வெளியீடு – தமிழினி
பக்கங்கள் – 488
விலை – ரூ.490
நேற்று அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட சிந்தனை இன்று காலாவதியாகிவிடும் நிலையில், நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒருவரின் வாழ்க்கை இன்றளவும் பேசுபொருளாக இருந்து வருகிறது. சொல்லப் போனால் இன்றைக்கு அவரைப் பற்றிய ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் அதிக அளவில் நடந்து வருகின்றன. அவர் குறித்து எழுத்தப்பட்ட புத்தகங்கள் புதிதாக எத்தனை வந்தாலும் அவை விற்றுத் தீர்ந்து விடுகின்றன (காந்தியின் பேரனான கோபாலகிருஷ்ண காந்தி தொகுத்துள்ள “Restless as Mercury”, என்கிற காந்தியின் இளமைக்காலம் பற்றிப் பேசும் நூல் சமீபத்தில் வெளியாகியது). இதுவே அந்த ஆளுமையின் பலத்திற்கு சாட்சி.
அதிகம் பேரால் விவாதிக்கப்பட்டாலும் வரலாற்றில் காந்தியைப் போல தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட ஒருவர் இருப்பாரா? என்பது சந்தேகம். அவரைத் ‘தேசப்பிதா’ என்று தூக்கி வைத்துக் கொண்டாடும் அதே வேளையில் அவரைத் ‘துரோகி’ என்று ஒரு சாரார் தூற்றுவதையும் காண்கிறோம். இதில் எது உண்மை? காந்தி என்பவர் யார்? பொருளியல் ஆசைகள் மிகுந்த இந்தக் காலத்தில் அவரது கொள்கைகளுக்கான இடம் என்ன? நாளை நம் குழந்தைகளுக்கு காந்தியை எவ்வாறு அடையாளப்படுத்துவது? இன்றைய தலைமுறையினர் பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தும் இத்தகைய கேள்விகளுக்குப் பதில் காண முயலுகிறார் ஜெயமோகன்.
காந்தி குறித்துத் தனது தளத்தில் வாசகர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஜெயமோகன் எழுதிய பதில்களின் தொகுப்பே இந்தப் புத்தகம். இது காந்தி பற்றிய ஒரு முழுமையான நூல் என்று எண்ணி இப்புத்தகத்தை எடுத்த எனக்கு ஆரம்பத்தில் இது கேள்வி – பதில்களின் தொகுப்பு என்று அறிந்த போது சற்று ஏமாற்றமே. இந்த வடிவத்தில் படிக்கும் போது அவரைப் பற்றிய முழுச் சித்திரம் கிடைப்பெற வாய்ப்பில்லை என்கிற எனது கருத்து இறுதியில் தவிடுபொடியாகி விட்டது. காந்தியை இந்த அளவிற்கு 360 டிகிரி கோணத்தில் அலசும் புத்தகம் தமிழில் வேறு உள்ளதா? என எனக்குத் தெரியவில்லை. இது அவர் பற்றிய முழுத் தொகுப்பு என்று கூற முடியாவிட்டாலும் அவரைப் பற்றிய விரிவான ஒட்டுமொத்த பார்வையை முன்வைக்கிறது. அவரைப் படிக்க எங்கிருந்து துவங்குவது என மலை போல் குவிந்திருக்கும் புத்தகங்கள் முன் நின்று மலைக்கும் எளிய வாசகனுக்கு, நூல் தரும் பார்வை புதுத் தெளிவைத் கொடுக்கிறது.
புத்தகத்தில் ஜெயமோகனே கூறுவது போல இது ஆராய்ச்சியின் வழி எழுதப்பட்டது அல்ல. இந்தப் பதில்களை எழுதுவதன் மூலம் அவரும் காந்தியை மேலும் துலக்கமாக அறியவே முயல்கிறார். ஒவ்வொரு பதிலிலும் அவர் தரும் மிக நீண்ட விளக்கங்கள் அசர வைப்பவை. காந்தி வாழ்ந்த காலகட்டத்தை, அப்போது நிகழ்ந்து கொண்டிருந்த அரசியல் மாற்றங்களை அறிந்து கொள்ளாமல் காந்தியின் செயல்பாடுகளை நாம் புரிந்து கொள்ளவது முடியாத காரியம். காந்தி ஒரு பனியாவாகவே இருந்தார் என்கிற குற்றசாட்டை அணுகுகையில், இந்தியாவின் சாதிய அமைப்பு, சமணம் தோன்றிய விதம், அதன் கொள்கைகள், வணிகர்கள் சமணத்தை ஆதரித்த காரணம், வைஷ்ணவத்தைப் பின்பற்றிய காந்தியின் குடும்பம் சமணர்களாகவும் இருந்தது எனக் காந்தியின் பின் இருந்த ஒரு மாபெரும் பாரம்பரியம் பற்றி எழுதுகிறார். காந்தியை அறிமுகம் செய்யும் அதே வேளையில் அந்த மனிதரை உருவாக்கிய வரலாற்றுக் கூறுகளையும் பின்னணியில் தந்து கொண்டே செல்கிறார். அந்தத் தகவல்கள் இல்லாமல் காந்தியை உள்வாங்குவது கடினம்.
காந்தி என்பவர் திடீரென மண்ணில் முளைத்த அவதாரப் புருஷர் அல்ல. சாதாரண மனிதருக்கு உண்டான அத்தனை பலவீனங்களையும் தன்னகத்தே கொண்டவர். ஆனால் தன் வாழ்நாளில் தனது ஒவ்வொரு பலவீனத்தையும் கடந்து வர நேர்மையாக அவர் எடுத்த முயற்சிகளே அவரை ஒரு மகாத்மாவாக்கியது. அதற்காக அவர் மேற்கொண்டது ஒரு நெடுந்தூரப் பயணம். அந்த நெடிய பயணத்தின் ஒன்றிரண்டு புள்ளிகளை மட்டும் கொண்டு அவரது ஆளுமையை விமர்சிப்பது என்பது யானையைக் கண்டறிய முயன்ற குருடர்கள் கதை போலாகிவிடும்.
காந்தி பற்றி உயர்வான மதிப்பீடுகள் கொண்டவருக்கே கூட, அவரைப் பற்றி அவதூறு பரப்புபவர்களுக்குத் தகுந்த தர்க்கங்களோடு பதில் தரும் திறனோ புரிதலோ இருப்பதில்லை என்பதுதான் நிதர்சனம். காந்திக்கு எதிரான தங்களது நிலைப்பாடுகளை நிறுவிக் கொள்ள அவர்கள் தேடிப் தேடிப் படிப்பதில் பாதியளவு கூட காந்தியின் ஆதரவாளர்கள் பலர் படிப்பதில்லை என்றே தோன்றுகிறது.
எந்தக் கேள்வியோ தேடலோ இன்றி, காந்தி பற்றிய முன்முடிவுகள் கொண்டோருக்கு இன்னும் எத்தனை புத்தகங்கள் எழுதப்பட்டாலும் உதவப் போவதில்லை. அவரைப் பற்றிய புரிதலை சிறிதளவேனும் வளர்த்துக் கொள்ள நினைப்பவர்களுக்கு ‘இன்றைய காந்தி’ ஒரு சிறந்த கையேடு.
-இந்துமதி மனோகரன்
[…] இன்றைய காந்தி –இந்துமதி மனோகரன் […]