அமைதிப் பெருங்கடல்

கவிதைகள்

- Advertisement -

அமைதிப்  பெருங்கடல்

இமைகள் நனையும் முன்னே
இதயம் உதிரந்து விட்டது.

துயரம் சுமந்த நிலவு
கரைந்து…
மேகங்களுக்குள்..
கலந்து போனது.

நெடுந் தவம் இயற்றும்
அடிவானம்
சிவந்திருக்க…
கண் விழிப்பின் இழப்பு
முடிந்து போனது.

வழிப்பயணக் கனவுகள் முறிய
அழுகுரல்கள்
எழுகின்ற நாளில்
பயம்
வெறித்தோடுகிறது.

குருதி கொப்பளிக்கும்
உயிர்த்தெழல்
அலைக்கழிக்கப்பட்டாலும்
நிராசையின் ஓலம்
கிளர்ந்தெழவில்லை.

உறைய வைக்கும்
துருவத்தின் குளிரால்
ஊற்றெடுக்கும் ஈரம்
உலர
பழங்கால வெயில்
நீளுகிறது.

சிதைவான நினைவுகளை
துயிலிழந்து
அவதியுற்று
அசை போட்டபடி..
நெடு மூச்செறிந்த காலம்
இனியும் தொடராது.

தொலைந்தவைகளை
மறந்து விட்டு
உயிர்ப்பை நிலைப்படுத்த…
பாடாய் படுத்திய சினத்தை
தவிர்க்க….
சாந்தம் நிறைகிறது.

புதிதாய் ஜனிக்கும்
எஞ்சியுள்ளவைகளால்
மனதிலே கசப்பு மீறியே…
நம்பிக்கைகள்
பிறப்பெடுக்கிறது.

??????????????????????????

யுகம்  புரளும்

சேவலை சாகடித்து விட்டால்
சூரியன் சிறையாகிடுமா…?
சுட்டெரித்து விட்டால்
சுதந்திரம் தான் சாம்பலாகிடுமா…?

விதை புதைவதென்னவோ
விருட்சமாய் பூப்பதற்கே..!
காய்கின்ற மலர்களென்னவோ
கனிகளாய் குலுங்கிடுமே..!

குயிலே..
உன் குரல் வளை
நெறிக்கப்பட்டிருக்கலாம்…
உன் குரல்
இன்னும்
உலாவுகிறது.

கண்களிலிருந்து
நீ
மறைக்கப்பட்டிருக்கலாம்…
உன் கீதங்கள்
உன் தேசத்தின்
இருதயங்களைத்
தட்டி எழுப்புகிறது.

முகத்தில் சந்தோஷம்
மறையாமல்
நீ
சுடரணைந்து போனாய்.

உனது வாழ்க்கை
ஒடுக்கப்பட்டவர்க்கு
உத்வேகத்தை அளிக்கும்.

உனது தியாகம்
உன் தேசத்து
உயிர்களுக்கு
வேதம்.

– கவிஞர் வசந்ததீபன்

வசந்ததீபன்
வசந்ததீபன்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்தவர். தற்சமயம் சென்னை கூடுவாஞ்சேரியில் இருக்கிறார். ஹிந்தியில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார். மணிப்பூரில் நாகா மலைவாழ் மக்கள் பள்ளியில் ஏழு வருடங்கள் வேலை பார்த்தார். நீண்ட காலங்களாக கவிதைகள் , கதைகள் எழுதி வருகிறார். 2021ல் "கண்ணீர் படராத ஓர் அங்குல மண்" எனும் கவிதைத் தொகுப்பு வெளியாகியுள்ளது. அன்பைத் தேடிக் கண்டடைவதே படைப்பாக்கமாக நம்புகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -