பெரும்சிரத்தையோடு இருக்கும் உன்விசாரிப்புக்களைக் கடந்துசெல்கையில்
எதிர்படும் கோபத்தை யார்மீது காட்டுவது.
நலம்விசாரிப்பதற்காக இல்லாவிட்டாலும்
வழிகாட்டச்சொல்லி
முகவரி அட்டையோடு
யாராவது வந்துவிடுகின்றனர்.
ஏதேனும் ஒன்று
இங்கு நிகழத்தான் போகிறது
அதற்குள் எதிர்படும் ஒருவருக்கு
தேநீரை வழங்கவேண்டுமெனில்
அழைத்துப்பேசி
அபிப்பிராய்களைப் பெற்றுச்செல்லவேண்டும்
முழுவானத்தையும் அளந்துவிடப் பறந்துசெல்லும் பறவையைப்போல
கடந்துசெல்லும் எல்லோரிடத்திலும்
அன்பின் மொழியில் பேசுவதெப்படி.
எல்லோருக்கும் வாழ்வில் ஒரேகுறைதானா
சத்தம்போட்டு கூடடையச்செல்லும் பறவைகளோடு
உன்னை எண்ணிக்கொண்டே நடக்கிறேன் யமுனா
அந்த தீபம் எரிந்துகொண்டிருக்கும்வரை அவசரப்படப்போவதில்லை.




















