யமுனா அப்படித்தான்
யாரும் தடுமாறி நிற்கையில்
எதிரே நிற்பாள்
எதுவுமில்லாமல்
அவள் கண்கள் கசிய
நம்மை உருக்குவாள்
உடைகிற மனத்தை
இறுக்கிட
நமது கரத்தை
பற்றிக் கொள்வாள்
கண்ணீரைத் தடுத்து
ஆசுவாசப்படுத்தும்
அவளது விசாரிப்பு
அவளது புன்னகை
நம்மை எழுப்பிவிட்டு
வாஞ்சையாக அரவணைக்கும்
நீ நம்பு எனச் சொல்லும்
பரிகாரமற்ற
வேண்டுதல்கள் இருக்கும்
அவள் மனது கேட்காது
திரும்ப திரும்ப
கபடமற்று விசாரிப்பாள்
சினம் தணிக்க உரையாடிய
எல்லாச் சொற்களிலும்
அன்பைக் கொண்டு முடிப்பாள்
விழிகளுக்குள்
ஊடுருவிச்செல்லும் கருணைப்
பேரன்பு யமுனா.
-பாண்டித்துரை