அழுக்குக்கண்ணாடி – 5

- Advertisement -

ம் கண்களை மூடினால் தொடர்ச்சியாக ஒன்றன்பின் ஒன்றாக edit செய்யாத திரைப்படம் போல் காட்சிகள் மனதில் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. அவையெல்லாம் எங்கே இருந்து தோன்றுகின்றன ? நாம் இருக்கும் சூழ்நிலையின் பாதிப்பால் உள்ளே காட்சிகள் தோன்றுகிறதா ?

மேலோட்டமாக யோசித்தால் நாம் எத்தகைய சூழ்நிலையில் இருக்கிறோமோ, கண்களை மூடினால் அதற்கேற்ற காட்சிகளே நமக்குத் தெரியும் என்றுதான் தோன்றும். ஆனால் நேர்மாறாக, உள்ளே ஓடும் காட்சிகளே நம் வெளிப்புற வாழ்க்கையையும், சூழ்நிலையையும் பாதிக்கிறது என்று உணர்ந்தால் ஆச்சர்யமாக இருக்கும். அதனால்தான் அமைதியான இடத்தில் இருக்க நேர்ந்தாலும்கூட, மனதிற்குள் போராட்டமாக இருந்தால், ஏதோ ஒரு கவலை குறித்த எண்ண அலைகள் மேலும் மேலும் வந்து நிம்மதியைக் தகர்க்கிறது, நேர்மாறாக கூட்ட நெரிசலில் இருக்க நேர்ந்தால்கூட, மனம் அமைதியாக இருந்தால் ஆனந்தமாகவும் இருக்க முடிகிறது. இந்த முரண்பாட்டிலிருந்தே ஒன்று எளிதாகத் தெரிகிறது, நமது வாழ்க்கை நம் மன உணர்வுகளின் பிரதிபலிப்பே அன்றி வேறில்லை. அதனால்தான் “மனம் போல் வாழ்வு”, “எண்ணம் போல் வாழ்க்கை” என்று சொல்லிவைத்தார்கள்.

வள்ளுவர்கூட மிக எளிமையாக “வெள்ளத்தனையது மலர் நீட்டம் மாந்தர்தம் உள்ளத்தனையது உயர்வு” என்று இரண்டே அடியில் வாழ்வின் இந்த பெரும் ரகசியத்தை சொல்லி வைத்திருக்கிறார். அப்படியானால் உள்ளே ஓடும் காட்சிகளை ஒழுங்குபடுத்தி, தேவையில்லாதவற்றை வெட்டிவிட்டு, மிகத் தேவையானதை மட்டும் வைத்துக்கொள்வது சாத்தியமா? சாத்தியமே. அவ்வாறு எண்ணங்களை எடிட் செய்யும் முறைக்குப் பெயர்தான் தியானம்.

தினமும் நாம் கண்ணாடியின் முன் நிற்கிறோம், நாம் அதில் அழுக்காக தெரிகின்றோம் என்று வைத்துக்கொள்ளுங்கள், நாம் கண்ணாடியையா சுத்தம் செய்வோம்? எவ்வளவுதான் கண்ணாடியை விடாமுயற்சியுடன் துடைத்து சுத்தம் செய்தாலும் அது மீண்டும் மீண்டும் நமது அழுக்கையெல்லாம் இன்னும் துல்லியமாகக்தான் காட்டுமே தவிர அவற்றை நீக்காது. அந்தச் செயல் எவ்வளவு நகைச்சுவையாக இருக்கும். அதே போன்ற நகைச்சுவைதான் நாம் வெளிப்புறமான நமது வாழ்வை மாற்ற முயற்சிப்பதும். வாழ்க்கை வெறும் கண்ணாடிதான் என்பதை ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும். நமது மன உலகை பிரதிபலிக்கும் கண்ணாடிதான் வெளியுலகே தவிர அதற்கு வேறு எந்தச் சக்தியும் கிடையாது. நம் வாழ்க்கையில் மாற்றம் வேண்டுமென்றால் சரி செய்யவேண்டியது மனதைத்தான், மனதை மட்டும்தான். பிம்பத்தை சரி செய்தால் பிரதிபிம்பம் தானே மாறும். அதற்கான எந்த மெனகெடலும்கூட தேவைப்படாது.

கண்ணாடியில் நாம் கைகளை உயர்த்தும்போது, தானே நமது பிரதிபலிப்பும் கைகளை உயர்த்துவதுபோல் மிக எளிமையானது. இந்த அடிப்படை உண்மை தெரியாததால்தான் நாம் எத்தனை முயன்றாலும் ஒரே மாதிரியான பிரச்சனைகளை மீண்டும் மீண்டும் வாழ்க்கையில் சந்திக்கிறோம். அதிலிருந்து தப்பிக்க மீண்டும் மீண்டும் வெளிப்புற வாழ்க்கை என்கிற கண்ணாடியை துடைத்துக்கொண்டே இருக்கிறோம். ஒரு மனிதனிடம் பிரச்சனை ஏற்பட்டால் உடனே அவன் மீது குறைகூறிவிட்டு மற்றொருவருடன் நட்பு பாராட்டுகிறோம். ஒரு வேலையில் பிரச்சனை ஏற்பட்டால், அதைக் குறைகூறிவிட்டு வேறு வேலைக்குச் செல்கிறோம். ஆனால் பிரச்சனையின் ஆணிவேரான அதே மனதோடுதான் அங்கும் செல்கிறோமென்பதால், அட்டகாசமான ஆரம்பத்திற்குப் பிறகு அந்த புதிய மனிதரும் விரோதியாகிறான், புதிய வேலையும் சலிப்புத் தட்டுகிறது. மீண்டும் கண்ணாடியை அழுந்தத் துடைக்கிறோம்.

கண்ணாடி இருப்பதே நம்மை சரிசெய்துகொள்வதற்குத் தானே… நம் வாழ்வும் அப்படியே. வெளிப்புற வாழ்க்கை என்கிற கண்ணாடியில் தெரியும் நமது பிரதி பிம்பத்தில் உள்ள குறைகளை கவனமாக ஆராய்ந்தால் ஒரு ஆச்சர்யமான உண்மை புரியும், அது எத்தகைய குறையாக இல்லை பிரச்சனையாக இருந்தாலும் சரி அதன் மூல காரணமே பிம்பத்தில் (மனதில்) இருந்துதான் ஆரம்பித்திருக்கும். அதை எவ்வாறு கண்டுகொள்வது…?

-தொடரும்.

ராகவ் மிர்தாத்
ராகவ் மிர்தாத்http://www.rakavmirdath.com
மனித உளவியலையே மாற்றக்கூடிய சக்தி படைத்த சினிமாவில் தானும் ஒரு தவிர்க்க முடியாத பங்காற்ற வேண்டுமென்ற தணியாத கலைத்தாகத்தால் உந்தப்பட்ட படைப்பாளி, இயக்குனர், எழுத்தாளர்.இவரது படைப்புகள் வெகுவிரைவில் வெள்ளித்திரையில் காணக்கிடைக்கும் என்பதில் மகிழ்ச்சி.தேசிய விருது பெற்ற “பாரம்" படத்தின் திரைக்கதை மற்றும் வசனகர்த்தா.இவருடைய “மிருணா” என்கிற குறும்படம் ரீகல்டாக்கீஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -