நான்காம் பரிமாணம் – 60

12. விட அதிகாரம் - 5ஆம் பகுதி

- Advertisement -

இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்


நான்தான் காலம் பேசுகிறேன். விட அதிகாரத்தில் இதுவரை நஞ்சின் சாதக பாதகங்கள் அனைத்தையும் பார்த்தாகிவிட்டது. இந்தப் பகுதியில் நஞ்சுக்கும் மனதிற்கும் உள்ள சம்பந்தத்தைக் கூறி அதிகாரத்தை நிறைவு செய்யப் போகிறேன். உங்கள் மனதைப் பற்றி நீங்கள் அறியாத பல விஷயங்களை இந்த பகுதியில் கூறப்போகிறேன். தொடங்கலாமா?

விஷத் தொழிற்சாலை


இயற்கையாக மற்றும் செயற்கையாக உருவாக்கப்படும் விஷங்களை பற்றி தற்பொழுது உங்களுக்கு ஓரளவுக்கு நன்கு புரிந்து இருக்கலாம். இதுவரை நான் கூறிய அனைத்து விஷயங்களுக்கும் ஒரு பொதுவான ஒற்றுமை உள்ளது. இவை அனைத்தையுமே நீங்கள் வெளியில் இருந்து பெற்று உங்கள் உடலில் செலுத்தி கொண்டால் மட்டும்தான் உங்கள் அது உடலை அழிக்கும். ஆனால் இவை எதுவுமே தேவை இல்லாத அளவுக்கு உங்கள் உடலிலேயே விஷத்தை உருவாக்கக்கூடிய ஒரு தொழிற்சாலை உள்ளது என்றால் நம்பமுடிகிறதா? ஆம். அந்தத் தொழிற்சாலைக்கு பெயர்தான் அகச்சுரப்பிகள் (Endocrine system). நான் முன்பொரு அதிகாரத்தில் இந்தச் சுரப்பிகள் உடலுக்கு எவ்வளவு முக்கியமானவை என்று விளக்கி இருப்பேன். அதே சுரப்பிகள் விஷத் தொழிற்சாலைகள் ஆக மாறுகிறது என்பது கூட மிகவும் ஆச்சரியமான ஒரு விஷயம் தான். இந்த சுரப்பிகளை இயக்கும் காரணகர்த்தா யார் தெரியுமா? உங்கள் மனம்தான்! உங்கள் ஒவ்வொரு மனநிலைக்கு ஏற்றவாறு இந்த சுரப்பிகள் தானாகவே சில ரசாயனங்களை சுரந்து ரத்தத்தில் கலந்து விடும். அந்த ரசாயனங்களுக்கு ஏற்றவாறு உங்கள் உடலிலும் மாற்றங்கள் ஏற்படும். 

இங்கே ஒரு எடுத்துக்காட்டை கூறிவிடுகிறேன். மரணம் என்பது உலகில் உள்ள அனைத்து உயிருக்கும் பொதுவான விஷயம் என்று உங்களுக்கு தெரியும். ஆனால் மரணம் ஏற்படும் பொழுது ஒரு உயிர் ஏதாவது வலியை உணருமா அல்லது வேறு ஏதாவது உணர்ச்சி இருக்குமா என்பது இதுவரை உங்கள் அறிவியலுக்கு முழுதும் புலப்படாத அதிசயம். இருந்தாலும் உங்கள் அறிவியல் ஓரளவுக்கு சமீபத்தில் முன்னேறியுள்ளது. அதன்படி, ஒருவர் இறக்கும் தருணத்தில் கார்டிசால் (Cortisol) மற்றும் அட்ரினலின் (Adrenaline) சுரப்பிகள் அதிக அளவில் சுரக்கும் என்று கண்டுபிடித்துள்ளார்கள். அணையும் விளக்கு பிரகாசமாக எரியும் என்று நீங்கள் கூறுகிறீர்கள் அல்லவா? அப்படி இறக்கும் தருவாயில் ஒருவர் முழுவேகத்தில் இயங்குவதற்கு காரணம் இந்த இரண்டு சுரப்பிகள் தான். இந்த ரசாயனங்கள் உங்கள் உடலில் வலு இல்லை என்றால் கூட அதனை வேகமாக இயக்குவதற்கு முற்படும். ஆனால் இப்படி செய்வதால் உடல் சிறிது நேரம் கூட தாக்கு பிடிக்காமல் முழுவதுமாக தளர்ந்துவிடும். மனிதன் தனது இறுதி மூச்சை விடும் பொழுது இயக்கத்தை முழுவதுமாக நிறுத்துவதற்கு இப்படி ஒரு விளையாட்டு உள்ளே நடக்கிறது! ஆனால் இந்த இரண்டு சுரப்பிகளும் மரணத்தின் போது மட்டும்தான் சுரக்க வேண்டும் என்பதில்லை. கோபம், பயம், வெறுப்புணர்வின் உச்சகட்டம், பொறாமை கொள்ளும் சுயநலம்  ஆகிய நிலைகளில் கூட இந்த இரண்டு சுரப்பிகள் சற்று குறைவாக சுரக்கும். அப்படியானால் உயிரைக் கொல்லும் இந்த ரசாயனங்களை உங்கள் எண்ணங்களை மட்டுமே வைத்து உருவாக்கிக்கொண்டு சிறிது சிறிதாக வதைத்துக் கொள்கிறீர்கள் என்று தானே அர்த்தம்? உங்கள் நினைவுகளால் சுரந்து கொள்வது மட்டுமல்லாமல் பல்வேறுவிதமான உடல் வலிக்கு இதே ரசாயனத்தை ஊசியின் மூலமாக மருத்துவரிடம் செலுத்தி கொள்கிறீர்கள் தெரியுமா? இந்த ரசாயனம் உடனடியாக வேலை செய்வது போல் இருந்தால் கூட சிறிது காலத்திலேயே உடலை அழித்துக் கொன்று விடும். 

உங்கள் உடலுக்குள் நினைவுகளாலே நீங்கள் விஷத்தை உருவாக்கிக்கொள்ளும் ஆபத்து இருப்பதால் இதனை தவிர்ப்பது எப்படி என்று மனித குலத்தில் ஒரு பெரும் ஆராய்ச்சியே நடத்தியுள்ளது. இதன் முடிவுகள் மிகவும் எளிமையானவை. கோபம், பயம், வெறுப்பு போன்ற குணங்கள் விஷத்தை உருவாக்கக்கூடிய வல்லமை பெற்றது என்றால் அதற்கு எதிர்மறையான பண்புகள் என்ன செய்கின்றன என்று மனிதன் ஆழமாக ஆராய்ச்சி செய்தான். அன்பு, காதல், பத்தி, இன்பம் ஆகிய நிலையில் மனது இருக்கும்போது ஆக்சிடோசின் (Oxytocin) எனும் ரசாயனம் உடலில் சுரந்தது. இந்த ரசாயனத்தால் உடல் முழுவதுமாக ஒரு அமைதி நிலையை அடைந்து ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ஒரு தாய் குழந்தையை பெற்றெடுக்கும் பொழுது அல்லது தாய்ப்பால் கொடுக்கும் பொழுது கூட இந்த ரசாயனம் தாயின் உடலில் தானாக சுரக்கிறது. பண்டைய மதங்கள் அனைத்திலும் பக்தி எனும் உணர்வுக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது தெரியுமா? உங்களுக்கு மேல் இருக்கும் ஒரு சக்தியிடம் முழுவதுமாக சரண் அடையும் பொழுது உங்கள் மனதில் உள்ள பயம், குழப்பம் அனைத்தும் நீங்கி மனம் முழு அமைதி அடைகிறது. இந்த தருவாயில் ஆக்சிடோசின் உடலில் சுரந்து நீங்கள் ஒரு பேரானந்த நிலையை அடைவீர்கள். அப்படிப்பட்ட நிலையில் மனதின் முழு சக்தியையும் உங்களால் உணர்ந்து கொள்ள முடியும். அந்த வகையில் பார்த்தால் மதங்கள் மட்டுமல்ல, ஒரு அரசியல்வாதியை அல்லது திரைப்பட கதாநாயகனை தன்னுடைய தலைவனாக பாவித்துக் கொண்டு அதனை நிரூபிப்பதற்காக ஏதாவது தியாகம் செய்து கொண்டிருக்கும் தொண்டனின் மனநிலை கூட அதுதான். ஆனால் பண்டைய மதங்கள் அனைத்துமே இந்த ரசாயன மாற்றத்தை ஒரு சிறு முதல்படியாக எடுத்துக்கொண்டு அதன் பின்பாக மனிதகுலத்திற்கு மொத்தமாக பயன்படும் விஷயங்களை படிநிலைகளாக கொண்டுள்ளது. அரசியல்வாதிகள் அல்லது திரைப்பட கதாநாயகர்கள் இடம் கிடைக்கும் ஆனந்தம் முதல் படியிலேயே நின்றுவிடுகிறது. 

சென்ற பகுதியில் சுயநலம் எப்படி வெளியுலகில் விஷத்தை உருவாக்குகிறது என்று கூறியிருந்தேன். இந்தப் பகுதியில் சுயநலம், கோபம் போன்ற அனைத்து குணங்களும் உங்கள் உடலுக்குள்ளும் விஷத்தை உருவாக்குகிறது என்று கூறிவிட்டேன். இப்படி அனைத்து வகைகளிலும் விஷத்தை உருவாக்கக்கூடியது ஒரு சிறிய எண்ணம் என்னும் விதைதான். அதனை ஒரு பெரிய விருட்சமாக வளர விடாமல் அன்பு, பாசம் போன்ற குணங்களை வளர்த்துக் கொண்டீர்களானால் அனைத்து விதமான விடமும் உங்கள் கட்டுக்குள் வந்துவிடும். ஒரே ஒரு முறை முயன்று பாருங்களேன்?

கடந்த ஐந்து பகுதிகளாக விட அதிகாரத்தை பார்த்து வந்த நாம் இத்துடன் இந்த அதிகாரத்தை நிறைவு செய்து புதியதொரு தலைப்பில் அடுத்த பகுதியில் சந்திக்கிறேன். அதுவரை காத்திருங்கள்.

(நான் சுழல்வேன்)

குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.

இளையகருப்பன்
இளையகருப்பன்
தமிழ் மீது பற்றுக்கொண்ட குழந்தை. வரலாறு, அறிவியல் மற்றும் பயணங்கள் மூலமாக உலகை தினமும் கற்றுக்கொள்ள முற்படும் மாணவன். கவிதைகள் மீது காதல் கொண்ட இளைஞன். தொழில்முறையில், கணிப்பொறி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளன், மாலைநேர எழுத்தாளன். மெய்ஞ்ஞானத்தை பகுத்தறிந்து கொள்ளத் துடிப்புள்ள முதியவன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -