கண்ணீர் பிரதேசம்
கதவுகள் என ஒன்றுமில்லை
தாராளமாக உள்ளே வரலாம்.
எனது அழுகை
உனது விசும்பல்
எனது கேவல்
உனது கண்ணீர்
என எதையுமே
பொருட்படுத்தாத ஒரு பெருத்த
பரபரப்பின் நடுவே
நாமிருவரும் சந்தித்துக் கொள்ளலாம்.
நான் எனது பிரவேசத்தையும்
நீ உனது மரணத்தையும்
பரிமாறிக் கொள்ளலாம்.
நீ உள்ளே வரும் தருணம்
நான் பிறந்திருக்ககூடும்.
நீ உள்ளே வரும் தருணம்
குறைந்தபட்சம் யாரையும் பொருட்படுத்தாத
ஒரு கூட்டம் வேகமாய் நகர்ந்தபடியே இருப்பதை
நீ காணக்கூடும்.
எங்குத் தேடியும்
நான் கிடைக்கவில்லையெனில்
எனைத் தவறாக நினைத்துவிடாதே.
நான் அநேகமாக இன்னும் பிறந்திருக்க வாய்ப்பில்லை
அல்லது
இன்னும் எனது பிரவேசம்
அனுமதிக்கப்படாமல் இருக்கக்கூடும்.
பதற்றமடையாமல்
அங்கிருக்கும் ஒரு மலாய் சகோதரரின்
கடையில் அமர்ந்து
ஒரு சூடான தேநீர் குடித்துக் கொண்டிரு.
அது உனக்கான நகரமல்ல
என மெல்ல உணர்ந்து
நீயே விடுபட்டுச் செல்வாய்.
ஆகவே
நீ இப்பொழுதுவரை
உள்ளே வர எல்லாத் தகுதிகளுடனும்
ஒரு சினுங்கள்
பேரிரைச்சலாக மாறிவிடத்
தயாராகிவிட்டிருக்கிறது.
-கே.பாலமுருகன்