அந்நியன்

நூலாசிரியர் : ஆல்பெர் காம்யு

- Advertisement -

அந்நியன் – ஆல்பெர் காம்யு
தமிழில் – வெ. ஸ்ரீராம்
வெளியீடு – க்ரியா

ஆல்பெர் காம்யு 1913ஆம் ஆண்டு, அல்ஜீரியாவில் பிறந்தார். தந்தை பிரெஞ்சுக்காரர்; தாயார் ஸ்பெயின் தேசத்தவர். சிறு வயதிலேயே தந்தையை இழந்த இவர், பிரெஞ்சுக் காலனியான அல்ஜீரியாவில் தத்துவம் படித்துப் பட்டம் பெற்றார். காசநோய் காரணமாக மேல்படிப்பு படிக்க முடியாமல், நாடகத் துறை, பத்திரிக்கைத் துறையில் ஈடுபட்டார். ‘அந்நியன்’ (1942)இவரது முதல் நாவல். இது தவிர ‘ப்ளேக்’, ‘வீழ்ச்சி’ என்ற நாவல்களும், ‘காலிகுலா’ முதலிய நாடகங்களும், ‘சிசிபஸ் என்ற தொன்மம்’, ‘கிளர்ச்சியாளன்’ ஆகிய தத்துவக் கட்டுரைகளும் இவருடைய முக்கியமான படைப்புகள். ‘இன்றைய மனிதனின் மனசாட்சி குறித்த பிரச்சனைகளைத் தெளிவான நேர்மையுடன் விளக்கியிருக்கும் இவரது இலக்கியப் படைப்புகளுக்காக’ இவருக்கு 1957ஆம் ஆண்டு நோபல் பரிசு அளிக்கப்பட்டது. 1960ஆம் ஆண்டு ஒரு கார் விபத்தில் காம்யு இறந்தார்.

வெளிவந்து இத்தனை ஆண்டுகள் கழிந்தும் இலக்கிய வாசகர்களால் சிலாகிக்கப்படும் நாவல் அந்நியன். காம்யுவின் கவிதை வரிகள் ஏற்படுத்திய தாக்கத்தால் அவரது பிற படைப்புகளைப் படிக்க வேண்டும் என்கிற ஆவல் முன்பே ஏற்பட்டிருந்தாலும் இந்நாவலை இப்போது தான் படிக்க முடிந்தது. ஆரம்பத்தில் மிகச் சாதரணமாக நகரும் கதை, மெர்சோவின் மன ஆழத்திற்குள் செல்கையில் விநோதமான பயணமாக அமைந்துவிடுகிறது.

“இன்று அம்மா இறந்துவிட்டாள். ஒருவேளை நேற்றாகவும் இருந்திருக்கலாம்; எனக்குத் தெரியாது. முதியோர் இல்லத்திலிருந்து எனக்கு ஒரு தந்தி வந்திருந்தது.“ தாயார் மரணம். நாளை அடக்கம். ஆழ்ந்த அனுதாபங்கள்.” இதற்கு ஒன்றும் அர்த்தமில்லை. ஒருவேளை நேற்றாகவும் இருந்திருக்கலாம்.”
என்ற தொடக்க வரிகளிலேயே மெர்சோவின் விசித்திரமான மன உலகில் நாம் சஞ்சரிக்கத் தொடங்கி விடுகிறோம். அதனைத் தொடர்ந்து அவன் பேசும் ஒவ்வொரு வரியிலும் இவன் யார்? எப்படிப்பட்டவன்? மனம் பிறழ்ந்தவனா? போன்ற கேள்விகள் நம்மை ஆக்கிரமிக்கின்றன. படிக்கப் படிக்க மெர்சோவினுடைய மனசாட்சியின் குரலில் தெரியும் அப்பட்டமான நேர்மை நம்மை அலைக்கழிக்கிறது. முதல் பாகத்தின் இறுதியில், நமக்கு ஒருவாறு மெர்சோ வின் மனநிலை பிடிபடும்போது அவன் ஒரு கொலைக் குற்றவாளியாகிவிடுகிறான்.

இரண்டாம் பாகத்தில் மெர்சோ செய்த கொலை பற்றிய விசாரணை நடக்கிறது. முதல் பாதியில் நம்மைச் சுற்றலில் விட்ட பல விஷயங்கள் இங்கே முக்கியத்துவம் பெறுகின்றன. அம்மாவின் சாவுக்கு அழாதது, அவரின் வயதைத் தெரிந்து வைக்காதிருந்தது, அவரின் சடலத்திற்கு அருகே அமர்ந்து காபி அருந்தியது, அடுத்த நாளே காதலியுடன் ஊர் சுற்றியது இவை மட்டுமன்றி, அவன் கொலை செய்கையில் முதல் குண்டிற்கும் இரண்டாம் குண்டிற்கும் எடுத்துக் கொண்ட இடைவேளை என அனைத்து விஷயங்களும் அவனுக்கு எதிராக வழக்கின் பிடியை இறுக்குகின்றன.

சிறிய நாவல் தான். ஆனால் மிக மிக ஆழமான உள்ளர்த்தங்களைத் தன்னுள் கொண்டுள்ளது. ஒவ்வொரு வாசிப்பின் போதும் அதன் ஆழம் கூடிக் கொண்டே செல்கிறது. முதல் வாசிப்பில் தவற விடும் பல விஷயங்கள் மறுவாசிப்பில் புதிய கோணங்களுக்கு வழிவகுக்கின்றன. வெளியாகி இத்தனை ஆண்டுகள் கழித்தும் உலகின் சிறந்த நாவல்கள் வரிசையில் இன்றும் இடம் பெறுகின்றது இந்நாவல்.
பிரெஞ்சிலிருந்து நேரடியாக மொழிபெயர்த்திருக்கும் வெ.ஸ்ரீராம் அவர்களின் பணி பாராட்டுதலுக்குரியது. ஆங்கில மொழிபெயர்ப்பை விடவும் தமிழ் மொழிபெயர்ப்பு மூலத்தின் அருகில் கொண்டு செல்வதாக வாசித்த சிலர் குறிப்பிடுகின்றனர். மனவோட்டத்தின் வழியே நகரும் ஒரு நாவலை இத்தனை எளிமையாகத் தருவது கடினமான காரியம்.

வாழ்க்கையை எதிர்கொள்ளும் விதத்தில், அதன் அபத்தங்களைப் புறந்தள்ளுவதாக அமைந்திருக்கும் மெர்சோவின் நடவடிக்கைகள் நமக்கு அந்நியத் தன்மையை ஏற்படுதினாலும் நாவல் முடிகையில் அவன் உண்மையில் அந்நியன் தானா அல்லது நமது முகமூடிகளுக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் அசலான மனிதனா? என்ற கேள்வியை இந்நாவல் எழுப்புகிறது.

இந்துமதி மனோகரன்
இந்துமதி மனோகரன்https://minkirukkal.com/author/indumathi/
சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள் படிப்பதிலும் எழுதுவதிலும் பேரார்வம் உடையவர். இவர் எழுதிய பல சிறுகதைகள் கல்கி, கணையாழி, வாரமலர், தமிழ்முரசு, மக்கள் மனம் போன்ற பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -