2009 ஆம் ஆண்டு தான் மேற்கொண்ட ஆஸ்திரேலியா பயணம் பற்றிய அனுபவத்தை இந்நூலில் பகிர்ந்துள்ளார் ஜெயமோகன். நிறைய பயணக் கட்டுரைகளை ஜெமோ எழுதியிருந்தாலும் முதன்முறையாக நூல் வடிவம் பெற்றது இதுவே.
” சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா? ” என்கிற எண்ணம் நம் பெரும்பாலானோர் மனத்தில் உண்டு. எந்தப் புதிய நிலப் பரப்பிற்குச் சென்றாலும் அவற்றை நம் நிலத்தோடு பொருத்திப் பார்த்துக் கொண்டே இருப்போம். ஜெயமோகனும் அதனையே செய்கிறார். ஆஸ்திரேலியாவின் ஒவ்வொரு பகுதிக்குச் செல்லும் போது அதன் தன்மையோடு நம் இந்திய மண்ணையும் மக்களையும் பொருத்திப் பார்க்கிறார். இதனால் நமக்கு ஆஸ்திரேலியா பற்றி மட்டுமல்லாது நமது ஊரைப் பற்றியும் பல சுவையான தகவல்களையும் தெரிந்து கொள்ள முடிவது double bonus. ஒவ்வொரு கட்டுரையிலும் இந்த ஒப்புமையை சற்று விலாவரியாகவே முன்வைக்கிறார் ஜெமோ. உதாரணத்திற்கு சிட்னியிலிருந்து மெல்பர்ன் நகரத்திற்கு அவர் மேற்கொண்ட ரயில் பயண அனுபவத்தைக் கூறலாம். அந்த அனுபவத்தைக் குறிப்பிடுகையில் நாகர்கோயிலுக்கு முதல் ரயில் வந்ததிலிருந்து தொடங்குகிறார். மக்கள் வெள்ளம் ரயிலை வேடிக்கை பார்க்கவே இருபுறமும் திரளும். அந்தத் தலைமுறையைச் சேர்ந்தவராக இருப்பதாலேயே ஆஸ்திரேலியாவில் நீண்டதொரு ரயில் பயணம் செய்ய ஆசை கொள்ளுகிறார். ரயில் கட்டணமே விமானத்திற்கும் என்றாலும் ரயிலே போதும் என அந்த நிலத்தை அணுவணுவாய் ரசிக்க ஏதுவாக இருக்கும் என உற்சாகமாக அந்தப் பயணத்தை மேற்கொள்கிறார். ரயிலில் தன்னோடு பயணிக்கும் மக்களை அவர்களின் மனநிலையை விவரிக்கும் அதே வேளையில் இங்கே இந்தியாவில், ஜம்முதாவில் இருந்து டெல்லி வழியாக மதுரை வரும் ஜம்முதாவி எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளையும் நமக்குக் காட்டுகிறார். ” தெரிந்த மொழியை வைத்து தெரியாத மொழியைக் கற்பதைப் போல நாம் அறிந்த நிலமே அறியாத நிலத்தை அடையாளப்படுத்துகிறது. நம் மொழி போல நம் நிலமும் கூடவே வந்து கொண்டிருக்கிறது. ” என்று அவர் சொல்வது எத்தனைப் பொருத்தமாக உள்ளது!
பயணம் என்பது புறவயக் காட்சிகளை மட்டும் உள்ளடக்கியது அல்ல, பலவித மனக் கிளர்ச்சிகளை, எண்ணங்களை, நினைவுகளை எழுப்பக் கூடியது. பயணம் முடிந்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு, தன் நினைவுகளின் துணை கொண்டே இந்நூல் முழுவதையும் எழுதியுள்ளார். ஆனாலும் அங்கே கண்ட காட்சிகள் பற்றி எழுதுகையில், அச்சமயம் எழுந்த தனது அக உணர்வுகளையும் வெகு துல்லியமாகப் பதிவு செய்துள்ளார் ஜெமோ. மெல்பர்னின் உயரமான கட்டிடமான யுரேகா டவருக்கு சென்ற அனுபவத்தை இவ்வாறு பகிர்கிறார், ” அதிவேக மின்தூக்கி வழியாக மேலே ஏறிச் சென்றோம். அங்கே நான்கு பக்கமும் பார்ப்பதற்கான கண்ணாடிச் சாளரங்கள். வெளியே இளவெயில் பரவிய நகரம். அப்பால் யாரா (நதி) உருகி வழியும் ஈயம் போல சென்று வளைந்து கிளைபிரிந்து கடலில் கலக்கும் காட்சி. உயரத்தில் இருந்து பார்க்கும்போது நாம் ஒட்டுமொத்தமாகப் பார்க்கிறோம். நகரங்களை, சமவெளிகளை. அப்போது சிறிய விஷயங்களில் இருந்து மனம் விலகிவிடுகிறது. ஒருவகையான அமைதியும் தியான நிலையும் கைகூடுகிறது”.
முன்னுரையில் ஜெமோ, ” ஒருநாட்டில் வாழ்ந்து உணர்ந்து அதை அறிவதற்கும் ஓரிரு நாட்களில் அங்குசென்று அதை அறிவதற்கும் பெரும் வேறுபாடுண்டு. உண்மையில் அங்கே வாழ்பவர்கள் அறியாத பலவற்றை சிலநாட்கள் வந்துசெல்பவர் அறியமுடியும். காரணம் அவரது பார்வை பழகாமலிருப்பது தான். தேவை தேவையின்மை, நன்று தீது என அது பகுக்கப்படாமாலிருக்கிறது.” எனச் சொல்வதைப் புத்தகத்தின் முடிவில் ஒத்துக் கொள்ள வேண்டியுள்ளது. ஆஸ்திரேலியாவின் வரலாறு, பண்பாடு, கலை, மக்கள் என அனைத்து கூறுகளையும் தொட்டுச் செல்கிறது நூல்.
இந்நூல் ஒரு நாட்டைப் பற்றிய பயண நூலாக மட்டும் அல்லாமல் எந்தவொரு பயணத்தையும் எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பதற்கு ஒரு சிறந்த வழிகாட்டியாகவும் அமைந்துள்ளது. பயணங்களை விரும்புவோருக்கும் அல்லாதோருக்கும் நிச்சயம் பிடிக்கும்.