நீரில் பிரதிபலிக்கும் வானம்
முகம் பார்க்க கண்ணாடியைப் பார்க்கிறான்
அதனுள் அரக்கன் ஒருவன் கொக்கரிக்கிறான்
என்ன ஆச்சர்யம் இவன் முகம் அவனுக்கு இருக்கிறது
பெயரற்ற பறவை அவனிலிருந்து
சிறகைக் கோதியபடி
கைகளில் விளக்கு
கண்களில் சுடர்
அவளைக் கண்டு இருள் வெறித்தோடுகிறது
துண்டிக்கப்பட்ட ஆப்பிள் பழத்தினுள் என் இதயம்
வெட்டிய கத்தி அமைதியாய் இருக்கிறது
கூடையிலுள்ள மற்ற பழங்கள் நடுங்குகின்றன
அந்தி நேரம்
குட்டிபாப்பா தன் குட்டிநாய் தோழனோடு பேசுகிறாள்
பட்டாம்பூச்சி ஒன்று கேட்டு ரசித்தபடி சுற்றி வருகிறது
மண்அகல் ஏற்றுகிறேன்
மன இருள் அகல்கிறது
மண் வான் வெளியெங்கும் ஒளிவெள்ளம்…ஒளிவெள்ளம்
பூமரக்கிளையில் இரு வெண் புறாக்கள்
ஒன்று தலையை கோதிட மற்றொன்று கவிழ்ந்து அதன் தாடையை நீவுகிறது
பூக்கள் புறாக்களின் மீது சொரிகின்றன
குளக்கரையில் இரண்டு நாற்காலிகள்
யாரும் இல்லை
காற்று உட்கார்ந்து அழகு பார்க்கிறது
பாரதியின் பல வரிகள் பாராட்டுக்குரியவை
பாரதியின் முகவரி வெறுப்புக்குரியது
பாரதியின் பட்டினிப்போர் பரிதாபத்திற்குரியது.
??????????????????????????
ஈரம் படரும் பூமி
உதடுகளை விரிக்கிறாய்
தேநீர் கோப்பையை ஏந்துகிறாய்
சுவை ஆறுவதற்குள் அருந்தி விடு.
நீ பரிசளித்த பூவை எங்கு வைப்பேன்
இதயம் கனன்று கொண்டிருக்கிறது
இப்போதைக்கு என் உதடுகளில் இருக்கட்டும்
கருணை ததும்பும் ஈர மனசுகளால் தான் கவிதையின் உள்ளார்ந்த உணர்வு இழைகளை
ஸ்பரிசிக்க இயலும்.
பசித்த பூனை
தனித்த குருவி
வேட்டை முடிந்து போனது.
மழையோடு நடக்கிறேன்
மழை என்னோடு நடக்கிறது
யாரும் யாரோடும் பேசவில்லை
குளத்தில் இறங்கினாள்
குளம் ஆரத்தழுவியது
குளத்தில் தேவமலர் ஒன்று பூத்தது
மீன்கள் திகைத்தன
குளம் குதூகலித்தது
மீனானாள் அவள்
வெங்காயம் உரிக்கிறார்கள் விஞ்ஞானிகள்
மாவு பிசைகிறார்கள் மேதைகள்
தினம் புரோட்டா தின்று உறங்கிப் போகிறார்கள் ஜனங்கள்.
மதுப்புட்டிகள் என்னிடம் இல்லை
கஞ்சாத்தூள் அடைத்த சிகரெட்கள் நிரம்பிய பாக்கெட் இல்லை
நேசம் நிறைந்த கொடுமை கண்டு கொந்தளிக்கும் இதயம் மட்டும் உண்டு.
??????????????????????????
கனிந்து கொண்டிருக்கும் கனவுகள்
அந்த தோட்டத்திற்கு
வந்திருந்தன சில பறவைகள்.
பழங்களை புறமொதுக்கியபடி
இலை மொழியில் உரையாடின.
மழை பொழியும் அந்திகளில்
புராதன காலத்தின்
ஒளி மிக்க பொழுதுகளை
உள்ளார்ந்து பகிர்ந்தன.
மூடுபனி உலாவிடும்
மரங்களின் உச்சிகளில்
மெளனத்தின்
மென் கனவுகளைப் பாடின.
தூரத்து மலைகளுக்கு அப்பால்
வானவில்…!
வண்ணங்களை நெய்து கொண்டிருக்கிறது…
அந்தப் பறவைகளின் கூடுகளுக்காக.
சிறப்பான கவிதைகள்
வாழ்த்துகள் சார்