சகடக் கவிதைகள் – 32

- Advertisement -

சூத்திரதாரி

திரையின் பின்னே ஏகப்பட்ட பொம்மைகள்
ஒன்றன்பின் ஒன்றாக ஆடிச் செல்ல

ஒவ்வொரு பொம்மையும்
ஒவ்வொரு கதை சொல்ல
ஒன்று போல் ஒன்றில்லை
ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை

கதை சொல்பவனின் கற்பனைக்கேற்ப
கதாப்பாத்திரங்களின் வாழ்வும் வீழ்வும்

கைதட்டல் மேலோங்கும் நேரம்
கர்வம் கொள்ளும் பதுமைகள்

காண்போர் இல்லையெனில்
கவலையோடு கண்ணீர் விடுகின்றன

வெள்ளைத் துணியின் பின்னே
வெளிச்சம் இருக்கும் வரைதானே
வெற்றியோ…! தோல்வியோ…!

என்னதான் முயன்றாலும்
தாண்டிடத்தான் முடியுமோ திரையை?

நிழல் மட்டுமே தெரிந்தாலும்
நிஜமென்றே தோன்றுகிறது
கணக்கிலடங்கா பொம்மைகளை
கயிற்றால் ஆட்டுவிக்கும்
கண்ணுக்குத் தெரியாதவன்
ஒருவனே என்றாலும்
ஒருபோதும் தெரிவதில்லை
நாடகம் முடியும் வரை

சுவாரஸ்யம் கதையைத் தாண்டி
சொல்பவனின் மேல் திரும்ப ஆரம்பிக்க

இத்தனை லாவகமாய்
இயக்கும் கரங்களைக் காண
எழுந்து செல்லத் துணிந்தேன்
எட்டிப் பார்த்தேன் திரையின் பின்னே

என்னிடம் பொம்மைகளைக் கொடுத்துவிட்டு
ஓய்வெடுக்கச் சென்றுவிட்டான்
ஒரு கறுத்த இடையச் சிறுவன்

இந்த கவிதைத் தொகுப்பின் முந்தைய பகுதிகளைப் படிக்க இங்கே சொடுக்கவும்

ராகவ் மிர்தாத்
ராகவ் மிர்தாத்http://www.rakavmirdath.com
மனித உளவியலையே மாற்றக்கூடிய சக்தி படைத்த சினிமாவில் தானும் ஒரு தவிர்க்க முடியாத பங்காற்ற வேண்டுமென்ற தணியாத கலைத்தாகத்தால் உந்தப்பட்ட படைப்பாளி, இயக்குனர், எழுத்தாளர்.இவரது படைப்புகள் வெகுவிரைவில் வெள்ளித்திரையில் காணக்கிடைக்கும் என்பதில் மகிழ்ச்சி.தேசிய விருது பெற்ற “பாரம்" படத்தின் திரைக்கதை மற்றும் வசனகர்த்தா.இவருடைய “மிருணா” என்கிற குறும்படம் ரீகல்டாக்கீஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -