அருந்த வேண்டிய துளி
கைப்பேசி
எப்போது
பூ பூத்துத் தரும் ?
தினம்
கனவுகளுக்குள்
பசித்துத் துழாவுகிறது
விழிகளும் மனமும்.
குளிரோ..வெயிலோ..
சாத்தானோ..கடவுளோ..
ஏதாவது அல்லது யாராவது
தென்படவேண்டும்
என் வாழ்வை
நீடிக்க வைக்க.
??????????????????????????
நொதிக்கின்ற பிரயாசை
பகல் வடிந்த சாயங்காலம்
அறைக்குள் வரும்
கறுப்புப் பட்டாம்பூச்சியே
என்ன சேதி கொண்டு வந்தாய் ?
ஒன்றும் சொல்லாமல்
இங்கும் அங்கும் திரிகிறாய்?
கடிகாரத்தின் மேலமர்ந்து
முள்களின் பந்தயத்தை ரசிக்கிறாய்.
புத்தக அலமாரியில்
மட்கிய வாசனையை நுகர்ந்து
இறக்கையடித்துப்
படபடக்க்கிறாய்.
குழல் விளக்கின்
ஒளியை ருசிக்க
முட்டி முட்டி
மல்லாடுகிறாய்.
பல்லிகள் கவ்வி விழுங்க
திருடர்களாய்ப்
பதுங்கித் திரிகின்றன.
முகமில்லாதவர்கள் வருகிறார்கள்
தாவிப் பிடித்துப்
பிய்த்தெறிய
மரணப்பதாகைகள் தாங்கி.
??????????????????????????
மிருகத்தின் நகரம்
எருக்கம் செடி போல
வறண்ட நிலத்தில்
பூவற்று நிற்கும்
அந்த மனிதன்
உணர்ச்சியுள்ள இயந்திரமாய்.
உறைந்து போன இதயம்
பீங்கான் துண்டென
அவனுள்
உடையும் பதட்டத்தில்.
இறக்கையடித்து
மறைவதற்கு நொடிகள்
மின்னலாய்
அவசரப்படுகின்றன.
பறவைகளின் பாடல்கள்
ஆழ்ந்த பிரார்த்தனையில்
பிணியையும் வலியையும்
அழித்துக் கொண்டிருக்கின்றன.
மரஞ்செடிகொடிகள்
இந் நகரத்தில்
கண்காட்சிப் பொருள்களாக
காட்சிப்படுத்தப் பட்டிருக்கின்றன.
முனிவர்கள் போலிருந்த
மலைகள்
இகலோகத்தைத் துறந்து
பரலோக அந்நிய நிலங்களில்
சாலைகளாக..அடுக்குமாடிகளாக..
உருவெடுத்திருக்கின்றன.
சூரியன் பழுத்த பழம்..
சந்திரன் தொங்கும் பனிக்கட்டி..
காற்று உலாவும் உருத்தொலைத்த பிசாசு..
தண்ணீர் விரிக்கப்பட்ட
நிறமற்ற சேலை…
வியப்பாய்
வேடிக்கை பார்க்கிறாள்…
முடி வெளுக்காத
மண் எனும் கிழவி
மனப்பாரம் இறக்கிய
பின் வேளையில்.