சூர்யப்பாவை – 25

தொடர் கவிதை

- Advertisement -

பகலிலும் ஒளிரும் திங்களொடு
முகமலர்ந்த புன்னகையுடன்
கனிதலும் கனிதல் நிமித்தமுமாய்க்
கடமையாற்றுகிறது செவ்வாய்.
நெருங்கிச்சுற்றும் அறிவனாய்க்
காதற்கதிர் வெம்மையில்  
ஈர்த்தாளப்படுகின்றது உறவு.

பேருருக்கொண்ட வியாழமாய்த்
திரண்டெழுகின்றது தேவநேயம்.
விடியல்தேடும் வெள்ளியாய்
வேட்கை உடுத்துகிறது ஏக்கம்.
நாணவளையம் சூடிய அடரிருள்
காரியாய்ப் அன்பின் பித்துநிலை
எய்துகிறது களிகாமுறுமனம்.

ஆறுநிலை வெளிப்பாடுகளில்
ஊறிக்கிடக்கும் உயர்காதலை
இறைக்க இறைக்கப் பெருகுகிறது
இன்பப்பெருவெள்ளம்.
ஊற்றுக்கண் தேடிதேடி உள்வரை
ஊடுருவுகின்றது பெருந்தேட்டம்.
இருளென்ன ஒளியென்ன?
மீனாகிவிட்டால் நீச்சலென்பது
இயல்பும் எளிதும் கைகோத்த
குளிர்வாழ்வின் பெருங்கலை.
வானத்துமீன்களுக்கும் நீந்திட
வாய்த்ததுதான் ஒளிர்மின்னுலா.

வானுலாவும் உடுக்கள்யாவும்
புவிக்காதலின் தொன்மங்கள்.
பொங்கியேகிய ஒளிப்படிமங்கள்
நீலவான் உப்பளத்தில் உன்
கதிர்களைப் பாய்ச்சிப் புகுத்தி
காதல் விண்மீன் உப்புகளை
விளைவிக்கும் கதிரோன் நீ.
ஏழாம்நிலையாய் எனையாள
ஞாயிறானவன் நீ சூர்யா…
எரிந்து கொண்டேயிரு – உனக்குள்
உருகிக் கொண்டேயிருக்கிறேன்…!

அ. பிரபா தேவி
அ. பிரபா தேவிhttps://minkirukkal.com/author/prabhadevi/
தன் சீரிய தமிழாலும் கவிதைகளாலும் பலர் மனம் வென்ற கவிஞர். தேர்ந்த படிப்பாளி. நெல்லையைச் சொந்த ஊராகக் கொண்ட இவர் பாடல்கள் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். கதைகள் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -