இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்
இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்
நான்தான் காலம் பேசுகிறேன். ஒளி அதிகாரத்தில் கடந்த இரண்டு பகுதிகளாக ஒளியின் பல்வேறு தன்மைகளையும் ஒளியை நீங்கள் உணர்ந்து கொள்ளும் விதத்தைப் பற்றியும் கூறியுள்ளேன். ஒளியில் இருந்து உண்டாகும் வண்ணங்களின் குணங்களை இன்று கூறப்போகிறேன். வண்ணங்களின் குணங்களால் அதன் செயல்பாடு கூட பல்வேறு விதத்தில் மாற்றமடைகிறது. அவை எப்படி என்று பார்ப்போமா?
வண்ணங்களின் குணங்கள்
ஒளியின் சக்தி அனைத்தையும் தன்னுள் இழுத்துக் கொண்டால் கருமை நிறம் உண்டாகும் என்றும் அவை அனைத்தையும் பிரதிபலித்து விட்டால் வெள்ளை நிறம் உண்டாகும் என்பதையும் முன்பே கூறியிருந்தேன். அதைப்போலவே உங்களால் பார்க்க முடிந்த ஏழு வண்ணங்களுக்கும் வெவ்வேறு குணங்கள் உள்ளன. இந்த ஏழு வண்ணங்களையும் உங்கள் கண்களில் உள்ள மூன்று விதமான வண்ணத்தை உணரும் செல்களால் பார்க்கிறீர்கள் அல்லவா? அதனால், இந்த மூன்று அடிப்படை வண்ணங்களை கொண்டே நீங்கள் அந்த ஏழு வண்ணங்களையும் உருவாக்கிவிட முடியும். அந்த அடிப்படை வண்ணங்கள் சிவப்பு, பச்சை மற்றும் நீலம் ஆகும். இந்த வண்ணங்களின் குணங்களை நான் இங்கே கூறிவிடுகிறேன். இதன் கலவையால் உண்டாகும் மற்ற எந்த வண்ணங்களின் குணத்தையும் இதனை வைத்தே கண்டுபிடித்து விடலாம்.
நீல நிறம் கருமைக்கு மிக அருகாமையில் உள்ள நிறமாகும். கருமை நிறம் எவ்வாறு எந்த ஒரு சக்தியையும் வெளிவிடாமல் உள்ளேயே வைத்துக் கொள்கிறதோ அதுபோலவே நீல நிறமும் அதிகப்படியான சக்தியை தனக்குள் வைத்துக்கொண்டு சிறிதளவு சக்தியை மட்டும் வெளிவிடுகிறது. குறைந்த அளவு சக்தியை வெளிப்படுத்துவதால் பார்ப்பதற்கு இந்த நிறம் மங்கலாகத் தெரியும். ஆனால் இது தனக்குள்ளேயே அபரிமிதமான சக்தியை தேக்கி வைத்துக் கொண்டிருக்கும். ஒரு சிறிய உதாரணம் கூறிவிடுகிறேன். உங்கள் வீட்டில் இருக்கும் சமையல் எரிவாயு அடுப்பில் வரும் தீச்சுடர் நீல நிறமாக இருக்கும் பொழுது பார்ப்பதற்கு சற்று மங்கலாக தெரியும். ஆனால் அதனை வைத்து ஒரு பாத்திரத்தை சூடு படுத்தினால் மிக விரைவாக சூடாகி விடும். அதேசமயம் சமையல் எரிவாயு மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்தில் இருந்தால் தள்ளி இருந்தும் கூட உங்களால் அந்த தீச்சுடரை எளிதாகப் பார்க்க முடியும். அப்படிப்பட்ட தீச்சுடரில் நீங்கள் பாத்திரத்தை கொதிக்க வைத்தால் தாமதமாக மட்டுமே அது சூடாகும். இதனை நீங்கள் இரண்டு விதத்தில் பார்க்கலாம். ஒரு பொருள் தன்னிடம் உள்ள குறைந்தபட்ச சக்தியை வெளிப்படுத்தும் போது அது நீல நிறமாக தெரிகிறது அல்லது நீல நிறத்துடன் ஒரு பொருள் இருந்தால் அது தனக்குள்ளே சக்தியை அடக்கி வைத்துக் கொள்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். ஒரு மனிதன் சாதாரணமாக இயங்கிக் கொண்டிருக்கும் பொழுது தன் உடலில் உள்ள சக்தியை வெளிப்படுத்தி அனைத்து செயல்களையும் செய்து கொள்கிறான். அந்த இயக்கத்தை மொத்தமாக நிறுத்திவிட்டு சக்தியை உடலுக்கு உள்ளேயே அடக்கி வைத்து பயன்படுத்த முடியாமல் மரணம் அடையும் பொழுது உடல் நீல நிறம் அடைகிறது. மரணம் அடையாமல் பயிற்சியின் மூலமாக உடலுக்குள்ளேயே சக்தியை அடக்கி வைக்க முடிந்தால் கூட இந்த நீல நிறம் வெளிப்பட்டுவிடும். உங்களுடைய சக்திவாய்ந்த கடவுள்களை சில சமயம் நீலநிறத்தில் நீங்கள் உருவகப் படுத்துவதற்கு காரணமும் இதுதான். விஷம் என்பது கட்டுப்படுத்த முடியாத அபரிமித சக்திதான். அதனால்தான் விஷம் கூட பல இடங்களில் நீலநிறத்தில் வெளிப்படுகிறது.
சிவப்பு நிறம் வெண்மைக்கு அடுத்தபடியாக அதிக சக்தியை வெளிப்படுத்தக் கூடியது. அதிக சக்தியை வெளிப்படுத்தி விடுவதால் தனக்குள் எதையும் பெரிதாக வைத்துக் கொள்வதில்லை. ஒரு விறகை எரிக்கும்போது வெளிப்படும் மஞ்சள் முதல் சிவப்பு வரை இருக்கும் நெருப்பானது, பார்ப்பதற்கு ஒளி வெள்ளத்தை பரப்பினாலும் அதன் வெம்மை, நீல நெருப்போடு ஒப்பிடும் பொழுது குறைவானது தான். இந்த சிவப்பு ஒளி மிகவும் அதிக தொலைவில் இருந்தால் கூட பார்க்க முடிவதால் தான் அவசரகால ஊர்திகளில் சிவப்பு விளக்கு பொருத்தப்படுகிறது. உங்களுக்கு எங்கு அதிக கவனம் தேவையோ அந்த இடத்தில் சிவப்பு எச்சரிக்கை வைப்பதற்கு காரணமும் இதுதான். உங்கள் உடலில் ஓடும் ரத்தம் ஏன் சிவப்பாக இருக்கிறது தெரியுமா? ரத்தத்தில் இருக்கும் சிவப்பு நிற செல்கள் உங்களிடம் இருக்கும் ஆக்சிஜனை மொத்தமாக உடலிலுள்ள அனைத்து பாகங்களுக்கும் கொடுத்துவிடும். அவ்வாறு தனக்குள் உள்ளதை மொத்தமாக வெளியே கொடுத்து விடுவதால் அதன் நிறம் சிவப்பாகி விடுகிறது. ரத்தத்தின் சிவப்பு நிறம் குறைந்து விட்டாலே உங்களால் மூச்சுக் காற்றை சரியாக பயன்படுத்த முடியாது. இங்கே உங்களுக்கு ஒரு கேள்வி வரலாம். அதிகப்படியான சக்தியை சிவப்பு நிறத்தால் கொடுக்க முடியும் என்றாலும் வெண்மை நிறத்திற்கு தன்னுடைய அனைத்து சக்தியையும் கொடுத்து விடுகிற சக்தி உள்ளதல்லவா? அப்படியானால் ரத்தம் வெண்மை நிறத்தில் இருந்தால் இன்னும் சிறப்பாக செயல்படும் அல்லவா? இங்கேதான் ஒரு பிரச்சனை உள்ளது. ரத்தம் வெண்மை நிறமாக இருந்தால் அதனால் ஆக்சிஜனை உங்கள் சுவாசக் குழாயிலிருந்து எடுத்துக் கொள்ளக் கூட முடியாது. சிறிது எடுத்துக் கொண்டு முழுவதுமாக கொடுத்து விடுவது தான் சிவப்பின் குணம். எதையுமே எடுத்துக்கொள்ளாமல் இருப்பது தான் வெண்மை குணம். வெண்மை நிற ரத்தம் கொண்ட ஆக்டோபஸ் போன்ற உயிரினங்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. அதன் சிறிய உடலுக்கு கூட வெண்மை நிற ரத்தத்தால் மூன்று இதயம் தேவைப்படுகிறது. மேலும் அதன் சுற்றுச் சூழலில் சிறு மாற்றம் வந்தால் கூட சுவாசிக்க முடியாமல் ஆக்டோபஸ் இறந்துவிடும். இப்போது வண்ணத்துக்கும் குணத்திற்கும் உள்ள நெருங்கிய தொடர்பு புரிகிறதா?
மஞ்சள் ,காவி, ஆரஞ்சு போன்ற வண்ணங்களும் சிவப்பில் இருந்து சிறிய மாறுதல் கொண்ட வண்ணங்கள் ஆகும். இவற்றின் குணங்களும் கிட்டத்தட்ட சிவப்பை போன்றது தான். சமூகத்திலிருந்து மிக சொற்பமான சக்தியை எடுத்துக் கொண்டு அதனை முழுமையாக சமூகத்திற்கே கொடுத்துவிடும் துறவிகள் அதனால்தான் காவி நிற உடை அணிகிறார்கள். இதே குணம் உள்ள மண் கூட மிகுந்த ஆற்றலுடைய நிலமாக உங்களுக்கு விவசாயம் செய்ய பயன்படுகிறது. இந்த மண் தன்னுடைய சக்தி அனைத்தையும் நீரில் தொலைத்துவிட்டு எதுவுமே இல்லாத வெண்மையான ஆற்று மணல் ஆகவும் மாறுகிறது. நீங்கள் அணியும் உடையின் நிறத்தில் கூட பல்வேறு விஷயங்கள் ஒளிந்துள்ளன. உங்களுக்கு அதிகப்படியான சக்தி தேவைப்படும் பொழுது கருப்பு நிற உடை உதவும். இதனால்தான் பல்வேறு ஆன்மிக சாதனைகளில் கடவுளிடம் சக்தியை வேண்டும் பொழுது கருப்பு நிற உடை அணியப்படுகிறது. அதேசமயம் தன்னிடம் உள்ள அனைத்தையும் அர்ப்பணிப்பு உணர்வுடன் வழங்கி விடும் நிலையில் இருப்பவர்கள் வெண்மை நிற உடை அணிகிறார்கள். கோயிலுக்கு வெள்ளை நிற உடை அணிவது முதல் உங்கள் அரசியல்வாதிகள் அணியும் வெள்ளை உடைக்கு இதுதான் அர்த்தம். ஆனால் இந்த நிறங்கள் உங்களுடைய செயலுக்கு உதவுமே தவிர முழுமையாக கட்டுப்படுத்தாது. ஏனென்றால் அந்தந்த நிறங்கள் கொண்ட வேறு ஒரு பொருடளைக் கொண்டு செய்த உடையை நீங்கள் ஒரு அடையாளமாகத்தான் அணிந்து கொள்கிறீர்கள். இந்த அடையாள நிறத்தை வைத்துக் கொண்டு உலகத்தை தவறான வழியில் கொண்டு செல்ல முயலும் பல்வேறு மனிதர்களும் உண்டு.
சிவப்பு, நீலம் ஆகிய வண்ணங்கள் எதிரெதிர் குணங்களை கொண்டது என்று சொல்லிவிட்டேன். அப்படியானால் இவை இரண்டுக்கும் இடையில் சரிவிகித அளவில் சக்தியை எடுத்துக் கொண்டும் கொடுத்துக் கொண்டும் இருக்கக்கூடிய நிறம் உள்ளதா? ஆம். அதுதான் பச்சை நிறம். இப்படிப்பட்ட பொருட்கள் இயற்கையிலேயே பச்சை நிறமாக மாறிவிடும் தன்மையுள்ளது. இதன் சிறந்த எடுத்துக்காட்டு இலைகள் தான். இலையானது சூரியனிலிருந்து சக்தியை எடுத்துக் கொண்டு அதனை அப்படியே கடத்தி ஒரு செடியை வளர்த்து, பூ மற்றும் காய்கனிகளை கொடுக்கக்கூடிய விந்தையின் ரகசியம் அதன் நிறம் தான். மற்ற நிறங்களில் இருக்கும் பூ மற்றும் காய்களால் சூரிய சக்தியை கவர்ந்திழுக்க முடியாது. ஆனால் பச்சை நிறத்தில் இருக்கும் இலைகளால் மட்டும்தான் அது முடியும். நீங்கள் எந்த ஒரு இலையை எடுத்துப் பார்த்தாலும், அதன் மேற்பரப்பில் அதிக பச்சையாகவும் அடியில் குறைந்த அளவு பச்சையாகவும் இருக்கும். ஏனென்றால் இலையின் மேல்ப்பக்கம் மட்டுமே சூரிய ஒளியை எடுத்துக் கொள்ளும் தன்மையுடையது. அவ்வாறு சூரிய ஒளியை எடுத்துக் கொள்ளும் தன்மையை இழந்து தன்னிடம் உள்ள அனைத்தையும் செடிக்கு கொடுக்கும்பொழுது இலை பழுப்பு நிறத்தை அடைகிறது. சூரியனின் சக்தியை உள்வாங்கிக்கொண்டு அப்படியே பூமியில் அதனை கொடுத்துவிடும் வாயுகளுக்கு நீங்கள் வைத்த பெயர் பைங்குடில் வளிகள் (Greenhouse gas). இதனால்தான் பூமி தொடர்ந்து வெப்பமயமாகி கொண்டே போகிறது. பைங்குடில் வளிகள் இல்லாமல் போனால் பூமி தொடர்ந்து வெப்பமயம் ஆகாது.
சுருக்கமாக சொல்லப்போனால் உங்கள் குணம் எத்தகையதோ உங்கள் வண்ணங்களும் அதற்கு ஏற்றார்போல் மாறிக்கொண்டே இருக்கும். உங்கள் கண்களால் பார்க்க முடிந்த வண்ணங்களுக்கு இவ்வளவு குணங்கள் இருக்கும் பொழுது கண்களால் பார்க்க முடியாத பல்வேறு வண்ணங்களுக்கு இன்னும் பலவித குணாதிசயங்கள் உள்ளன. அதனை அடுத்த பகுதியில் கூறுகிறேன் காத்திருங்கள்.
(நான் சுழல்வேன்)
குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.