்மா
வெறித்திருந்த மழை மீண்டும் தூற ஆரம்பித்தது.

அம்முராகவ்
அம்முராகவ்
எனது பெயர் அம்முராகவ் குடும்பத் தலைவி,புத்தக விமர்சகர், கட்டுரையாளர், பகுதிநேர நிருபர்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -